Friday, June 13, 2014

தீயவை நீங்கி நல்லவை அடைய

தினம் ஒரு ஸ்லோகம் தெரிந்து கொள்வோமா?

இந்த ஸ்லோகங்கள் உங்களுக்குத் தெரிந்தஸ்லோகங்களாகக் கூட இருக்கலாம்.

முதலில் முழு முதற்கடவுள் தும்பிக்கையான் விநாயகனின் ஸ்லோகத்தில் ஆரம்பிப்போமே.இந்த ஸ்லோகத்தை சதுர்த்தி நாட்களில் சொல்லி தொப்பையப்பனின் பேரருளைப் பெறுங்கள்.

***

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய 
லம்போதராய ஹேரம்பாய

நாலிகேரப்ரியாய மோதக பக்‌ஷணாய 
மமாபீஷ்ட பலம் தேஹி

ப்ரதிகூலம்மே நஸ்யது அநுகூலம்மே 
வசமாநய ஸ்வாஹா


அபீஷ்டவரத மணபதி மந்திரம்
(மகா மணபதி மந்த்ரமாலா)


பொருள்:  கணங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவரே, ஒரு தந்தத்தைக் கொண்டவரே, பெருவயிறு படைத்தவரே, ஹேரம்பா என் புகழப் படுப்வரே, தேங்காய், கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருட்களில் மிகவும் பிரியம் உடையவரே!  என்னுடைய எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்து, எனக்கு நேரும் துன்பங்களை அழித்து, நன்மைகளை வசமாக்கும்படி செய்வீர்களாக


Wednesday, June 11, 2014

மகா பெரியவாஇன்று மகா பெரியவாளின் 121வது ஜெயந்தி.
இன்று திருமயிலை பாரதீய வித்யா பவனில் ”மகா பெரியவாளின் மகிமை” என்ற தலைப்பில் திரு பி. சுவாமிநாதன் அவர்கள் மாலை 5.00 மணிக்கு சொற்பொழிவாற்றுகிறார்கள்.  அனைவரும் வந்து கலந்து கொண்டு மகா பெரியவாளின் அருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜய ஜய சங்கர 

ஹர ஹர சங்கர.

வைகாசி விசாகம்இன்று 11.06.2014 புதன் கிழமை வைகாசி விசாகம்.  அழகன் முருகன் அவதரித்த நன்னாள்.


சூரபத்மனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்ட, அவர்களின் துயர் தீர்க்க சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார்.  அந்த ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவானும், அக்னி பகவானும் சிவபெருமானின் உத்தரவுப்படி கங்கையில் கொண்டு சேர்த்தனர்.  கங்காதேவி, அந்தப் பொறிகளை சரவணப் பொய்கையில் சேர்த்தாள்.

ஆறு பொறிகளும், ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாகத் தோன்றின.  பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒரு குழந்தையாக்கி, ஞானப்பால் புகட்டினார்.  இது நடந்தது வைகாசி விசாகத்தன்று.

இந்த நன்னாளில் பன்னிருகை வேலவனை தரிசித்து மகிழுங்கள்.


முருகா சரணம்
*
***
*****
***
**
*மேலும் புத்தர் அவதரித்ததும், போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி விசாகத்தன்றுதானாம்.


அறிமுகம்


நொடிக்கு நொடி நன்றி கூறும் நிலையில் என்னை வைத்திருக்கும் இறைவனை வாழ்த்தி, வணங்கி இந்த வலைப்பூவை தொடங்குகிறேன்.

ஆன்மீக பயணங்கள், ஆன்மீக செய்திகள் தொடர்பாக ஒரு தனி வலைப்பூவைத் தொடங்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.  


சின்ன வயசில் திருமயிலை கபாலீசுவரர் கோவிலே கதி என்று இருந்த எனக்கு இந்த ஆசை வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  ஆமாம் மாலையில் பள்ளி விட்டதும் தினமும் நாங்கள் படையெடுத்தது அங்கே தானே.  விளையாட்டு, ஸ்லோகங்கள் கத்துக்கொண்டது எல்லாமே அங்கே தானே.


அதே போல் சிறு வயதில் திரு பரணீதரன் அவர்களின் ஆன்மீகப் பயணக் கட்டுரைகளை படித்திருக்கிறேன்.  அதுவும் ஆன்மீகப் பயணங்களைப் பற்றி எழுதும் ஆசைக்கு வித்திட்டிருக்க வேண்டும்.


என் பெண் அடிக்கடி என்னை கிண்டல் செய்வாள், “எங்கம்மா கோபுரத்தைப் பார்த்தா ஓடிப் போயிடுவா”ன்னு.  ஆமாம் கோபுர தரிசனமே கோடி புண்ணியம்ன்னா, கோவிலுக்கு உள்ள இருக்கற தெய்வத்தை தரிசித்தா………….


என் கணவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் (இப்ப ரிடையர் ஆகிட்டு ஜாலியா பேத்தியைக் கொஞ்சிண்டிருக்கார்.  லயாக்குட்டிக்கும் முதல்ல தாத்தாதான்.  அப்புறம்தான் பாட்டி கூட) வெளியூர் டூர் போவார்.  ஒரு முறை அப்படி அவர் வெளியூர் சென்றிருந்த போது ஒரு நாள் திடீரென்று நடு இரவில் முழிப்பு வந்தது.  ஏதோ சத்தம் கேட்பது போல் இருக்கிறதே என்று பார்த்தால் என் மகன் தான் ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன என்று கேட்டபோது ”வெளியே ஏதோ சத்தம் கேட்டது, நாய் வேற விடாம குறைக்கிறது” என்றான். 

இதே பையன் அவங்க அப்பா வீட்டில் இருந்தால் கும்பகர்ணனாய் தூங்குவான்.    

அந்த நேரம் நான் நினைத்தேன். “அடடா! இதே தத்துவம்தான்.  நாம் எப்பொழுதும் அந்த இறைவன் நம்முடன் இருப்பதால்தான் (அவன் எப்பொழுதும் நம் அருகில் இருப்பதாய் நம்புவதால்தான்) நிம்மதியான வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று.”


எனவே அந்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாய் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கிறேன்.