Tuesday, January 20, 2015

அபிராமி பட்டர்


 திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்த பக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்து வந்தார்.
ஆனால், ஊராரில் பலர் இவரது அருமை, பெருமைகளை அறியாது, இவரை ஊனும், கள்ளும் உண்டு திரியும் பித்தர், வாமாசாரத்தவர் என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு புறம் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அபிராமிபட்டர் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. அவர் எந்நேரமும் அன்னை அபிராமியையும் அமிர்தகடேஸ்வரரையும் எண்ணித் தொழுது, தியானித்து வந்தார்.

ஒரு முறை தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று கடலாடி விட்டுத் திரும்புகையில் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரரையும், அபிராமியன்னையையும் வழிபடுவதற்குக் கோவிலுக்கு வந்தார்

அப்போது அபிராமியன்னையின் திருக்கோவிலில் இவ்வுலக நினைவு ஏதுமின்றி அம்பிகையின் மீதான தியான நிலையில் இருந்தார் அபிராமி பட்டர். அரசரும் அவரது பரிவாரங்களும் வந்த ஆரவாரம் எதுவும் அவருக்குத் தெரியவில்லை.
அவரது மேனியில் இருந்த தெய்வீகப் புத்தொளியைக் கண்ட அரசர், அருகிலிருந்தோரிடம் இவர் யார்? என்று கேட்டார். அப்போது அருகிலிருந்தவர்கள், இவர் ஒரு பித்தர். ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுபவர், ஊனும், கள்ளும் உண்டு திரிபவர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கூறினர்.
அதைக் கேட்ட அரசர் ஒன்றும் பேசாது, உள்ளே போய் அபிராமியன்னையை வழிபட்டுத் திரும்பினார். திரும்புகையில் மீண்டும் பட்டரைப் பார்த்தார். அவர் முகத்தில் வீசும் ஒளி கண்டு, ஏதேனும் பேச எண்ணி, அருகில் சென்று பட்டரே, இன்று என்ன திதி? என்று வினவினார்.
மனதில் முழுமதி போன்று ஒளி பொருந்திய அபிராமி அன்னையின் நினைவிலிருந்த பட்டர், அந்த அன்னையின் அகக்காட்சி இன்பத்தில் திளைத்திருந்ததால் இன்று பௌர்ணமி என்று விடையளித்தார்.

அதுகேட்ட அரசரும், மற்றவர்கள் அவரைப்பற்றிக் கூறியவை உண்மையே என்றெண்ணி அகன்றார்.
பின் தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர், நிகழ்ந்ததை அறிந்து பெரிதும் வருந்தினார். மற்றவர்கள் முன் தனக்கு இழிவு ஏற்படுமாறு நடந்து கொண்டோமே என்று எண்ணி, தன்னைப் பழியிலிருந்து அபிராமி அன்னையே காத்திட வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அபிராமி சன்னிதி முன் ஆழமாக ஒரு குழி வெட்டி, அதில் நெருப்பை மூட்டி, அதன் மேலே ஒரு விட்டத்தில் நூறு ஆரங்கள் கொண்ட உறி ஒன்றைக் கட்டி, அதில் அமர்ந்து கொண்டார்.

அபிராமி அன்னையை வணங்கி, அன்னை தனக்கு ஏற்பட்ட பழியைத் துடைக்காவிட்டால், உயிர் துறப்பேன் என்று கூறி, உதிக்கின்ற செங்கதிர் எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடத்தொடங்கினார்.
ஒவ்வொரு பாடலின் முடிவில் (அந்தத்தில்) உள்ள சொல்லை அடுத்த பாடலின் தொடக்கமாகக் (ஆதியாக) கொண்டு பாடும் அந்தாதி வகைப் பாடல்களை அவர் பாடியபோது, ஒவ்வொரு பாடல் முடிவிலும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அரிந்து கொண்டு வந்தார். மாலையில் கதிரவன் மறையும் நேரமும் வந்தது. அப்போது 79 & ஆவது பாடலாகிய,
விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க
ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோடென்ன கூட்டினியே!

என்னும் பாடலைப் பாடி முடித்தார். உடனே, அன்னை அபிராமி வெளிப்பட்டுக் காட்சி தந்தாள். தன் காதிலிருந்த தோடு ஒன்றினைக் கழற்றி அன்னை வானில் வீச, அது முழு நிலவாக ஒளி வீசியது


மேலும் அன்னை பட்டரை நோக்கி, அன்பனே, அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடிப்பாயாக என ஆணையிட்டு மறைந்தாள்.
அபிராமி பட்டரும் அன்னையின் கருணையை எண்ணி மகிழ்ந்து, துதித்து 100 பாடல்களைப் பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.
இதை அறிந்த சரபோஜி மன்னரும் அபிராமி பட்டரிடம் வந்து வணங்கி, அவருக்கு ஏராளமான மானியங்களைக் கொடுத்தார் என்று அபிராமி அந்தாதி தோன்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது.
அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலன் தருவதாகக் கூறுகிறார்கள். சான்றாக, உதிக்கின்ற செங்கதிர் எனத் தொடங்கும் முதல் பாடல் நல்வித்தையும், ஞானமும் தரும் எனவும், நின்றும் இருந்தும் கிடந்தும் எனத் தொடங்கும் 10 – ஆம் பாடல் மோட்ச சாதனம் பெறவும், தண்ணளிக்கென்று முன்னே பலகோடி எனத் தொடங்கும் 15- ஆம் பாடல் பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறவும் உதவும் எனக் கூறப்படுகிறது. இப்படியே 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.
 

ஒரு தை மாத அமாவாசை நாள் அன்று அபிராமி பட்டர் உலக்குக்கு அளித்த ‘அபிராமி அந்தாதி’யை தை அமாவாசையாகிய இன்று நாமும் படித்து பலன் பெறுவோம்.

4 comments:

 1. அபிராமி பட்டர் பக்தியினைப் பற்றிய மிகவும் அருமையான அழகான கதை. பகிர்வுக்கு நன்றிகள். [சொல்லடி...... அபிராமி....... வானில் சுடர் வருமா ... இல்லை எனக்கு இடர் வருமா ...... சொல்லடி அபிராமி ..... பாடல் எஸ்.வி.சுப்பையா நடிப்பில் நினைவுக்கு வந்தது]

  அன்புடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோபு அண்ணா, அந்தப்பாடலும், அவர் நடிப்பும் மறக்க முடியாதவை. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 2. படங்கள் எல்லாமும் அழகாக உள்ளன. மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் கூகுளாண்டவர் போட்ட பிச்சை.

   Delete