Thursday, October 27, 2016

50வது பதிவு
கங்கா ஸ்நானம் 
தீபாவளிக்கு மூன்று குளியல்--- மஹா பெரியவா.
தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யுமாறு சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஒருமுகூர்த்த நேரம் கங்கை நதியே இருப்பதாக ஐதீகம். அதனால், அந்த நேரத்தில் எண்ணெய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வர வேண்டும். இதற்கு " கங்கா ஸ்நானம்" என்று பெயர்.


வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதித்த பின், ஆறு நாழிகை நேரம் வரை, காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். அப்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு " துலா ஸ்நானம்" என்று பெயர். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவு வர வேண்டும்.


வெளி உடம்பை தூய்மையாக்கிய பின், பெரிய ஸ்நானம் ஒன்று உண்டு. அதுதான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும்
"
கோவிந்தேதி ஸதா ஸ்நானம்". அப்போது
நம் ஜீவன் தூய்மையாகிறது. பெரிய ஸ்நானம் என்று சொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணி விடக்கூடாது. இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து ஸ்நானம் செய்யுங்கள்
.


"எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு...
பண்ணித் தர்றியா?" -பெரியவா


(பெரியவா நடத்தின லீலை)


"எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு பண்ணித் தர்றியா?" -பெரியவா
(பெரியவா நடத்தின லீலை)ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது.கிட்டத்தட்ட பத்தரை,பதினொரு மணி இருக்கும்.அந்த சமயத்துல ரொம்ப தொலைவில் இருக்கிற ஒரு ஊர்ல இருந்து
வயசான பெண்மணி ஒருத்தர் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.
பரமாசார்யா அந்த பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரைக் கூப்பிட்டார்.  "எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு...பண்ணித் தர்றியா?" அப்படின்னு கேட்டார்.
எல்லாருக்கும் ஆச்சர்யமான ஆச்சரியம்.அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா,ரவாதோசை வேணும்னு கேட்கிறார்.அதுவும் எனக்கு திங்கணும் போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும் விட ஆச்சரியம், கிட்டத்தட்ட பாதிராத்திரியை நெருங்கிண்டு இருக்கிற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்!

ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர்,அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத்தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு
கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது?

உடனடியா உக்ராண அறைக்குப் போனவருக்கு சங்கடமான விஷயம் தெரியவந்தது. அது என்னன்னா ரவாதோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒரு துளி கூட இல்லைங்கறதுதான்இத்தனை நேரத்துக்கு அநேகமாக எல்லா கடையும்
மூடியிருக்கும். என்ன பண்ணறதுன்னு புரியாம தவிச்ச நேரத்துல ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி விறுவிறுன்னு வெளியில் கிளம்பி, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கிறதைப் பார்த்து ,ரவையை வாங்கிமூச்சுவாங்க அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்தா.
அப்புறம் என்ன! பத்துப் பன்னிரண்டு ரவா தோசை வார்த்து பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா. அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல்
மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, "ரொம்ப நன்னா இருக்கு.திருப்தி ஆயிடுத்து.இதெல்லாம் கொண்டுபோய் உள்ளே வைச்சுட்டு, எல்லாரும் தூங்கப் போங்கோ!" அப்படின்னார்.

என்னடா இது. ஒரு விள்ளல் சாப்பிடறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசாரியா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.

கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலஞ்சு வைதீகாள் பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு
இத்தனை நேரம் ஆச்சுன்னும் சொன்னா. ராத்திரி மடத்துல தங்கி இருந்துட்டு விடியற்காலம் ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.
விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப்போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலயே, "என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும் அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா,ரவாதோசைகளை எடுத்துவைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!"-பெரியவா.

சொல்லப் போனவர் திகைத்து நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம்.  அதோட அவா பசியோடஇருப்பாஅவாளுக்காக ஏதாவது பண்ணி வைக்கணும்கறதையும் மகாபெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்ப்பட்ட ஞானதிருஷ்டி.

"என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்க்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல, யாரோ வரப்போறா தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா அது சங்கடமாத் தோணலாம்இல்லையோ? அதே எனக்கு வேணும்னு கேட்டா சிரமத்தை பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே?”

வந்திருந்த வைதீகாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம்.தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக்கேட்டு  சிலாகிச்சுகண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்கு தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா.


Thursday, October 20, 2016

"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"
(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)
குடும்பத்தினரால் அலமேலு,சேலத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தார் - மடத்துக் குடியிருப்பு ஒன்றில் தங்கி சமையல் வேலைக்குச் சென்றார். தினமும்
காஞ்சிப்பெரியவரைத் தரிசனம் செய்வதைக் கடமையாகக் கொண்டார்.
ஐம்பது வயதில் காஞ்சிபுரம் வந்த அவருக்கு வய்து தற்போது எழுபது ஆனது. அதன் பின் வேலைக்கு செல்ல முடியவில்லை. பக்கத்துத் தெருவில் இருந்த வசந்தாவின் ஆதரவுடன் பொழுதைக் கழித்தார்.
ஒருமுறை வசந்தாவின் தாயார் இறந்து விட்டதால் அவர் திருச்சி செல்ல நேர்ந்தது. இந்த நேரத்தில் அலமேலு பாட்டிக்குக் காய்ச்சல் வந்து விட்டது. பசியால் வாடிய அவர் கவனிப்பார் இன்றி படுக்கையில் கிடந்தார்.

வாய் மட்டும்,  பெரியவா...பெரியவா..." என்று அவரின் திரு நாமத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. திடீரென, "பாட்டி...பாட்டி..." என்று சத்தம் கேட்டது. தட்டுத் தடுமாறி எழுந்த பாட்டி கதவைத் திறந்தார்.   அங்கு வசந்தாவின் மகள் காமாட்சி நின்றாள்.    கையில் சாப்பாட்டுக் கூடை இருந்தது.  "என்ன பாட்டி,ஒடம்பு தேவலையா?" என்றாள் சிறுமி  தலை அசைத்தாள் பாட்டி. சிரித்தபடியே காமாட்சி,  "பாட்டி...இந்தக் கூடையிலே ரசம் சாதம் இருக்கு.
சாப்பிட்டு நிம்மதியா இருங்கோ...நான் பாட்டுகிளாஸ்க்குப் போயிட்டு வரேன் என்று சொல்லி ஓடினாள்.

கூடைக்குள் சாதத்துடன், மிளகு ரசம், சுட்ட அப்பளம்,  உப்பு,நார்த்தங்காய்,வெந்நீர்,காய்ச்சல் மாத்திரை என அனைத்தும் இருந்தன. வசந்தாவின் பாசத்தை எண்ணி  நெகிழ்ந்து விட்டார் பாட்டி.
நன்றாகச் சாப்பிட்டு மாத்திரையும் போட்டுக்கொண்டதால் காய்ச்சல் விட்டது.வசந்தாவைப் பார்க்க பாட்டிபுறப்பட்டார். வீடு பூட்டி இருந்தது.
"திருச்சியில் இருந்து இன்னும் வசந்தா வரவில்லையே" என்றார் பக்கத்து வீட்டுப் பெண். பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.'காமாட்சி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாளே! அது எப்படி?' என்ற கேள்வி மனதில் எழுந்தது.
அந்த சிந்தனையுடன் பாட்டி பெரியவரைத் தரிசிக்கச்சென்றார்.அவரது காலில் விழுந்தார்.  "எப்படி இருக்கேள்....காய்ச்சல் தேவலையா?"  என்று கேட்டார் பெரியவர்.
"தான் காய்ச்சலில் அவதிப்பட்டது எப்படித் தெரிந்தது?"  என்று புரியாமல் திகைத்தார்.
"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"  என்று கேட்டு பாட்டியை மேலும் வியப்பில் ஆழ்த்தினார்  பெரியவர்.
பாட்டி வாயடைத்து நின்றார்.

சிரித்த பெரியவர், "திருச்சிக்குப் போன காமாட்சி இன்னும் வரலை...இந்த காஞ்சிபுரத்தை ஆட்சி செய்யுற காமாட்சிதான் உன்னைத் தேடி வந்தா..." என்று கோவில் இருக்கும் திசையைக் காட்டினார்.


அலமேலு பாட்டி அப்படியே சிலையாகிப் போனார்.   உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!


நன்றி-மே 2016 ஞான ஆலயம்