Thursday, January 4, 2018

அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள். ‘‘என்னது… மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’

  Image may contain: drawing

அன்றைய தினமும் அப்படித்தான். மகா பெரியவாளைத் தரிசிக்கக் கூடி இருந்த பக்தர்களுள் பலரது முகத்தில் ஏதோ எதிர்பார்ப்புகள். வேண்டுதல்கள்.

அவரவர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளைக் குருவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றில் பழங்கள், உலர்வகை பழங்கள், முந்திரி, வில்வ மற்றும் துளசி மாலைகளும் அடங்கும்.

பக்தர்களோடு பக்தராக அங்கே கலந்து ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தனர், நாராயணன் – வைதேகி தம்பதியர். சென்னையில் வசிப்பவர்கள். நாராயணன் உத்தியோகஸ்தர்.
நாராயணனது இடுப்பில் அவர்களது ஒண்ணரை வயது பெண் குழந்தை நிதர்சனா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது.

விழிகளை உருட்டி உருட்டி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். புதுப் புது மனிதர்களே எங்கும் தென்பட்டதால், குழந்தையின் முகத்தில் ஒரு மிரட்சி தெரிந்தது.

‘மகா பெரியவா அருகே செல்ல வேண்டும்… அந்த மகானிடம் தங்களது பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும்’ என்பது இந்தத் தம்பதியர்களின் விருப்பமாக இருந்தது.

ஆனால், அன்றைக்குக் கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தில் இவர்களால் ஒரு இஞ்ச் கூட முன்னேறிச் செல்ல முடியாத சூழ்நிலை.

எனவே, தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே மகா பெரியவாளின் திருமுக தரிசனத்தை எம்பி எம்பிப் பார்த்து கன்னத்தில் போட்டபடி இருந்தனர்.

‘‘ஏங்க, கூட்டம் இவ்ளோ இருக்கே… நிதர்சனாவைப் பெரியவாகிட்ட கூட்டிண்டு போய் காட்ட முடியுமாங்க? அந்த தெய்வத்தின் அனுக்ரஹப் பார்வை இவ மேல் திரும்புமாங்க?’’ என்று வைதேகி, நாராயணனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள்.

‘‘இன்னிக்கு அந்த மகானோட அனுக்ரஹம் கிடைக்கணும்னு நமக்கு விதி இருந்தா கிடைக்கும். பார்ப்போம், குருவோட பார்வை நம்ம மேல திரும்பறதானு…’’ என்று மகா பெரியவாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி உருக்கத்துடன் சொன்னார் நாராயணன்.

வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களது பிரார்த்தனையை மகானிடம் சென்று சொல்ல வேண்டும்… இதற்கு சாதகமாக ஒரு அருளாசி அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று இருந்ததே தவிர, தரிசனத்துக்காகக் காத்திருக்கும் குழந்தைகளுக்கோ, பெரியோர்களுக்கோ ஒரு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில் அனுப்ப வேண்டும் என்று யாருக்கும் கவலை இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை.

மகானின் சந்நிதி முன்னாலும், எல்லோரும் சுய நலத்துடன் காணப்பட்டார்கள்.

மகா பெரியவா அருகே வரும் பக்தகோடிகளை அவரது சிஷ்யர்கள் கட்டுப்படுத்தி, அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

வழக்கம்போல் மகா பெரியவா அங்கே திரண்டிருந்த பக்தகோடிகளைத் தன் அனுக்ரஹப் பார்வையால் ஒரு முறை அலசினார்.

தன்னைத் தரிசிக்க ஆத்மார்த்தமாக வந்திருக்கும் நாராயணன் – வைதேகி தம்பதியருக்கு அன்றைய தினம் யோகம் அடித்தது.

அடுத்த விநாடி ஒரு சிப்பந்தியை ஜாடை காட்டித் தன் அருகே அழைத்தார் மகா பெரியவா. குழந்தை நிதர்சனாவை இடுப்பில் சுமந்து கொண்டிருக்கும் நாராயணனை அடையாளம் காண்பித்து, ‘அவாளைக் கொஞ்சம் கிட்டக்கக் கூட்டிண்டு வா’ என்று சைகை செய்தார் மகான்.

அந்த சிப்பந்தி கூட்டத்தை விலக்கிக் கொண்டு நாலடி பாய்ச்சலில் ஓடிப் போய் நாராயணன் – வைதேகி தம்பதியரிடம் விஷயத்தைச் சொல்ல… அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள். ‘‘என்னது… மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’

‘ஆமா… வாங்கோ, சீக்கிரம். உங்களுக்குத்தான் உத்தரவு ஆகி இருக்கு.’’

கணவன், மனைவி இருவரின் விழியோரங்களும் நெகிழ்வின் காரணமாக கண்ணீர் சொரிந்தன.

குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் மகா பெரியவாளை வணங்கியபடியே நடந்தார் நாராயணன்.

‘‘வழி விடுங்கோ… வழி விடுங்கோ…’’ என்று உரக்கக் கூவிக் கொண்டே சிப்பந்தி முன்னால் செல்ல… பின்னால் நாராயணனும் வைதேகியும் நடந்தனர்.

மகா பெரியவா அருகே இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்திய சிப்பந்தி, பெரியவாளுக்குத் தகவல் தெரிவித்தார்.

கலியுக தெய்வத்தின் பார்வை தம்பதியின் மேல் விழுந்தது. ‘‘இடுப்புல வெச்சிண்டு இருக்காளே… அது அவாளோட குழந்தையானு கேளு…’’ – தன் பக்கத்தில் இருந்த சிப்பந்திக்கு பெரியவா உத்தரவு!

இந்தக் கேள்வி அப்படியே ஓவர் டூ தம்பதியர்.

வந்த பிரார்த்தனையே அதுதானே!

குழந்தையை முன்னிறுத்தித்தானே இன்றைக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள் இவர்கள்!

இவ எங்க கொழந்தைதான் பெரியவா…’’ – நாராயணன் நெக்குருகச் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல் வைதேகியும் கண்கள் கலங்க… பெரியவாளையும் நிதர்சனாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையைப் பார்த்துப் பெரியவா புன்னகைத்தார்.

குழந்தையும் பதிலுக்குப் புன்னகைத்தது.

அதன்பின் மகா பெரியவா தனக்கு அருகில் இருந்த ஒரு மூங்கில் தட்டில் இருந்து சிறிது உலர் திராட்சைகளை அள்ளி, சிப்பந்தியிடம் கொடுத்தார். ‘‘அந்தக் கொழந்தைகிட்ட கொடு.’’
திராட்சை இடம் மாறியது.

தன் பிஞ்சுக் கைகளை நீட்டியபடி அத்தனை திராட்சைகளையும் இரண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்க முற்பட்டது குழந்தை. அம்மாவும் இதற்கு உதவினார்.

மகா பெரியவா திருச்சந்நிதியிலேயே அந்த திராட்சைகளில் இருந்து இரண்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டது குழந்தை.

நாராயணனுக்கும் வைதேகிக்கும் கண்கள் குளமாயின என்று சொன்னால், அது சாதாரணம்.

இருவரும் குழந்தையை வைத்துக் கொண்டு தேம்புகிறார்கள்.

வந்த கார்யம் முடிந்து விட்டது. அந்தப் பரப்பிரம்மம் தன் வலக் கையை உயர்த்தி, இவர்களுக்கு விடை கொடுத்தது.

இத்தனை பக்தகோடிகள் கூடி இருக்கிற இடத்தில், மிகவும் ஆத்மார்த்தமாக வந்திருக்கிற ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துத் தன் அருகே வரவழைத்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து விட்டார் மகா பெரியவா.

அடுத்து, மகானது பார்வை கூட்டத்தைத் துழாவியது.


அடுத்த அதிர்ஷ்டம் யாருக்கோ?!

காஞ்சி ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தார்கள் நாராயணனும் வைதேகியும்!

இன்னமும் இடுப்பிலேயே இருந்தாள் நிதர்சனா!

இதுவரை அநேகமாக ஏழெட்டு திராட்சையை சாப்பிட்டிருப்பாள்.

மகா பெரியவா பிரசாதம் இன்னமும் அவள் கையில் இருந்தது.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சென்னைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள் மூவரும்.

மிதமான கூட்டத்தோடு பஸ் புறப்பட்டது.

மூவர் அமரக் கூடிய ஒரு இருக்கையில் ஜன்னல் ஓரமாக நிதர்சனாவும், அவளுக்கு அருகில் நாராயணனும் வைதேகியும் அமர்ந்தார்கள்.

பஸ் புறப்பட்டு ஐந்து நிமிடம் ஆகி இருக்கும்


Image may contain: 1 person, smiling, drawingதிடீரென நாராயணனின் கன்னத்தையும், சற்று எம்பி வைதேகியின் கன்னத்தையும் தடவி, ‘‘அம்மாமா… அப்பாபா…’’ என்று குரல் உயர்த்திக் குழந்தை பேச ஆரம்பித்தபோது, தாயும் தகப்பனும் போட்ட விநோதக் கூச்சலில் ஒரு விநாடி அதிர்ந்து சடன் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார் டிரைவர்.

‘என்ன பிரச்னையோ?’ என்று டிரைவர், தன் இருக்கையில் இருந்தே திரும்பிப் பார்க்க… கண்டக்டர் ஓடி வந்து, ‘‘என்னம்மா…’’ என்று கரிசனத்துடன் விசாரிக்க…
கண்களில் உடைப்பெடுத்துப் பெருகும் நீருடன் எல்லோரையும் பார்த்து வைதேகி சொன்னாள்: ‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க. எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க… ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது. இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன்.’’

பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் எழுந்து வந்து குழந்தையின் கன்னம் தொட்டுக் குதூகலித்தனர்.

ஆம்! நிதர்சனா பிறந்தது முதல் தற்போது வரை (ஒண்ணரை வயது) எந்த ஒரு வார்த்தையும் பேசியதில்லை.

வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை.

ஆனால், அத்தனையும் தாண்டி, ஒரு கலியுக தெய்வம் தனக்கு பிக்ஷையாக வந்த திராட்சையைக் கொண்டே இவர்களின் பிரச்னையைத் தீர்த்து விட்டது.

குடும்பத்துக்கே பிரசாதமாக வந்த திராட்சை குழந்தை நிதர்சனாவுக்கு மட்டுமில்லை.

நாராயணன் அவர் புரிந்து வரும் உத்தியோகத்தில் அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள். பிரமோஷன், சம்பள உயர்வு என்று எல்லாம் கிடைத்தன.

மகா பெரியவாளுக்கு சுமார் 97 வயது இருக்கும்போது நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று.

ராகவேந்திரரும், ஷீர்டி பாபாவும் காலங்களைக் கடந்தும் தங்களது பக்தர்களுக்கு – தங்களை நம்பியவர்களுக்கு அபயம் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நம் பக்கத்திலேயே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம் நாம்!

மகானின் திருச்சந்நிதி தேடி காஞ்சிக்கு ஒரு முறை போய் வாருங்கள்!

உங்கள் உதடுகள் பேச வேண்டாம். மனம் அவரோடு பேசட்டும்.

உணர்வுகளைப் புரிந்து கொள்வார். உள்ளத்தை அறிந்து கொள்வார்.

‘குருவே சரணம்’ என்று அவரது திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்.

உங்களை ஆசிர்வதித்து அருள அவர் தயாராக இருக்கிறார்.

கட்டுரையாளர்: பி. சுவாமிநாதன்..... Pitchai Iyer Swaminathan


Image may contain: drawing
மூன்று படங்களையும் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்14 comments:

 1. ‘‘ஏங்க, கூட்டம் இவ்ளோ இருக்கே… நிதர்சனாவைப் பெரியவாகிட்ட கூட்டிண்டு போய் காட்ட முடியுமாங்க? அந்த தெய்வத்தின் அனுக்ரஹப் பார்வை இவ மேல் திரும்புமாங்க?’’ என்று வைதேகி, நாராயணனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள்.

  ‘‘இன்னிக்கு அந்த மகானோட அனுக்ரஹம் கிடைக்கணும்னு நமக்கு விதி இருந்தா கிடைக்கும். பார்ப்போம், குருவோட பார்வை நம்ம மேல திரும்பறதானு…’’ என்று மகா பெரியவாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி உருக்கத்துடன் சொன்னார் நாராயணன்.

  -=-=-=-

  மேற்படி இரண்டு பாராக்களும் இருமுறை வெளியிடப்பட்டுள்ளன. அதனால் பரவாயில்லை.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோபு அண்ணா. பிழையை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி. திருத்தி விட்டேன்.

   Delete
 2. வரையப்பட்டுள்ள படங்கள் மூன்றும் சூப்பர் !!!

  வரைந்த ஓவியருக்கும், வெளியிட்டுள்ள ஜெயாவுக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. திரு சுதன் காளிதாசிடம் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து விடுகிறேன். அவர் ஒரு சிறந்த படைப்பாளி.

   நான் எல்லாம் வெறும் காப்பி அடிப்பவள் மட்டுமே.

   Delete
 3. //அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள். ‘‘என்னது… மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’//

  யார் மனத் தூய்மையுடனும், பக்தியுடனும் தரிஸனத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது அந்த மஹானுக்குத் தெரியும்.

  அவர்களுக்கு மட்டுமே அவரின் அருட்பார்வையும், பரம அனுக்கிரஹமும் பரிபூர்ணமாகக் கிடைத்து விடும்.

  இது ஏனோ ‘ஒரு பிக்னிக் போல’ வருகை தரும் கூட்டத்தாரில் பலருக்கும் புரிவது இல்லை.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. //இது ஏனோ ‘ஒரு பிக்னிக் போல’ வருகை தரும் கூட்டத்தாரில் பலருக்கும் புரிவது இல்லை.//

   முற்றிலும் உண்மை.

   Delete
 4. மிகவும் அருமையான + அழகான நிகழ்வு இது. குழந்தைக்குப் பேச்சு வந்தது பற்றி படித்த மகிழ்ச்சியில் எனக்கு பேச்சு மூச்சே நின்று விட்டது போல ஓர் உணர்வு ஏற்பட்டது. :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் எனக்கும் ரொம்ப பிடித்தது கோபு அண்ணா

   Delete
 5. //நம் பக்கத்திலேயே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம் நாம்!

  மகானின் திருச்சந்நிதி தேடி காஞ்சிக்கு ஒரு முறை போய் வாருங்கள்!

  உங்கள் உதடுகள் பேச வேண்டாம். மனம் அவரோடு பேசட்டும்.

  உணர்வுகளைப் புரிந்து கொள்வார். உள்ளத்தை அறிந்து கொள்வார்.

  ‘குருவே சரணம்’ என்று அவரது திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்.

  உங்களை ஆசிர்வதித்து அருள அவர் தயாராக இருக்கிறார்.//

  நம் காலத்தில், நமக்குத் தெரிந்து, நடமாடும் தெய்வமாக விளங்கி, அன்றும் இன்றும் என்றும் அருள் பாலித்து வரும் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ள நம்மில் சிலர் மட்டுமே மிகவும் பாக்கியசாலிகள்.

  இதனைப் புரிந்துகொள்ளாமல், ‘இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து திரிந்து அல்லல் படுகின்றனர்’ .... நம்மில் பலரும்.

  பூமியில் ஓரடிக்கு மட்டும் நெடுகத் தோண்டினாலும், குடிக்க நீர் கிடைத்து விடாது. ஒரே இடத்தில், அதுவும் உண்மையான இடத்தில், நம் மனதை ஒருமுகப்படுத்தி நம்பிக்கையுடன் தோண்டினால் மட்டுமே சுவையான நீர் சுலபமாகக் கிட்டிடும்.

  இதுபோன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா என்ற ஒருவரின் அதிஷ்டானத்திலோ அல்லது நம் வீட்டிலேயே அவரின் திரு உருவத்திலோ மட்டுமே நமக்கு நம்பிக்கை ஏற்பட ஓர் கொடுப்பிணை வேண்டும்.

  எல்லோருக்கும், எல்லாமே, எப்போதுமே சுலபமாகக் கிடைத்து விடாது. அதற்கு ஒரு பாக்யம் வேண்டும். அதுவரை இங்குமங்கும், ஊர் ஊராக, ஓயாமல் அலைந்து வாழ்க்கையையே ஒட்டு மொத்தமாக வீணாக்கிக்கொண்டுதான் இருப்பார்கள் ....... இவரின் அருமை பெருமைகளை அறியாதவர்கள்.

  அருமையான பதிவு. பதிவுக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

  அன்புடன் கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா.

   Delete
 6. ஜே மாமி நலமோ... மிக அருமையான கதை... எங்கே போயிருந்தீங்க? பல நாட்களாகக் காணவில்லையே உங்களை.

  இப்போ கோபு அண்ணன் தான் வெளியே கூட்டி வந்தாரோ?...

  வரைந்த படங்கள் மிக அழகு.

  ReplyDelete
  Replies
  1. அதிரா, மாமி ரொம்ப நலம். ஆனா கணினி கிட்டதான் வரவே முடியவில்லை.

   அப்பப்ப காணாம போறதே எனக்கு வழக்கமாச்சு.

   உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. ஒவ்வொரு நிகழ்வும் வாய் பிளக்கும் ஆச்சர்யம்தான். ஓவியமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆச்சி ஸ்ரீதர்

   வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   Delete