Thursday, December 8, 2016

"பைத்தியத்துக்கு மருந்து சொன்ன பெரியவா"



(ப்ராம்மி க்ருதம்,வல்லாரை நெய்யோடு வேப்பங்கொட்டையும்
தேனும்)


வைத்தியம்,மருந்து, மந்திரம் எல்லாம் செய்து பார்த்தாயிற்று.கடுகளவு கூட குணம் தெரியவில்லை.


ஆட்டம்,பாட்டம்,கூச்சல் இல்லாமல் இருந்தாலே போதும் என்று நடு வயதுப் பையனான அந்தப் பைத்தியத்தின் தாயாருக்குத் தோன்றியது.பெரியவாளிடம் அப்பையனை அழைத்து வந்தாள்.பைத்தியத்தின் வாயில் எப்போதும் எச்சில் வழிந்து கொண்டிருந்தது.

பெரியவாள் அந்தப் பையனைப் பார்த்தார்கள்.

பெரியவாள் சொன்னார்கள்;

"நாக்கில் எச்சல் வந்தால் வாணி (சரஸ்வதி) என்று சொல்வார்கள்
.கவலைப்பட வேண்டாம்.

பிராம்மி க்ருதம்னு ஒரு மருந்து..கேள்விப்பட்டிருக்கியோகேரளாவில் கிடைக்கும். வல்லாரை நெய்..ஒரு பாட்டில் வாங்கு. அதை வெச்சுண்டு, லக்ஷம் ஆவ்ருத்தி பஞ்சாக்ஷர
ஜபம் செய்துட்டு, இந்தப் பையனுக்குக் கொடு....

அப்புறம் வேப்பங்கொட்டை தெரியுமோன்னோ?  ரெண்டு மூணு கொட்டையை வெழுமூண நசுக்கி. தேனில் குழைத்து, தினமும் இவன் நாக்கில் தடவிண்டு வா...."

இரண்டு மாதங்கள் கழித்து தாயாரும் பையனும் வந்தார்கள். பையனிடம் சேஷ்டை இல்லை.
மக்குக் கணக்காய், மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தானே, தவிர வேறு தொந்தரவுகள் இல்லை.

"பையன் கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சிருக்கான்"
என்றாள் தாயார், நிம்மதிப் பெருமூச்சுடன்.

பெரியவாள் கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

Thursday, December 1, 2016

பெரியவா சரணம்




""என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே""

காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு நாள் சாயங்காலம் பெரியவா தரிசனம் தந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வயதான தம்பதி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

அந்த மாமாவின் பஞ்சகச்சம், மாமியின்   மடிசார் ரெண்டுமே புது வஸ்த்ரங்களாக இருந்தன. நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்த அவர்களை புன்னகையோடு கடாக்ஷித்தார்.

"என்ன..... எல்லாம் நல்லபடி ஆச்சா?"

"பெரியவா ஆசீர்வாதத்துல எல்லாம் நன்னா நடந்துது....."

அந்த அம்மா, கண்ணில் வழிந்த நீரை கட்டுப்படுத்தமுடியாமல் தவித்தாள்.

"இங்கியே அப்டி ஒக்காந்துக்கோங்கோ.... ரெண்டுபேரும்"

கொஞ்சம் தள்ளி அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அதன் பிறகு பெரியவா இவர்களிடம் எதுவும் பேசவில்லை. கூட்டம் இருந்ததால், மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் பெரியவாளுடைய கைகள் மட்டும், கிறுகிறுவென்று தன்னிச்சையாக ஒரு கார்யத்தை பண்ணிக் கொண்டிருந்தன.

தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் கிறுகிறுவென்று அங்குமிங்கும் பறந்து பறந்து மலர்களில் உள்ள மகரந்த தேனை சேகரிக்கும்.. 

நம்முடைய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளோ, தன்னுடைய கைகளால் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போல பரபரவென்று சுற்றி இருந்த பூக்களை எல்லாம் திரட்டி திரட்டி, அழகான மாலைகளாக தொடுத்துக்கொண்டிருந்தார்! வருவோர் போவோரிடம் பேசுவதற்கும் இதற்கும்  சம்பந்தமேயில்லை என்பதுபோல்   அவர் கரங்கள் அற்புதமான மாலைகளை தொடுத்துக் கொண்டிருந்தன!

ஆஹா! ரெண்டு மாலைகள் தயார்!

யாருக்கு?

"இங்க வாங்கோ.. ரெண்டுபேரும் "

அந்த  வயதான   தம்பதிகளை அழைத்தார்.

"இந்தா..... இந்த ரெண்டு மாலையையும் அவாகிட்ட குடு"

ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த  பாக்கியசாலி தம்பதி   கைக்கு போனது.

"ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."

அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.

அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!

பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்ப்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அநுக்ரஹம்!

ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.

மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரசாதம் தந்து ஆசீர்வதித்தார்.

சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!

"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே?...."

ஆவலை அடக்க முடியாமல் ஒருத்தர், மெதுவாக அந்த அம்மாவிடமே விசாரித்தார்.

"எங்களுக்கு  சொந்த   ஊர் பெங்களூர்..! இன்னிக்கி இவரோட 70-வது பொறந்தநாள். எங்க பிள்ளை மெட்ராஸ்ல இருக்கான். காலேல பிள்ளையாத்ல பீமரதஶாந்தி பண்ணிண்டார். எங்களுக்கு எல்லாமே பெரியவாதான்! பிள்ளேட்ட "பெரியவாள எனக்கு இன்னிக்கி   தரிசனம்   பண்ணணும்-னு ரொம்ப ஆசையா இருக்குடா...."ன்னு சொன்னேன்.

அவனுக்கு நாளைக்கி பெங்களூர்ல ஏதோ  அவசர   வேலை இருக்குன்னுட்டு, "அம்மா....இன்னிக்கி முடியாதும்மா! நிச்சியமா இன்னொரு தரம் பெரியவா  தரிசனத்துக்கு 
 கூட்டிண்டு போறேன்"-ன்னு சொன்னான். வேற என்ன பண்றது? மானஸீகமா பெரியவாளையே நெனச்சிண்டு, எல்லோருமா... ரெண்டு கார்ல பெங்களூர் கெளம்பினோம்.

வேலூர் பைபாஸ் ரோடுல, அவாள்ளாம் வந்துண்டிருந்த காரோட "ஆக்ஸில்" ஒடஞ்சுபோச்சு ! எப்டியும் ரெண்டு மணி நேரமாவது ஆகுன்னுட்டா! ஒடனே நா....."காஞ்சிபுரம் பக்கத்லதான இருக்கு! அப்பாவும் நானும் இன்னொரு கார்ல போய், பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு வரோம்!"-ன்னு சொல்லிட்டு, ஒடனேயே கெளம்பி வந்துட்டோம்..! பெரியவாளோட க்ருபையை தாங்கவே முடியல! எனக்கு இதுக்கு மேல ஒண்ணுமே வேணாம்....."

அந்த அம்மா அடக்கமாட்டாமல், ஆனந்தம் பொங்க அழுதாள்.

பகவான் தன்னிடம் ஆத்மார்த்தமாக பக்தி பூண்டவர்களை எந்த நிலையிலும் தன்னிடம் அழைத்துக் கொள்வான் !

நாம் செய்யவேண்டியது அவனிடம் படாடோபமில்லாத உண்மையான அன்பு வைப்பது மட்டுமே!






Wednesday, November 23, 2016

னைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா ஸ்வாமிகள். எங்கே… மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா?
‘ராமன்‘ என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.
சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.
ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.
‘ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர் களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்…





ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?
வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.
வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். ‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்.
‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.
சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’
ஆஹா… எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?

நன்றி: சக்தி விகடன்

Thursday, November 17, 2016

பெரியவா   சரணம் 



ஒரு   வயோதிக   பக்தர்    பெரியவா    தரிசனத்திற்கு    வந்திருந்தார்.    முகத்தில்  கவலைக் குறி.   தடுமாற்றம். 

"கோர்ட்டில்    கேஸ்    நடக்கிறது..  தீர்ப்பு    சாதகமா    வரணும். "

பெரியவா    கண் கொட்டாமல்    அவரைப்    பார்த்தார்கள்.  -   கொஞ்சம்   உக்ரமாய்.   கைங்கர்யபரர்களுக்கு    வயிற்றைக்   கலக்கியது,.  'காரசாரமாக    என்ன   சொல்லப்    போகிறார்களோ?'    என்ற தவிப்பு. 

" நான்    ஹை - கோர்ட்   ஜட்ஜ்  இல்லை,   உனக்குச்    சாதகமா   ஜட்ஜ்மெண்ட்   எழுதுவதற்கு.   போய்,   வேற   காரியங்களைப்   பார் "  என்று   கோபத்துடன் சொல்லி  விட்டு    உள்ளே   போய் விட்டார்கள்,  பெரியவா. 

சில   நிமிஷங்கள்    சென்றதும்    பெரியவா   வெளியே    வந்தார்.   வயோதிகர்    திக்பிரமை   பிடித்து    நின்று    கொண்டிருந்தார். 

" உன்    பையன்   போய் விட்டான்.   மாட்டுப் பெண்    ரொம்ப   துக்கத்தோடு     இருக்கா.   அவளுக்கும்    அவள்    குழந்தைகளுக்கும்   பணம்    கொடுக்க    மாட்டேன்   என்கிறாய்.   கேஸ்   போட்டு,   விதவையைக்    கோர்ட்டுக்கு  இழுத்துக்    கூண்டில்   நிற்க   வைக்கிறாய்.  இது   என்ன   நியாயம்?   உலகத்தில்    எதுவும்    யாருக்கும்    சொந்தமில்லே.    குந்துமணி    சொத்துக் கூட,    கூட   வராது.   பாப  - புண்ணியம்  தான்   வரும்.. "

மறுபடியும்    உள்ளே    போய் விட்டார்கள் பெரியவா. 






வயோதிகர்    சரசரவென்று    வெளியே   போனார். 

மறுநாளே    வழக்கில்   உடன்பாட்டுக்கு   ஏற்பாடு    செய்து   விட்டார்.   சொத்தில்,   நாட்டுப்   பெண்ணுக்கு    உரிய   பாகத்தைப்   பிரித்துக்    கொடுத்தார். 

பின்னர்   தான்   ஓர்   அதிசயம்   நடந்தது. 

வயோதிகரின்    மனைவி,   மூன்று   மாதங்களுக்குப்    பின்    சிவலோகம்   சென்று   விட்டாள்,   இவர்,   தனிமரமாக    நின்றார்.    நாட்டுப் பெண்  தான்,   தன்னோடு   வைத்துக்   கொண்டு    அவருடைய    கடைசி  மூச்சு   வரைப்    பாதுகாத்து    வந்தாள்.. 

பெரியவா சரணம்.....




Monday, November 14, 2016

மஹா அன்னாபிஷேகம் 
(14.11.2016 திங்கட் கிழமை)





 அன்னம்.

உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம். வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது.
அன்னம் நிந்த்யாத்அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.
அன்னம் ப்ராணாவோ அன்னம்எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் அதுவே உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது.
அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம்அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.
தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாகதெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.
ஹோமத்திற்கான ஹவிர் பாகத்தைப் பெறுவதற்கு என்றும் தெய்வங்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
அன்னம் எனும் ஹவிர் பாகத்திற்காகப் பெரும் சண்டையே நடந்திருப்பதைப் புராணங்கள் அனேகம் பகர்கின்றன. சிவனுக்குரிய ஹவிர் பாகத்தைத் தர மறுத்த தக்ஷனின் தலையைக் கொய்திருக்கின்றார் வீரபத்திரம் வடிவம் கொண்ட சிவன்.
இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.
தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே. உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை.
சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம். ELLIPTICAL எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்து வரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன. சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவ வடிவம் தான். அண்டம் முழுக்க சிவ வடிவம் தான். சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.
சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள். சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும். பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.
வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.
சிதம்பரம் போன்ற ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு. ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவை,
மாதம்அபிஷேகப் பொருள்பலன்

சித்திரை பௌர்ணமிமருக்கொழுந்துபுகழ்
வைகாசி பௌர்ணமிசந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி பௌர்ணமிமுக்கனி = மா, பலா, வாழைகேட்ட வரம் கிட்டும்
ஆடி பௌர்ணமிகாராம் பசுவின் பால்பயம் நீங்கும்
ஆவணி பௌர்ணமிவெல்ல சர்க்கரைசாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி பௌர்ணமிகோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம்அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம்கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமிபசு நெய், தாமரை நூல் தீபம்பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பௌர்ணமிபசு நெய் & நறுமண வென்னீர்கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை பௌர்ணமிகருப்பஞ்சாறுநோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பௌர்ணமிபசுநெய்யில் நனைத்த கம்பளிகுழந்தை பாக்கியம் பங்குனி பௌர்ணமிபசுந்தயிர்மனைவி, மக்கள், உறவினர் உதவி
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று தமிழ் திருமுறைகள் போற்றும்சிதம்பரம் ஸ்ரீ ஆதி மூலநாதர் சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மேற்கண்ட முறையில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.
தவக்கனல், அருட்புனல், மண்ணில் வாழ்ந்த, சிவ வடிவாகவே கருதப்படும் காஞ்சி மஹா பெரியவரின் அருளாணையின் படி, பல்வேறு சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.


அதில் மிக முக்கியமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் எனும் பெரும் சிவ வடிவத்திற்கு நூற்றுக்கணக்கான மூட்டைகள் அரிசி கொண்டு, பெரும் வடிவமாகிய சிவபெருமான் முழுக்க நிறைந்திருக்கும்படி மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, அந்த அன்னம் முழுக்க அன்னதானம் செய்யப்படும்.
அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.
அன்னாபிஷேகத்தில் பங்கு கொள்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!
எவரும் செய்யத் துணியாத வகையில் அன்னதானம் செய்தவர் பற்றியும்,
அன்னதானத்தின் பெருமையையும் காணhttp://natarajadeekshidhar.blogspot.in/2010/…/blog-post.html க்ளிக் செய்யுங்கள்.


நன்றி:
https://mahaperiyavaa.wordpress.com/