Tuesday, September 15, 2015

பிள்ளையார்பட்டி ஹீரோ



 

 







இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடு செய்து, விரதமிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம் அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.  




இந்த ஆண்டு ஆவணி மாதம் 31ஆம் நாள் வியாழக்கிழமை 17.09.2015 இந்த விரத தினம் சம்பவிக்கின்றது.   




பிள்ளையாரின் அவதார தத்துவம்.


பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.




உண்மையில் விநாயகர் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடாட்ப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேஷன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். அது சம்பவித்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது.





 அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.