Thursday, October 5, 2017

இத்தனை விஷயங்களா? என்று நம்மை மலைக்க வைக்கும் !  ஸர்வஜ்ஞரான மஹா பெரியவா நடராஜா பற்றிச் ​சொன்னது.

Image may contain: 3 people, drawing


                                          PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS





சிவன் கோவில்ல எல்லாம் "வ்யாகரண தான மண்டபம்"ன்னு ஒரு மண்டபம் இருக்கும். "வக்காணிக்கும் மண்டபம்" ன்னு திரிச்சு சொல்லுவா. நன்னா வக்கணையா பேசுன்னு சொல்றதே "இலக்கண சுத்தமா"பேசறதுன்னு அர்த்தம். திருவொற்றியூர்ல கூட இந்த மண்டபம் இருக்கு. சிவன் கோவில்ல மட்டும் ஏன் இப்டி ஒரு மண்டபம் இருக்கு? விஷ்ணு கோவில்ல ஏன் இல்லை? ஸிவனுக்கும் பாஷைக்கும் என்ன ஸம்பந்தம்? பேச்சே இல்லாத தக்ஷிணாமூர்த்தியா இருக்கறவராச்சே பரமேஸ்வரன்? ஒரு ஸ்லோகத்ல, பேசாத சிவன் ஆடாம அசங்காமத்தான் இருப்பார். ஆனா, அவரே ஒரே ஆட்டமா ஆடறப்போ தான் பாஷா சாஸ்திரமே பொறந்ததுன்னு சொல்லியிருக்கு. ஆடகின்ற சிவனுக்கு நடராஜான்னு பேர். 'மஹாகாலோ மஹாநட:'ன்னு அமரகோசம் சொல்றது. அம்பலக்கூத்தாடுவான் பட்டன் ன்னு ப்ராஹ்மணாளும் ஆதியில நல்ல தமிழ் பேராத்தான் வெச்சிண்டிருந்திருக்கா. பம்பாய்ல ஒரு பிரிண்டிங் ப்ரஸ்ல [நிர்ணயஸாகரா பிரஸ்] பழைய காலத்து ஸம்ஸ்க்ருத ஸாஸனங்களை ஆராய்ச்சி பண்ணின புஸ்தகம் "ப்ராசீன லேகமாலை"ன்னு ஒண்ணு இருக்கு. அந்த ஸாஸனங்கள்ள வேங்கி நாட்டோடது ஒண்ணு இருக்கு. க்ருஷ்ணா நதிக்கும், கோதாவரிக்கும் நடுவுல இருக்கறது தான் வேங்கிநாடு. அந்த நாட்ல கெடச்ச தாம்ர [காப்பர்] ஸாஸனம் ஒண்ணை புஸ்தகத்ல போட்டிருக்கா. தெலுங்கு சீமைல ராஜ்யம் பண்ணிண்டிருந்த கீழை சாளுக்ய ராஜாக்களுக்கும், நம்ம தஞ்சாவூர் சோழ ராஜாக்களுக்கும் விவாஹ ஸம்பந்தம் இருந்துது. ப்ருஹதீஸ்வரர் கோவிலைக் கட்டின ராஜராஜ சோழனோட புத்ர வம்ஸம், பௌத்ரர்களோடேயே முடிஞ்சு போய்டுத்து. அவனோட தௌஹித்ரி [பெண்வழிப் பேத்தி] அம்மங்கா தேவி, ராஜராஜ நரேந்த்ரன்….ங்கற கீழைச் சாளுக்ய ராஜாவுக்குத்தான் வாக்கப்பட்டிருந்தா. அவாளோட புள்ளை குலோத்துங்க சோழன்தான் அப்றம் சோழ நாட்டுக்கு ராஜா ஆனது. அவன் தான் ஆந்த்ர தேஸத்ல வேதாத்யயனம் வ்ருத்தியாகணும்னு, தமிழ்நாட்டுலேர்ந்து 500 ப்ராஹ்மணாளைக் கொண்டு போய் வேங்கிநாட்டுல குடியமத்தினான். ஆந்த்ரால "த்ராவிடலு" ன்னு இன்னிக்கும் இருக்கறவா எல்லாருமே இந்த 500 ப்ராஹ்மணாளோட வம்ஸாவளிதான். நடராஜாவைப் பத்தி சொல்லிண்டிருந்தேன்.. நாமெல்லாம் ஆட வேண்டிய கூத்தையெல்லாம் சேர்த்து வெச்சு அவர் ஆடறார். நடராஜ விக்ரஹத்தோட தலேல படர்ந்தா மாதிரி ஒண்ணு இருக்கும். ரெண்டு பக்கமும் நீண்டுண்டு இருக்கும். அதுல சந்த்ரன், கங்கை ரெண்டுமே இருக்கும். என்னது அது? 

அதுதான் நடராஜாவோட ஜடாபாரம். இந்தக் காலத்ல photo எடுக்கறச்சே. "snap shot "ன்னு ஒண்ணு உண்டு. ஒரு வஸ்து சலனத்ல [movement] இருக்கறப்போ, திடீர்னு ஒரு அவஸரத்ல [pose] போட்டோ எடுக்கறதுதான் அது. நடராஜா ரொம்ப வேகமா நர்த்தனம் பண்றார். பண்ணி, அப்டி நிறுத்தப்போற ஸமயத்ல அவரோட ஜடாபாரம் ரெண்டு பக்கமும் நீட்டிண்டு இருக்கும். அந்த அவஸ்தையை [கோலத்தை], அந்தக் காலத்து ஶில்பி, மனஸ்ல எடுத்த "ஸ்நாப் ஷாட்"தான் அந்த ஸ்வரூபம். நடராஜாவோட கையில உடுக்கு இருக்கு. அது குடுகுடுப்பாண்டி வெச்சிருக்கறதை விடப் பெருஸ்ஸு, மாரியம்மன் கோவில் பூஜாரி வெச்சிண்டு இருக்கறதை விட சின்னது. அதுக்கு டக்கான்னும், டமருகம்ன்னும் பேர் உண்டு. பாதத்தோட தாளத்தை அனுஸரிச்சு, அந்த டமருவோட தாளமும் இருக்கும்.



Image may contain: 1 person, drawing
                                                 PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS


வாத்யங்கள்ள மூணு வகை. சர்ம வாத்யம் [டக்கா, மேளம், கஞ்சிரா, ம்ருதங்கம் மாதிரி தோல் வாத்யங்கள்], தந்த்ரி வாத்யம் [வீணை, பிடில் மாதிரி தந்தி [கம்பி] போட்டது] வாயுரந்த்ர வாத்யம் [நாயனம், புல்லாங்குழல் மாதிரி ஓட்டை போட்டு, காத்துனால ஊதற வாத்யம்]. 

இதுல சர்ம வாத்யம் தண்டத்தாலேயோ, ஹஸ்தத்தாலேயோ[கைகள்] அடிப்பா. அந்த வாத்யத்தை நிறுத்தறச்சே, சாப்பு குடுக்கறது, அப்டீன்னா… சேர்ந்தாப்ல சில அடி அடிக்கறது வழக்கம். அது மாதிரி நடராஜாவோட டமருகத்ல டான்ஸ் முடியற காலத்ல "ந்ருத்த அவஸானே" ன்னு ஒரு சாப்பு த்வனி உண்டாச்சு.

நடராஜா ந்ருத்யம் பண்றார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வ்யாக்ரபாதர் எல்லாரும் அவரைச் சுத்தி நிக்கறா. அவாள்ளாம் மஹா தபஸ்விகள். அதுனால நடராஜாவோட ந்ருத்தத்தை கண்ணால பாக்க முடிஞ்சுது. ஞான நேத்ரம் இருக்கறவாதான் அவரோட நடனத்தைப் பாக்க முடியும். க்ருஷ்ணனோட விஸ்வரூபத்தை தர்ஸனம்  பண்ற சக்தியை  பகவானே அர்ஜுனனுக்குக் குடுத்தார். அதே  சக்தியை வ்யாஸாச்சார்யாள் ஸஞ்சயனுக்கும் குடுத்து அவனையும் பகவானோட விஸ்வரூபத்தை தர்ஸனம் பண்ணி த்ருதராஷ்ட்ரனுக்கு வர்ணிக்கப் பண்ணினார். நடராஜாவோட டான்ஸ் கச்சேரில விஷ்ணு மத்தளம் கொட்டிண்டிருக்கார்; ப்ரஹ்மா தாளம் போட்டுண்டிருக்கார். இப்டியா…. ந்ருத்தம் முடியப் போற ஸமயத்ல, டமருகத்ல சாப்பு, கிடுகிடுன்னு 14  சப்தங்களா விழுந்துது. அந்த  சப்தங்களோட கணக்கு மாதிரியே வித்தைகளோட கணக்கும் பதினாலாத்தான் இருக்கு! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தஸ வித்யா [14] ன்னா….. நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது! அப்போ அங்கே இருந்தவாள்ள பாணினி மஹரிஷிங்கறவர் அந்த 14  சப்தங்களையும், 14 ஸூத்ரங்களா வ்யாகரணத்துக்கு மூலமா வெச்சுண்டு "அஷ்டாத்யாயி" ங்கற இலக்கண மூல புஸ்தகத்தை எழுதினர். இந்த பதினாலு ஸூத்ரங்களையும் ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்போம். மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.

அ இ உண்
ருலுக்
ஏ ஒங்
ஐ ஔச்
ஹயவரட்
லண்
ஞம ஙண நம்
ஜ ப ஞ்
க ட த ஷ்
ஜ ப க ட த ​ஸ் ​
க ப ச ட த சடதவ்
கபய்
சஷஸர்
ஹல்

ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்… இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்… பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்.
No automatic alt text available.

                                                   PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS 



​ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்க

                                      
ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்கர