Thursday, December 24, 2015

கண்ணனும், குசேலனும்



மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன்.  

 

மார்கழி மாதம் பக்திக்கு சிறந்த மாதம். ஆண்டாள் பாவை நோன்பு இருந்து ஸ்ரீமன் நாராயணனை மணாளனாக அடைந்த மாதம் மார்கழி.  

 

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் சொர்க்க வாசல் திறப்பு - வைகுண்ட ஏகாதேசி வருவதும் மார்கழியில்தான். சிவனுக்கு உகந்த ஆருத்ரா தரிசனமும் மார்கழியில் தான் வரும்.. அது போலவே ராமபக்தன் ஆஞ்சநேயன் அவதரித்த மாதம் மார்கழி

 இந்த மார்கழி மாதத்திற்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. கிருஷ்ண-குசேல நட்பு பற்றி அனைவரும் அறிந்ததே. மார்கழி மாதத்தில் வரும் முதல் புதன்கிழமைதான் குசேலனுக்கு அருள்பாளித்தான் எம்பெருமான். வறுமைக்கு வறுமையை தந்து குசேலனை குபேரானாக்கிய மாதம் மார்கழி.  

சாந்திபினி முனிவர் - இவர்தாம் ஸ்ரீ கிருஷ்ண பலராமனுக்கும் மற்றும் யாதவ சிறுவர்களுக்கும் - குருகுல ஆசிரியராய் இருந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சாதாரண மாணவனைப் போலவே குருகுலத்தில் தங்கி எளியோனாய் குருவிற்கும் குருபத்தினிக்கும் சேவை செய்து எல்லா கலைகளையும் கற்று தேர்ந்தான். இந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒரு தோழன் அவனை சுதாமா என்றும் குசேலன் என்றும் அழைப்பர். கிருஷ்ணன் மதுராவின் இளவல் அனைத்து சம்பத்துக்களும் பெற்றவன் ! குசேலனோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தவித்தவன். காலம் இருவரையும் இரண்டு எல்லைகளில் நிறுத்தியிருந்தது . குசேலனுக்கு லௌகீக ஆசைகள் என்று எதுவும் கிடையாது


  


 


குருகுல வாசம் முடிந்து அவரவர் தம் இல்லம் சென்று வாழ்க்கையை தொடங்கினர்.

குசேலனுக்கு காலக்ரமத்தில் பெரும் சகிப்பு தன்மை கொண்டவளும் பக்தியில் சிறந்தவளும் சீரிய குணவதியானவளுமான சுசிலை என்பவள் மனைவியாக வாய்த்தாள்.
சுசிலை தன்னுடைய பசியையோ, கந்தல் கோலத்தையோ பொருட்படுத்தாமல் இருந்தாலும் அவளது குழந்தைகள் பசியால் வாடுவதைக் கண்டு மனம் துடித்தாள்.  

 

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.அப்போது, குருகுலவாசத்தில் கிருஷ்ணனும் தனது கணவனும் உயிர் நண்பர்களாக இருந்தது பற்றி தன் கணவன் சொன்னது ஞாபகம் வந்தது. கிருஷ்ணனை எல்லோரும் துவாரகபுரி மன்னனாக கொண்டாடுகிறார்களே அப்படியிருக்கும் போது நம் கணவர் அவர் மூலம் நமது ஏழ்மை நிலையை போக்கிகொள்ளலாமே என்று நினைத்தாள்.
சுசிலை தன் கணவரைப் பார்த்து கிருஷ்ணர் உமது பால்ய நண்பர்தானே அவரைப் பார்த்துவிட்டு வந்தால் நமக்கு சகாயம் உண்டாகுமே எனறாள். குசேலனுக்கு நன்கு தெரியும் கிருஷ்ணன் சாதாரண மானிடன் இல்லை அவனே பரம்பொருள் என்பதை அறிந்து இருந்தான் ஆகவே கண்ணனிடம் சென்று லௌகீகத்தின் தேவைக்காக உதவி கேட்பது சரியாக இருக்குமா என்று யோசித்தான். இருந்த போதும் கிருஷ்ணனை சந்திக்க ஒரு வாய்ப்பாக இதை பயன் படுத்திக்கொள்ளலாம் என முடிவுக்கு வந்தான் . குசேலன், "சுசிலை ! வெறுங்கையுடன் எப்படி செல்லுவது? தெய்வம் , மன்னன், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை பார்க்க செல்லும் போது ஏதாவது எடுத்து செல்லவேண்டும். நம்மிடம் எதுவும் இல்லையேஎன்றான். சுசிலை ஏற்கனவே தன்னிடம் இருந்த அவல் பொறியை ஒரு சிறு வஸ்திரத்தில் முடிந்து வைத்திருந்தாள். அதை கணவரிடம் கொடுத்து, "நிச்சயம் உங்கள் நண்பர் இதை ஏற்றுக் கொள்வார் என்றும் அவருக்கு எனது பக்தியுடன் கூடிய நமஸ்காரத்தை தெரிவிக்கும்படி கேட்டு கொண்டாள்.

குசேலன் துவராகபுரிக்கு கிளம்பி சென்றான். அதுவரை இல்லாத அச்சமும் நாணமும் கவலையும் அவரை பீடித்தன. எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் அவருடன் குருகுலத்தில் படித்த என்னை அவருக்கு நினைவிருக்குமா? மன்னர்கள் எல்லாம் வந்து பார்த்து வணங்கி செல்லும் நிலையில் உள்ள கண்ணன் இந்த கந்தல் ஆடையில் நின்று நான் உன் நண்பன் என்று சொன்னால் எனக்கு கிடைக்கும் வரவேற்பு எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே துவராகபுரியின் அரண்மனை வாசலை அடைந்தார்.
தயங்கி தயங்கி வாயிற்காப்போனை அணுகி, "நான் கிருஷ்ணனின் நண்பன் நானும் அவரும் ஒன்றாக குருகுலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் படித்தோம். சுதாமா என்ற என் பெயரை சொன்னால் கிருஷ்ணன் புரிந்து கொள்வார்"என்றார். இதை செவிமடுத்த வாயிற்காவலன் அவரை ஏற இறங்க பார்த்தான். மகுடமும் மயிற்பீலியும் அணிந்து, பீதாம்பரம் உடுத்தி, மன்னர்களால் கொண்டாடப்படும் மகாபுருஷனான கிருஷ்ணன் இவரது தோழனா? இதற்கு மேல் கந்தலாக முடியாத ஆடை, முகத்திலேயே தரித்தரக் களை கையில் ஒரு கந்தல் துணி முடிச்சு ! ஹும் இவனை எப்படி நம்புவது என்று ஒரு கணம் யோசித்தான்.
ஆனால் தோற்றம் எப்படி இருந்தாலும், கண்கள் உண்மை பேசின; நிர்மலமாய் இருந்தன. அதனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனவே குசேலனை வாயிலில் நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே போய் கிருஷ்ணரிடம் கூறினான் . அவ்வளவுதான்! கிருஷ்ணர் எழுந்து வாயிலை நோக்கி ஓடிசென்றார். காவலர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை கலங்கி போயினர். இவ்வளவு அவசரமாக ஓடிச் சென்று யாரையும் வரவேற்றதில்லையே! என மனம் குழம்பினர். காவலர்கள் குழம்பியதற்க்குக் காரணம் இருந்தது. ஏனென்றால் கிருஷ்ணனை பார்க்க எவ்வளவோ பேர் வந்திருக்கிறார்கள்.
உயிர் நண்பன் அர்ஜூனன், துரியோதனன், அக்ரூரர், பல தேசங்களை சேர்ந்த மன்னர்கள் நிறைய பேர் வருவது வழக்கம்தான். ஆனால் இந்த மாதிரி விழுந்தடிச்சு ஓடி வரவேற்க போனதே இல்லையே ? ஏன்? 'அப்படியென்ன வந்திருப்பது என்ன பெரிய ஆளா? " என்று நினைத்தார்கள். அந்தஸ்து, அழகு, செல்வாக்கு, புத்திசாலித்தனம் என்று எதிலும் சமமில்லாத இவருக்கு ஏன் அத்தனை அவரசமாக ஓடி வரவேற்க சென்றார்?

சுதாமா என்ற பெயரை கேட்டவுடன் குருகுலத்தில் அவன் மடி மீது தலை வைத்து தூங்கியிருக்கிறோம். நமது கால்களை பிடித்து எனக்கு சிரமபரிகாரம் செய்த அவனை எப்படி மறந்தோம்? காவலன் சொன்ன அடையாளத்தை பார்த்தால் சுதாமா திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருக்கவேண்டும். பொருளின் மீது பற்றற்ற காரணத்தால் வறுமையில் வாடுகிறாரோ? என்றல்லாம் எண்ணியவாறு அவனை உடனே அரண்மனைக்கு அழைத்து அவனை போஷிக்க வேண்டும் என்று வாயிலை நோக்கி விரைந்தார்.கிருஷ்ணனை பார்த்ததும் வியந்து போனார் குசேலர். வந்த வேகத்தில் அவரை தன்னுடன் இழுத்து அணைத்துக் கொண்டார்.  

 

பார்த்த எல்லோரும் பிரமித்தனர். என்ன ஒரு பாக்கியம் இவனுக்கு என்று ஆச்சரிய பட்டனர். தன்னுடன் அணைத்தவாறு குசேலனை உள்ளே அழைத்து சென்றார். குசேலர் சுயநிலையில் இல்லை. நடப்பது கனவா, நினைவா என்று புரியாத மயக்கத்திலிருந்தார். தன்னோடு அணைத்தபடியேஅவரை உள்ளே அழைத்துசென்று தான் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமர்த்தினான். பல மைல் தூரம் நடந்து வந்த புழுதி படிந்து காணப் பட்ட அவரது கால்களை ஒருதங்க தாம்பாளத்தில் வைத்து, ருக்மணி நீர் வார்க்க தனது திருக் கரங்களால் அலம்பினான். குசேலர் மனம் நெகிழ்ந்தார். மனம் கூசினார். ஹே கிருஷ்ணா ....இதென்ன சோதனை? உனக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத நான் நீ அமரும் ஆசனத்திலா ? எல்லோருக்கும் அபயகரம் நீட்டி ரட்சிக்கும் உனது திரு கைகள் என் பாதங்களை அலம்புவதா? அதற்கு உன் தேவி தண்ணீர் வார்ப்பதா?"என்று "மனசுக்குள்ளே கசிந்துருகினார்.
 
 
தான் எதிர்ப்பார்த்தற்கு மேலாக, கிருஷ்ணன் தன்னை கௌரவித்துவிட்டதாக எண்ணி சந்தோஷ பட்டார். இப்பேர்ப்பட்ட கிருஷ்ணனிடம் போய் 'வறுமை தீரப் பொருள் கொடு'என்று கேட்பதா? கூடாது என்று அமைதியாக இருந்து விட்டார். அவரை உணவருந்தச் செய்தான் கிருஷ்ணன். ருக்மணி பரிமாறுகிறாள். கிருஷ்ணன் விசிறுகிறான். ஆனந்தத்தால் கண்கள் கலங்குகின்றன குசேலருக்கு. ! உணவருந்தியபின், தாம்பூலம் தந்து, பட்டு மஞ்சத்தில் படுக்க வைக்கிறான். ருக்மணி விசிறிகொண்டிருக்கிறாள். அடடா எவ்வளவு தூரம் இந்த இளைத்து சிறுத்த பாதங்கள் நடந்து வந்திருக்கின்றன . எவ்வளவு துன்பத்தை அடைந்திருக்கும். நன்றாக ஓய்வு எடுங்கள் என்று சொல்லியபடி, குசேலரின் பாதங்களை மென்மையாகப் பிடித்து விடுகிறான். குசேலரால் இந்த அன்பை தாங்க முடியவில்லை. அவர் கண்கள் கசிகின்றன. 'சுதாமா, அன்று போலவே இன்றும் இருக்கிறார். குருகுலத்தில் எல்லோருக்கும் அவர் பணிவிடை செய்தார். அப்போது அவருக்கு யாராவது உதவி செய்தால், அவரால் தாங்கமுடியாது கண்கலங்கி விடுவார்'என்று சொல்லி சிரித்தான் கிருஷ்ணன். ருக்மணி புன்னகைத்தாள். குசேலரின் பிரமிப்பு தீரவில்லை. நாட்கள் நகர்ந்தன கிருஷ்ணனின் அன்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. குசேலர் வந்த காரணத்தை சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை. மனைவி மக்களின் நினைவு தோன்றித் தடுமாற வைத்தது.
கிருஷ்ணனிடம் விடைபெற நினைத்தார். தயக்கத்துடன் சொல்லவும் செய்தார். "சுதாமா ! அண்ணியார் எனக்கென்று எதுவும் கொடுத்திருப்பார்களே! அது எங்கே? "என்று கேட்டான் கிருஷ்ணன். தூக்கி வாரிப் போட்டது குசேலருக்கு. 'அந்தக் கந்தல் துணி முடிச்சை அவிழ்த்து அவலை எடுத்துத் தருவதா? முடிச்சை பார்த்தாலே விகாரம்? உள்ளேயோ சாதாரண அவல்! இதைப் போய் கொடுப்பதா'என்று எண்ணி நாணிக் கொண்டிருந்தார். அதற்குள் கிருஷ்ணன் அவரது கந்தல் முடிச்சை பார்த்துவிட்டான். முடிச்சை பிரித்தான். 'அடடா... எனக்கு பிடித்தமான அவல்! என்று சொன்னபடியே ஒரு பிடி அவலை எடுத்தான். குசேலர் கண்கலங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பார்க்கவே அழுக்கா இருக்கு அந்த கந்தல் துணி! அதுக்குள்ளே முடிஞ்சு வைத்திருக்கும் அவலை எடுத்து சாப்பிடறது சாதாரண விஷயமல்ல. கிருஷ்ணன் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ரொம்ப விசேஷமா நினைத்தான். உள்ளே இருக்கிற அவல் உலக்கையால் குத்துப்பட்டு குத்துப்பட்டு அவலான மாதிரி லௌகீக வாழ்க்கையில் குசேலரும் அவர் குடும்பமும் குத்துப்பட்டு இருக்கிறது என்பது கிருஷ்ணனுக்கு புரிந்தது. சுசிலையின் பக்தி தெரிந்தது. அதை கவனமாக கொண்டு வந்த குசேலனின் சிரத்தை புரிந்தது. பக்தி என்றால் என்ன ? உள்ளன்பு ! ஏழைக்கு உணவிடுவது பக்தி. உதவி கேட்டு வருவோருக்கு உள்ளன்போடு உதவுவது பக்தி. குசேலன் சுசிலையின் உள்ளன்பை உணர்ந்த பரமாத்மா ஒரு பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். ஆஹா ! எவ்வளவு சுவை அமிர்தம் கூட இதற்கு ஈடாகாது எல்லாம் அண்ணியின் கை பக்குவம் என்று சொல்லி ஆனந்தமாகச் சாப்பிட்டான். குசேலரின் மனைவி எப்போது அவலை இடித்தாள். அக்கம்பக்கத்திலே யாசகமாய் வாங்கியது. எத்தனை பேர் அவளுக்கு தெரியாமல் பரிகசித்தினரோ ? எந்த வேதனையையும் கணவன் மேல் சுமத்தாமல் தானே தாங்கிக் கொண்டு இந்த அவலை கொடுத்து அனுப்பினாள் அது பகவானுக்கு நன்கு தெரிந்தது. இதையெல்லாம் கைப்பக்குவம் என்று சொல்லி சுசிலையை கெளரவபடுத்தினான். அடுத்தப் பிடி அவலை வாயில் போட எடுத்தான்; அதற்குள் ருக்மணி அவன் கைகளை பற்றினாள். பரமாத்மாவிற்கு புரிந்தது ருக்மணியின் நடத்தை ! ஆம் சுவாமி நீர் ஒரு பிடி அவல் சாப்பிட்டதுமே அவர் தரித்தரம் நீங்கி இப்போ குபேரனுக்கும் மேலே என்னும் படி ஆகிவிட்டார். அடுத்தபிடியை நீர் சாப்பிட்டால் செல்வத்துக்கெல்லாம் அதிதேவதையான நானே அவரது கிரஹத்திற்கு போய் இருக்கிற மாதிரி ஆகிவிடும். குசேலன் விடை பெற்றான். இவரும் எதுவும் கேட்கலை. அவரும் எதுவும் தரவில்லை.
கிருஷ்ணனும் ருக்மணியும் குசேலரை வாசல் வந்து வழியனுப்பி வைத்தனர். சுசிலைக்கு என்ன சொல்வது ? ஒரு சம்பத்தும் வாங்கி வரவில்லை என்று நினைத்தாலும், கண்ணன் தன் மீது காட்டிய பரிவும் ருக்மணியின் உபசரிப்பையும் எண்ணியவாறு தன் ஊரை அடைந்தார். ஊரே அடையாளம் மாறியிருந்தது. எங்கு நோக்கினும் வளமும் செழுமையும் புலப்பட்டது. ஒன்றுமே புரியவில்லை அவருக்கு. ஊரின் எல்லையை அடைந்தார். அங்கே பூர்ண கும்பத்துடன் வரவேற்க எல்லோரும் காத்திருந்தனர். 'யாரோ பெரிய மனிதர்கள் வருகிறார்கள் போலும்' என்று நினைத்தபடி நடந்தார். அவர் அருகே வந்தவுடன் அவருக்குத்தான் பூர்ண கும்பம் கொடுத்தார்கள். குசேலர் குழம்பினார். அப்போது ஒரு செல்வசெழிப்புடன் காணப்பட்ட பெண் ஒருத்தி அவரது கால்களை விழுந்து வணங்கினாள். தீர்க்கசுமங்கலிபவ என்று வாழ்த்த வணங்கிய பெண் எழுந்தபோது குசேலர் அதிர்ந்தார். காலில் விழுந்து வணங்கிய பெண் யாருமில்லை அவரது மனைவி
சுசிலை.
குசேலர் கண் கலங்கினார். "கிருஷ்ணா ! இது என்ன விளையாட்டு? உன்கிட்டே நான் எதையுமே சொல்லலே கேட்கலை கேட்டிருந்தாக் கூட இவ்வளவு செல்வத்தை நான் கேட்டிருக்க மாட்டேன். குடிசையை மாளிகையா மாத்தியிருக்கே செழிப்பை வீடு பூரா ஊர் பூரா நிரப்பியிருக்கே ! ஏன் கண்ணா ஏன்? வறுமையிலிருந்த போது இருந்த அன்பு மாறும்ன்னு பார்க்கவா? மாறாது என்னிக்கும் நான் குசேலனாகவே இருப்பேன் என்று சங்கல்ப்பம் செய்துக் கொண்டார். எதிலும் பற்றற்று கண்ணன் மீது தனது எண்ணங்களையெல்லாம் திருப்பி அவன் நினைவாகவே இருந்து இறுதியில் செல்வம் அனைத்தையும் அந்தணர்களுக்கு தானமளித்து வைகுந்தத்தை அடைந்தார்.ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த சரித்திரத்தை கேட்பவனும் படிப்பவனும் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உத்தமமான பகவத் பக்தனாவான்.