Friday, January 8, 2016

அனுமன் ஜெயந்தி

ஆஞ்சனேயருக்கு துளசி மாலை, வடைமாலை, கனிமாலை என்று சாற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதில் வெண்ணெயும், செந்தூரமும் தனிரகம். வெண்ணெய்க் காப்புக்குப் பின்னாலும், செந்தூரம் சாற்றுவதற்குப் பின்னாலும் நுட்பமான பல உண்மைகள் ஒளிந்துள்ளன.
இதில் செந்தூர ஆஞ்சனேயன் சிறப்பு என்ன என்பதை புராணரீதியாகத் தெரிந்துகொண்டால், செந்தூர ஆஞ்சனேயன் சந்நிதியின் சிறப்பும் நமக்குப் புலனாகிவிடும்.
இந்த செந்தூரச் சிறப்பைத் தெரிந்துகொள்ள சற்று ராமாயண காலத்துக்குள் நுழைவோம்.



ராமனும் சீதையும் வனவாசத்தில் வாழ்ந்து வரும் சமயம், சீதை வனத்திலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட வருகிறாள்.
கூந்தலிலிருந்து நீர் வடிந்திட அவள் முகமும் நிலவைப்போல பளிச்சிடுகிறது. எப்போதும் திலகம் தரித்த நிலையில் இருக்கும் அவள் முகத்தில் அப்போது திலகமில்லாத நிலை. அதைப் பார்க்க சீதைக்கு பதட்டமாகிறது. அதாவது வழியிலுள்ள சுனை நீரில் அவள் முகம் பளிச்சிடுகிறது.
திலகமில்லாமல் ஒரு வினாடிகூட இருக்க அவள் மனம் விரும்பவில்லை. குறிப்பாக நெற்றிவகிட்டில் குங்குமம் வைத்துக்கொள்வதால் சுமங்கலித்தன்மையும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், வீட்டில் நிறைந்த செல்வமும் உண்டாகு மென்பது வகிட்டுத் திலகம் பின்னாலுள்ள ரகசியம்.
அதை குளிக்கும்போதுகூட சீதை பிரிய மனமில்லாது போகிறாள். அப்போது அங்குவரும் ராமன் அவள் முகம் வாடியதை வைத்தே காரணத்தை அறிந்தவனாக, “சீதை, இப்போதே இங்கேயே உனக்குத் திலகமிடுகிறேன் பார்க்கிறாயா?” என்று திரும்புகிறான். ராமன் நின்ற இடத்திற்கு அருகில் ஒரு சிவப்புநிறப் பாறை. பாதரசமும் கந்தகமும் கலந்த இயற்கை தாதுக்களாலான பாறைஅதன் பொடிதான் செந்தூரம்.
அந்தப் பாறையை தடவியபடி ஓடைநீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீரால் பாறையை அழுந்தச் சுரண்டிக் குழைக்கவும், செந்தூர அஞ்சனம் மைபோல திரண்டது. உடனேயே அதை சீதையின் நெற்றி வகிட்டில் வைத்த ராமன் அப்படியே அவள் கன்னம், தாடை என்று தடவி அவளுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டான். ஏற்கெனவே சீதை நல்ல சிவப்புஅந்த சிவப்போடு செந்தூரமும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?
இந்த சம்பவத்தை சீதை தன் அசோகவனத் தனிமையில் எண்ணி எண்ணிப் பார்த்து கண்ணீர் சிந்தும் வேளையில்தான், அனுமன் சீதையைக் கண்டு, அண்ணல் ராமன் தந்த கணையாழியைத் தந்து தானொரு ராமதூதன் என்பதை உணர்த்து கிறான்.
இவ்வேளையில் சீதை அனுமனை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்ட நிலையில், அனுமனிடம் தனக்கு ராமபிரான் ஆசையாக செந்தூரப் பொட்டு வைத்ததைக்கூறி, “ஆஞ்சனேயாஅவருடனான இதுபோன்ற நினைவுகள்தான் என்னை உயிரோடு வைத்துள்ளன. இங்கே நான் செந்தூரத்துக்கு எங்கே போவேன். அது இருந்தால் அவரே என் அருகில் இருப்பதுபோல்என்கிறாள்.
அடுத்த நொடியே சீதைக்கு செந்தூரம் தேடி அனுமனும் புறப்படுகிறான்.
செந்தூரத்துக்காகப் புறப்பட்ட அனுமன், வெகுசீக்கிரமே கைநிறைய செந்தூரத்தோடு திரும்பிவந்து சீதா பிராட்டியிடம் நீட்டுகிறான்.
சீதையிடம் ஒரே மகிழ்ச்சி.
அதை மோதிர விரலால் தொட்டு முதலில் தன் நெற்றித் திலகமாக வகிட்டில் இட்டுக்கொண்டாள். பின் புருவ மையத்தில். செந்தூரத் திலகத்தோடு சீதையைப் பார்க்கவும் அனுமனிடம் ஒரு சிலிர்ப்பு. சீதை ஏற்கெனவே நல்ல சிவப்பு. அந்த சிவப்போடு செந்தூர சிவப்பு சேரவும், மேலும் மெருகேறி அவளது முகம் மாலைச் சூரியன்போல இதமாய் ஜொலித்தது. அனுமனின் கண்களும் அந்தக் காட்சியில் பனித்துப் போகின்றன.
இது ஒரு கட்டம்!
இன்னொரு கட்டம் அயோத்தியில்
ராமபிரான் இராவணவதம் புரிந்து சீதையைமீட்டு அயோத்திக்கு வந்து, மீண்டும் ராஜாராமனாக ஆட்சி புரியும் சமயம்! அனுமன் அங்கே  நீங்காது இருக்கிறான். ஒருநாள் சீதை இதேபோல் செந்தூரம் இட்டுக்கொள்வதைப் பார்த்தவன்-
தாயேஇந்த செந்தூரம் உங்கள் முகத்துக்கு பெரும் பொலிவைத் தருகிறது. அதேசமயம் நெற்றியில் புருவ மையத்தில் இதை இட்டுக்கொள்வதோடு, வகிட்டின் தொடக்கத்திலும் தாங்கள் இதை இட்டுக் கொள்வது எதனால்?” என்று கேட்கிறான். சீதையும் புன்னகையோடு பதில் கூறுகிறாள்.
அனுமனே! ஒரு பெண்ணின் நெற்றித் திலகம்தான் அவள் ஒரு சுமங்கலி என்பதை உணர்த்துவதாகும். இதில் வகிட்டில்தான் அந்த மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே அங்கே பொட்டினை இடும்போது லட்சுமி கடாட்சம் ஏற்படுவதோடு, என்றும் கணவனைவிட்டு நீங்காமலிருக்க அந்த தேவி அருளுவாள். அவள் எப்படி திருமாலின் மார்பில் நித்யவாசம் புரிகின்றாளோ, அப்படி நானும் என் பதியான ராமச்சந்திர மூர்த்தியின் மார்பில் நித்யவாசம் புரிவதோடு, என்றும் அவரை விட்டு நீங்காமல் இருப்பேன். அவரும் என்னுடன் இருப்பார்…”
இதைச்சொல்லி முடிக்கும்போது சீதையின் கண்களிரண்டும் கண்ணீரால் நிரம்பிவிடுகின்றன. அது இராவணனால் ஏற்பட்ட பிரிவை அவளுக்குள் ஞாபகப்படுத்திவிட்டது. அதைப் பார்த்த அனுமனும் பதைத்துப் போனான்.
அம்மாஇப்போது எதற்குக் கண்ணீர்? இது ஆனந்தக் கண்ணீரா துக்கக் கண்ணீரா என்று தெரியவில்லையேஎன்றான்.
இரண்டும்தானப்பாஅவரைப்பிரிந்து இலங்கையில் நான் கிடந்ததை எண்ணிப் பார்த்தேன். நெஞ்சு கனத்துவிட்டது. நல்லவேளைநான் இந்த செந்தூரத்தை இட்டுக்கொண்டதன் பலன்தான், என் பதி வேகமாக வந்து என்னையும் மீட்டு இன்று நான் அயோத்தி அரசியாகத் திகழ்கிறேன். இந்த செந்தூரம் பற்றி நீ கேட்கவும் பழைய நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை. இது மங்கலச் சின்னம் மட்டுமல்ல; என் பதியோடு என்னைச் சேர்த்து பிரியாமல் காத்திடும் ரட்சையும்கூட…” என்றாள் சீதை.
அனுமனுடைய உள்ளத்தில் சீதை கூறிய கருத்து ஆழமாகப் பதிந்துவிட்டது.
செந்தூரம் அணிந்துகொண்டால் சீதை மட்டுமா ராமபிரானைப் பிரியாமலிருப்பாள்? அதை அணிந்து கொண்டால் நானுமல்லவா அவரைப் பிரியாமலிருப்பேன்?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டவன், அடுத்த நொடியே செந்தூரம் தேடிப் புறப்பட்டுவிட்டான். பின் அதை எடுத்து சீதை போல் நெற்றியில் இட்டுப்பார்த்தான். சீதைக்கு அழகுசேர்த்ததுபோல அது தனக்கு அழகு சேர்க்கவில்லை என்று தோன்றியது… “ஒருவேளை சிறு பொட்டாக தரிக்கப்போய் இவ்வாறு தோன்றுகிறதோ? இதுவே பெரிதாக இருந்தால்?’ கேள்வி எழும்பி, நெற்றியில் பெரிதாக அதை இட்டுக் கொண்டான். அப்போதும் எதனாலோ திருப்தி ஏற்படவில்லை. பார்த்தான்செந்தூரத்தை முகம் முழுக்க பூசிக்கொண்டான். ஏதோ வேடம் போட்டுக்கொண்டதுபோல் இருந்தது. சரியென்று செந்தூரத்தை இரு கைகளிலும் பூசிக் கொண்டான்ஊஹூம்!
யாராவது பார்த்தால் ரத்த காயமா என்று கேட்பார்கள் என்று தோன்றியது. ஒரே வழிதான்செந்தூரத்தை எடுத்து உடல் முழுக்க பூசிக்கொண்டான். இப்போது ஓரளவு திருப்தியாக இருந்தது. அப்படியே போய் வெட்கத்தோடு சீதைமுன் நின்றான். சீதைக்கு முதலில் அது அனுமன் என்றே தெரியவில்லை. பயத்தில் அலறிவிட்டாள்.
தாயேதாயேநான் அனுமன்…” என்று கூறவும்தான் பயம் நீங்கியது.
இது என்ன கோலம் அனுமா?”
செந்தூரக் கோலம் தாயே…”
எதனால் இப்படி ஆனாய்?”
தாங்கள்தான் தாயே காரணம்.”
நானா?”
ஆமாம்நீங்கள்தானே செந்தூரம் தரித்தால் அண்ணலைப் பிரியாமல் இருக்கலாம் என்றீர்கள்?” அனுமன் கூறவுமே, சீதைக்கு அவன் செயலுக்கான காரணம் முழுதாய்ப் புரிந்துவிட்டது. கூடவே பெருஞ்சிரிப்பும் அவளிடம் ஏற்பட்டது. குலுங்கக் குலுங்க சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அனுமனையே அந்த சிரிப்பு வெட்கப்பட வைத்தது.
அம்மாஅம்மாஏன் சிரிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு சிரியுங்கள்…”
சிரிக்காமல் என்ன செய்வது? நான் செந்தூரத் திலகம் பற்றி சொன்னது சுமங்கலிப் பெண்களுக்குஉனக்கல்ல…” என்றாள்.
நான் அண்ணலைப் பிரிந்து விடுவேனா?”
அனுமன் அப்படிக் கேட்ட நொடி அவனது தாபம் சீதைக்கும் புரிந்தது. மளுக்கென்று அனுமனின் கண்களிரண்டும் பனித்துவிட்டன.
அனுமந்தாஎன் பிரபுவின்மேல் உனக்கு அத்தனை காதலா?” என்றுதான் கேட்டாள்.
அம்மாஅவரை என்று உங்களைச் சேர்க்காமல் ஏன் சொல்கிறீர்கள். என்வரையில் இனி நீங்கள் இருவரும்தான் என் தாய்- தந்தையர்நான் உங்கள் அணுக்கப்பிள்ளை.”
அதைக் கேட்டபடி ராமனும் வந்தான்.
செந்தூர அனுமனைக் கண்டு அவனும் வியந்தான். “என்னைப் பிரியாமலிருக்க இப்படி ஒரு கோலமா?’ என்று வியந்தவன், “ஆஞ்சநேயாநீ சுக்ரீவனின் உற்ற தோழன்! கிஷ்கிந்தையின் மந்திரிஅவனுக்கு உற்ற துணையாக இருந்து ஒரு மந்திரியாக நீ கடமையைச் செய்யத்தான் வேண்டும். அதன் பொருட்டு நீ என்னைப் பிரிவது பிரிவதாக ஆகாதுஉடலால் பிரிவது பிரிவேயல்ல. உள்ளத்தால் பிரிவதே பிரிவு. அப்படி ஒரு பிரிவு உன் வரையில் எந்த நாளும் எனக்கு ஏற்படாதுஎன்றான்.
அதைக்கேட்டு அனுமனின் கண்களில் கண்ணீர் பீறிட்டது.
ப்ரபோகடமையென்று சொல்லி என்னை ஒதுக்கப் பார்க்கிறீர்களா? சுக்ரீவனுக்கு நானில்லாவிட்டால் நீலன் இருக்கிறான், மாலி இருக்கிறான், ஜாம்பவான் இருக்கிறார்.
இப்படி பலர் இருக்கின்றனர். ஆனால் எனக்கு உங்களைப்போல ஒருவர் கிடைக்க முடியாதே…?”
அனும.. இப்போதுதானே கூறினேன்- உடலால்தான் பிரிகிறாய்; உள்ளத்தால் அல்லவென்று…”
உடலாலும் நான் பிரிய விரும்பவில்லை. உங்களுக்கு எல்லா சேவைகளும் செய்து கொண்டு நான் இங்கேயே இருக்க நீங்கள் அனுமதித்தே தீர வேண்டும்.”
அனுமந்தாஉன் அன்பு என்னை நெகிழ்த்துகிறது. நீ என்பால் பக்தி கொண்டது உண்மையானால், நான் சொல்வதைக் கேட்கத் தான் வேண்டும்…”
ப்ரபோஎன்னைப் பிரிக்காதீர்கள்…”
ஆஞ்சனேயாநான் சொல்வதைக் கேள்கேட்டாலே நீ என் பக்தன். என்னோடு இருப்பதைவிட மேலான கடமை உனக்கு இருக்கிறதுஅதற்காகவே நான் சொல்கிறேன்.”
ராமன் உறுதியாகக் கூறவும், அனுமனும் அதற்குக் கட்டுப்பட்டான். அப்போது சீதை சொன்னதுதான் அஸ்திரம்.
அனுமனே! உன் செந்தூரக் கோலம் பெரும் வணக்கத்திற்குரியதுவருங்காலத்தில் இந்த கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்குக்கெல்லாம் வற்றாத செல்வம் கிட்டும் லஷ்மி தேவி அவர்களோடு உடன் செல்வாள். அவர்கள் எதைப் பிரிந்திருந்தாலும் அது திரும்ப அவர்களுக்குக் கிட்டும்என்றாள்.
செந்தூர ஆஞ்சனேயனின் திருக்கோலத்துக்குப் பின்னால் இப்படி சிந்திப்பதற்கு ஒரு சரித்திரமே உள்ளது. அதுமட்டுமன்றி செந்தூர ஆஞ்சனேயன் கணபதியாகவும் மாறும் ஒரு விசித்திரம் இந்தக் கோலத்தின் பின்னாலுண்டு.
சிந்தூரன் என்று ஒரு அசுரன்!
இவனது ரத்தம் கீழே சிந்தினால் அதன் ஒவ்வொரு சொட்டிலிருந்தும் ஒரு சிந்தூரன் தோன்றும் ஆபத்துண்டு. எனவே அவனைக் கொல்வதென்பது அவனை விருத்தி செய்வதற்கு சமானம். எனவே அவனை வதம் செய்ய இயலாமல் தேவர்கள் தவித்தபோது, விநாயகப் பெருமான் துணிந்து சென்று வதம்செய்து, அவனது குருதி மண்ணில் விழாதபடி அவ்வளவையும் தானே உறிஞ்சிக் கொண்டார். இதனால் விநாயகப் பெருமானின் திருமேனி முழுக்கவே செக்கச்செவேலென்று சிவந்து செந்தூரம் பூசிக்கொண்டது போலானது.
அசுர ரத்தம் கணபதியின் உடம்பையும் பாடாய்ப்படுத்த முனைய, தேவர்கள் பாதரசத்தாலும் கந்தகத்தாலுமான செந்தூரத்தைதான் மருந்தாகப் பூசினர். இங்கே கணபதி வரையில் செந்தூரம் மருந்தாகியது.
ஒரு ஆச்சரியம்போல, சிவபெருமானின் மூத்தபிள்ளையான கணபதிக்கும் இங்கே செந்தூரக்காப்பு- சிவ கலையால் சிவாம்சமாக வந்த அனுமனுக்கும் செந்தூரக்காப்பு. இருவருமே விலங்கு முகமும் மனித உருவமுமானவர்கள். ஒருவன் அரக்கவதம் புரிந்து சிவந்தான்- இன்னொருவனோ அரக்கவதம் புரிந்தவனை பிரியாதிருக்கச் சிவந்தான். இருவருக்கும் பின்னாலே அரக்கம் அழிந்திருக்கிறது. ஆக செந்தூரம் அணிந்த கணபதியை வணங்கினாலும் சரி; அனுமனை வணங்கினாலும் சரி- நமக்குள் இருக்கும் அரக்கம் அழியும். சீதை சொன்னதுபோல மகாலட்சுமி உடன் வருவாள். பிரிந்துபோனது திரும்ப வந்துசேரும்.
இதெல்லாம் ஈடேற வேண்டுமென்றால் செந்தூரக் காப்பை நாம் இவர்களுக்கு சாற்றி மகிழலாம். இப்படி செந்தூரம் பூசப்பட்டவொரு செந்தூர ஆஞ்சனேயன் நிகழ்த்திய ரசமான சம்பவம் ஒன்றைக் காண்போம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தை ஒட்டியுள்ள தூண் ஒன்றில் அனுமன் சேவை சாதிக்கிறான். பொதுவில் சிற்ப வேலைப்பாடுள்ள புராதன ஆலயங்களிலுள்ள தூண்களில் பிள்ளையார் உருவம், அனுமன் உருவம் மற்றும் யாளி உருவம் செதுக்கப்படுவது வழக்கம். கோவில் கூரையைத் தாங்கிடும் தூண்கள் வழவழப்பாக வெறும் கல்தூணாக இல்லாமல், அதில் பூவேலைப்பாடு செய்து சில சிற்பங்களை உருவாக்கும்போது பார்க்கவும் அழகாய் இருக்கும். அத்துடன் இதுபோன்ற தூண்களை பிரதான சிற்பி தான் செதுக்காமல், தன் மாணவர்களைவிட்டு செதுக்கச் சொல்வார். அவர்களுக்கும் இது ஒரு பயிற்சிபோல் அமைந்துவிடும். மாணவ சிற்பிகளுக்கு பிள்ளையார் உருவமும் அனுமன் உருவமும் சுலபமாக வசப்படும். அதில் சிறுகுறை ஏற்பட்டாலும் பெரிதாகத் தெரியாது!
இப்படி மாணவச் சிற்பி ஒருவரால் செதுக்கப்பட்ட சிற்பம்தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தூணில் அனுமனாகக் காட்சி தருகிறது. பக்தி மிகுதியில் இந்த அனுமனையும் வழிபடும் ஒரு நிலை மெல்ல உருவாகியது.
மெல்ல மெல்ல வளர்ந்து இன்று செந்தூர ஆஞ்சனேயனாக அந்த அனுமன் மாறிவிட்டான்.
செந்தூரக் காப்பு சாற்றுவதற்கு பிற ஆஞ்சனேயர் கோவில்களில் சூழல் அனுமதிக்க வேண்டும். பெரும்பாலும் நமக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. இங்கேயோ நாம் யாரிடமும் கேட்கத் தேவையில்லை. கைக்கு அடக்கமான உருவம் வேறு. எனவே பலரும் செந்தூரத்தைக் கொண்டு வந்து அனுமனின் உருவம் மேல் பூசிவிட்டு பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

 நன்றி:  அனுமன் மகிமை - திரு இந்திரா சௌந்தரராஜன்.




 



 













11 comments:

  1. ஆஹா, நாளைய ’ஹனுமத் ஜெயந்தி ஜெயா’வை முன்னிட்டு இன்று இந்த மிக அருமையான பதிவு கொடுத்து அசத்தியுள்ளது, மிகவும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

    >>>>> சற்றே இடைவெளியுடன் தொடர்ந்து வருவேன் >>>>>

    ReplyDelete
  2. //ஆஞ்சனேயருக்கு துளசி மாலை, வடைமாலை, கனிமாலை என்று சாற்றி வழிபாடு செய்வது வழக்கம்.//

    இதில் வடைமாலை மட்டுமே எனக்கு மிகவும் பிடித்ததாகும்.:)

    ReplyDelete
  3. //அந்தப் பாறையை தடவியபடி ஓடை நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீரால் பாறையைஅழுந்தச் சுரண்டிக் குழைக்கவும், செந்தூர அஞ்சனம்மைபோல திரண்டது. உடனேயே அதை சீதையின் நெற்றி வகிட்டில் வைத்த ராமன் அப்படியே அவள் கன்னம், தாடை என்று தடவி அவளுடன் கொஞ்சிக்குலாவத் தொடங்கிவிட்டான். ஏற்கெனவே சீதை நல்ல சிவப்பு… அந்த சிவப்போடு செந்தூரமும்சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?//

    சீவி முடிச்சு சிங்காரிச்சு .....
    சிவந்த நெத்தியில் பொட்டும் வெச்சு .....

    பாட்டுப் போல மிகவும் ரம்யமான காட்சியாக உள்ளதே :)

    >>>>>

    ReplyDelete
  4. //வகிட்டில்தான் அந்த மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே அங்கே பொட்டினை இடும்போது லட்சுமி கடாட்சம் ஏற்படுவதோடு, என்றும் கணவனைவிட்டு நீங்காமலிருக்க அந்த தேவி அருளுவாள். //

    லக்ஷ்மி தேவியின் அருள் பற்றி இவ்விடம் சீதா தேவி மூலமாக அருள் வாக்காக கிடைத்துள்ளது, ஹனுமனுக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்தே. மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  5. //இது மங்கலச் சின்னம் மட்டுமல்ல; என் பதியோடு என்னைச் சேர்த்து பிரியாமல் காத்திடும் ரட்சையும்கூட…” என்றாள் சீதை. //

    யோசித்து வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள், அந்த நம் சீதா தேவி !

    >>>>>

    ReplyDelete
  6. //உடலால் பிரிவது பிரிவேயல்ல. உள்ளத்தால் பிரிவதே பிரிவு.//

    ஆஹா, ஸ்ரீராமனின் இந்தச்சொற்கள் எனக்காகவே சொன்னது போல உள்ளது. :)

    பலரையும் உள்ளத்தால் பிரியாமல் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன், நானும்.

    >>>>>

    ReplyDelete
  7. செந்தூர ஆஞ்சநேயன், செந்தூர கணபதி, செந்தூரத்தின் மஹிமை அனைத்தையும் அருமையாக அழகாக கதையாகப் புரியும்படிச் சொல்லியுள்ளீர்கள். படிக்க மிகவும் ஆனந்தமாகவும், மனதுக்கு ஹிதமாகவும் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. // சிவபெருமானின் மூத்த பிள்ளையான கணபதிக்கும் இங்கே செந்தூரக்காப்பு- சிவ கலையால் சிவாம்சமாக வந்த அனுமனுக்கும் செந்தூரக்காப்பு. இருவருமே விலங்கு முகமும் மனித உருவமுமானவர்கள். ஒருவன் அரக்கவதம் புரிந்து சிவந்தான்- இன்னொருவனோ அரக்கவதம் புரிந்தவனை பிரியாதிருக்கச் சிவந்தான். இருவருக்கும் பின்னாலே அரக்கம் அழிந்திருக்கிறது. ஆக செந்தூரம் அணிந்த கணபதியை வணங்கினாலும் சரி; அனுமனை வணங்கினாலும்சரி- நமக்குள் இருக்கும் அரக்கம் அழியும். சீதைசொன்னது போல மகாலட்சுமி உடன் வருவாள். பிரிந்து போனது திரும்ப வந்துசேரும்.
    இதெல்லாம் ஈடேற வேண்டுமென்றால் செந்தூரக்காப்பை நாம் இவர்களுக்கு சாற்றி மகிழலாம். //

    அச்சா, பஹூத் அச்சா. மிக நல்ல விளக்கம். மனதில் செந்தூரமாக ஒட்டிக்கொண்டு விட்டது. :)

    >>>>>

    ReplyDelete
  9. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தூணில் அனுமனாகக் காட்சி தருபவர் கைக்கு அடக்கமான உருவம். {மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதாயிற்றே!} எனவே பலரும் செந்தூரத்தைக் கொண்டு வந்து அனுமனின் உருவம்மேல் பூசிவிட்டு பிரார்த்தித்துக் கொள்கிறார்கள் என்பது மேலும் இனிய செய்தியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. அழகிய படங்களுடன் அற்புதமான செய்திகளை ஹனுமத் ஜெயந்திக்காக விசேஷமாக அள்ளித்தந்துள்ள ஜெயந்திக்கு என் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    அன்புடன் கோபு அண்ணா

    oooooooooo

    ReplyDelete
  11. அனுமன் ஜெயந்தி பற்றி
    அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete