Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Wednesday, June 11, 2014

அறிமுகம்






நொடிக்கு நொடி நன்றி கூறும் நிலையில் என்னை வைத்திருக்கும் இறைவனை வாழ்த்தி, வணங்கி இந்த வலைப்பூவை தொடங்குகிறேன்.

ஆன்மீக பயணங்கள், ஆன்மீக செய்திகள் தொடர்பாக ஒரு தனி வலைப்பூவைத் தொடங்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.  


சின்ன வயசில் திருமயிலை கபாலீசுவரர் கோவிலே கதி என்று இருந்த எனக்கு இந்த ஆசை வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  ஆமாம் மாலையில் பள்ளி விட்டதும் தினமும் நாங்கள் படையெடுத்தது அங்கே தானே.  விளையாட்டு, ஸ்லோகங்கள் கத்துக்கொண்டது எல்லாமே அங்கே தானே.


அதே போல் சிறு வயதில் திரு பரணீதரன் அவர்களின் ஆன்மீகப் பயணக் கட்டுரைகளை படித்திருக்கிறேன்.  அதுவும் ஆன்மீகப் பயணங்களைப் பற்றி எழுதும் ஆசைக்கு வித்திட்டிருக்க வேண்டும்.


என் பெண் அடிக்கடி என்னை கிண்டல் செய்வாள், “எங்கம்மா கோபுரத்தைப் பார்த்தா ஓடிப் போயிடுவா”ன்னு.  ஆமாம் கோபுர தரிசனமே கோடி புண்ணியம்ன்னா, கோவிலுக்கு உள்ள இருக்கற தெய்வத்தை தரிசித்தா………….


என் கணவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் (இப்ப ரிடையர் ஆகிட்டு ஜாலியா பேத்தியைக் கொஞ்சிண்டிருக்கார்.  லயாக்குட்டிக்கும் முதல்ல தாத்தாதான்.  அப்புறம்தான் பாட்டி கூட) வெளியூர் டூர் போவார்.  ஒரு முறை அப்படி அவர் வெளியூர் சென்றிருந்த போது ஒரு நாள் திடீரென்று நடு இரவில் முழிப்பு வந்தது.  ஏதோ சத்தம் கேட்பது போல் இருக்கிறதே என்று பார்த்தால் என் மகன் தான் ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன என்று கேட்டபோது ”வெளியே ஏதோ சத்தம் கேட்டது, நாய் வேற விடாம குறைக்கிறது” என்றான். 

இதே பையன் அவங்க அப்பா வீட்டில் இருந்தால் கும்பகர்ணனாய் தூங்குவான்.    

அந்த நேரம் நான் நினைத்தேன். “அடடா! இதே தத்துவம்தான்.  நாம் எப்பொழுதும் அந்த இறைவன் நம்முடன் இருப்பதால்தான் (அவன் எப்பொழுதும் நம் அருகில் இருப்பதாய் நம்புவதால்தான்) நிம்மதியான வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று.”


எனவே அந்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாய் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கிறேன்.