Monday, November 9, 2015

தீபாவளி - பகுதி 2



தீபாவளிக்கு பட்டாசு கட்டாயம் வெடிக்க வேண்டுமா?






     தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.  மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் எதுவும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது. 

     ’ஸ்மிருதி கௌஸ்’ என்ற ஸ்தோத்திரத்தில், இது பற்றி சொல்லப்பட்டுள்ளது.

”துலா ஹம்ஸ்தே ஸ்ஹஸ்ராம்சௌ ப்ரதோ ஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்’
என்ற இந்த ஸ்லோகத்தில் ‘துலா மாசமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று ‘உல்கா’ எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது.  அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும்.
     இதில் வரும் ’பூத’ என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும்.  அதாவது, நரக சதுர்த்தி எனப்படும் தீபாவளி. ’தர்சம்’ என்ற வார்த்தை ‘அமாவாசை’யைக் குறிக்கும்.  ஐப்பசி மாத அமாவாசை, இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம்.
காரணம் என்ன? ‘பித்ரூணாம்’ என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது.   பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள்.


இந்த வருடத்தில் இருந்து, பட்டாசு வேண்டாம்.  மத்தாப்பு மட்டும் வாங்கி கொளுத்துங்கள், நம் முன்னோர்களுக்காக.
 
 

தீபாவளி - பகுதி 1.



பெற்ற மகனை அழித்த கதை
 


மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்ற போது அவரது ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்த பிள்ளையே நரகாசுரன்.  ‘வாத்தியார் பிள்ளை மக்கு’ என்று சொல்வார்கள்.  அது போல், கடவுளின் பிள்ளையாகவே இருந்தாலும், நரகாசுரன் கெட்டவனாக இருந்தான்.  பிரம்மாவை நினைத்து கடும் தவமிருந்து தனக்கு யாராலும் அழிவு வரக்கூடாது என்று வரம் கேட்டான்.  ‘பிறந்தால் மரணமுண்டு’ என்ற பிரம்மா ‘உனக்கு யாரால் அழிவு வர வேண்டும்?” என்று அவனையே முடிவு செய்து கொள்ளச் சொன்னார்.

      புத்திசாலித்தனமாக கேட்கிறோம் என்று நினைத்து “என்னைப் பெற்றவளைத் தவிர யாரும் என்னை அழிக்கக்கூடாது” என்று நிபந்தனை விதித்தான் நரகாசுரன்.  பிரம்மாவும் ஒப்புக் கொண்டு விட்டார். பெற்றவள் பிள்ளையைக் கொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில் தான், இவ்வாறு நரகாசுரன் வரம் பெற்று வைத்திருந்தான்.


கடவுளின் பிள்ளை, சாவு இல்லை என்ற திமிரில் இந்திர லோகத்துக்குள் புகுந்து தேவர்களை இம்சிக்க ஆரம்பித்தான்.  அவர்கள் பயந்து போனார்கள்.  ஒரு வழியாக பகவானிடம் புகார் சென்றது. 
 பிள்ளையென்றும் அவர் பார்க்கவில்லை.  

 பூமாதேவி அப்போது சத்தியபாமாவாக அவதரித்திருந்தாள். அவளறியாமலே அவளைக் கொண்டே நரகாசுரனை அழித்தார் பரமாத்மா.

உண்மையறிந்த அவள் பெருமாளிடம், “என் மகன் கொடியவனே ஆயினும், என் கையாலேயே அவனை அழித்தது வருத்தமாக இருக்கிறது.  அதே நேரம், அவன் அழிந்த நாள் தேவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு மட்டுமல்ல! இந்த உலகம் முழுமைக்கும் கிடைக்கட்டும், அவன் இறந்த நாளில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும்,  அவ்வாறு குளிப்பவர்களுக்கு அகால மரணம், கோர மரணம் ஆகியவை ஏற்படக்கூடாது” என்று வரம் பெற்றாள்.  


விசேஷ நாளன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது சாஸ்திரத்துக்கு பொருந்தாததாக இருக்கிறது.  ஆனால், பூமாதேவி அந்தக் குளியலின் போது நீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் வந்து குடியேற வேண்டும் என்றும் வரம் பெற்றாள்.  இந்தக் குளியலுக்கு ‘கங்கா ஸ்நானம்’ என்றும் பெயர் வந்தது.  கங்கைக்கு போய் குளிக்க முடியாதவர்கள், தீபாவளியன்று வீட்டில் குளித்தாலும் அது கங்கையில் குளிப்பதற்கு நிகராக சொல்லப்படுகிறது. 

பெற்ற மகன் இறந்த நாளைக்கூட, ஒரு திருநாளாக கொண்டாட அனுமதி தந்தவள் பூமாதேவி.  இதனால்தான், பூமா தேவையைப் போல் பொறுமை வேண்டும் என்று பெரியவர்கள் இளையவர்களுக்கு புத்திமதி சொல்கிறார்கள்.