ரதசப்தமி!
பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், தை முதல் நாள் தொடங்குகிறது என்று சொன்னாலும், அந்தப் பயணம் தைமாதம் ‘சப்தமி’ நாளில்தான் ஆரம்பமாகிறது. திருப்பத்தில் ஓடிவரும் ஏழுபேரும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தாமதப்படும் என்பதை விளையாட்டுப் போட்டியில் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல ஏழு குதிரைகளும் ஒரு சேரத் திரும்பி, பயணம் தொடங்கும் நாள் தை மாத சப்தமி. சூரியனின் ஒற்றைச் சக்கர ரதத்தின் உத்தராயணப் பயணம் அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அதனால், ‘ரத சப்தமி’ என்று கொண்டாடப்படுகிறது இந்தத் திருநாள்.
இந்த நாளில், எருக்க இலைகளை தலையில் வைத்தபடி கிழக்கு நோக்கி நீராட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதனால், சூரியனின் கிரணங்கள் எருக்க இலையின் வழியே நம் உடலில் படிந்து, நோய்களை குணப்படுத்துகின்றன என்று வரையறுக்கிறார்கள். திருமங்கலக்குடியின் தலவிருட்சமும், சூரியனார் கோயிலின் தல விருட்சமும் எருக்குதான். ‘எருக்கு இலையில் தயிர் சாதத்தை வைத்து உண்டால், எருக்கின் அணுவளவு சத்து உணவில் கலந்து, உடலில் சேர்கிறது. அதனால், தொழுநோய் குணமாகும் என்கிறது திருமங்கலக்குடி தல புராணம்.
ஜோதிட சாஸ்திரம், ‘ஆரோக்கியம் தருபவன் சூரியன்’ என்று சொல்கிறது. அதர்வண வேதம், ‘சூரியனை வழிபடுவதால், உடல் நலம் சிறக்கும்’ என்று குறிப்பிடுகிறது. இந்த நாளில், வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலமிட்டு சூரியனை வழிபடுவது விசேஷமானது. இந்த நாளில் விரதம் இருப்பதும் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் வடை, இனிப்பு வகைகள் நிவேதனம் செய்வதும் சிறப்பானது.
சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்பதியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருமலையப்பன். பத்துநாள் விழாக்களை ‘பிரம்மோற்சவம்’ என்பார்கள். அந்த நாளில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி உலா வருவார். இந்த ரத சப்தமி சமயத்தில், ‘ஒரே நாளில் ஏழு வாகன உலா’ என்பதால், ‘அர்த்த பிரம் மோத்ஸவம் என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள்.
திருமலை, ஏழுமலைகளை கொண்டது என்றால், ஸ்ரீரங்கம் ஏழு பிராகாரங்களைக் கொண்டது. இங்கும் ‘நம்பெருமாள்’ ரத சப்தமியை விமரிசையாகக் கொண்டாடுகிறார். தை மாதத்தில், சூரியனை விஷ்ணு என்ற சொல்லால் குறிப்பதால், பெருமாள் கோயில்களில் இந்த விழா, சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது போலும்.
சூரியனை வழிபட்டு, விசேஷ பலன்களைப் பெறவும், புதிய செயல்களைத் தொடங்கவும், இந்த நாள் மிகச் சிறப்பானது. இந்த நாளில், விரதம் மேற்கொள்வது, தடைகளைப் போக்கி, காரியங்களை கைகூடச் செய்யவல்லது. பிதுர் லோகத்துக்கு அதிபதியாகவும், ஆத்ம காரகனாகவும் விளங்கும் சூரியனுக்கான இந்த விரதம், உடல் நலம், மன நலம், நற்குணப் பெருக்கம், செல்வ வளம், காரிய வெற்றி ஆகியவற்றைத் தரவல்லது.
குறிப்பாக, அதிகாலையில் எழுந்து, சூரியனை வழிபட்டு, இந்த விரதத்தை முறையாகப் பின்பற்றத் தொடங்கினால், வெற்றிகளின் அணிவகுப்பாக வாழ்க்கை அமையும்.
வாயுபுத்திரனான ஹனுமன், சூரியனிடமிருந்தே கல்வி கற்றான் என்பதையும், வைசம்பாயனர் சூரியனிலிருந்துதான் சுக்ல யஜுர் வேதம் பயின்றார் என்பதும் புராணச் செய்திகள். உஷா, பிரதியுஷா என்று இரு மனைவியரும், யமன், யமி, சனீஸ்வரன் உள்ளிட்ட புத்திரர்களும் சூரியனுக்கு உண்டு என்கின்றன புராணங்கள். சுக்ரீவனையும், கர்ணனையும் சூரிய புத்திரர்களாக விவரிக்கின்றன இதிகாசங்கள்.
சூரியத் தலங்கள்!
‘உச்சிக்கிழான் கொட்டம்’ என்ற பெயரில், பூம்புகாரில் சூரியன் கோயில் இருந்ததாகச் சொல்கிறது சங்க இலக்கியம். சூரியனின் ஒளி அமைப்பை, உதயம், நண்பகல், மாலை என்று மூன்றாகக் கொண்டு, மூன்று இடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்த வரிசையில், உதயகால சூரியனுக்கான கோயில்தான் முதலில் அமைந்தது. அதை அமைத்தவன் சாம்பன் என்றும், அந்தக் கோயிலே இன்றைய ஒடிசா மாநிலத்தில் உள்ள ‘கொனார்க்’ என்று சொல்கிறார்கள்.
நண்பகலில் ஜொலிக்கும் சூரிய பகவானுக்கான கோயில், சந்திரபாகா நதிக்கரையில் அமைந்தது. அந்தக் கோயிலுக்கே ‘மூலஸ்தானம்’ என்று பெயர். அதுதான் மருவி, இன்றைய ‘மூல்தான்’ (பாகிஸ்தானில் உள்ள இடம்) என்கிறார்கள். சந்திரபாகா நதியே, ‘சீனாப்’ நதி என்றும் சொல்லப்படுகிறது. இன்று அப்படி ஓர் ஆலயம் இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை.
மூன்றாவது, மாலைச் சூரியனுக்கான ஆலயம், ‘மொதேரா’. இது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. என்றாலும், தமிழகத்தில் சூரியனுக்காக அமைந்த ஒரே கோயில் சூரியனார் கோயில்தான். இதைத்தவிர, சூரியன் பெயரால் அமைந்த தலை ஞாயிறு, திருப்பரிதி நியமம், ஞாயிறு போன்றவையும் சூரியன் வழிபட்ட தலங்களாக அமைந்துள்ளன.
உலகெங்கும் சூரிய வழிபாடு!
எகிப்தை ஆண்ட பாரோ மன்னர்கள், தங்களை சூரியன் வழி வந்தவர்களாகவே கருதினர். கிரேக்கர்கள், ‘அப்போலோ’ என்றும், ரோமர்கள், ‘ஹைபீரியன்’ என்றும் சூரியனை வழிபட்டனர். அமெரிக்க பழங்குடிகளான இன்காஸ் இனத்தவரும் சூரிய வழிபாடு செய்ததாக, குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரத சப்தமி பற்றிய படங்களும், விளக்கங்களும், சிறப்புக்களும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteநான்கூட முன்பு இதுபற்றி ஓர் பதிவு வெளியிட்டிருந்தேன்.
தேடிப்பார்த்து இணைப்பினை அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன் கோபு
http://gopu1949.blogspot.in/2012/01/blog-post_31.html
ReplyDelete