ராம நாம மகிமை! - காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்
ஒரே ஒருமுறை சொல்லிய ராம நாம மகிமை!- காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள் இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றி காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள் சொல்லிய கதை இது:
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்…’ என்றார். அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் அவனும் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ’ ஒரே ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்…’ என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே…’ என்று கூறியிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்…’ என்றான்.
திகைத்த யமதர்ம ராஜா, 'ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது…’ என்று எண்ணி, 'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்…’ என்றார்.
'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா…’ என்றான்.
'இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்…’ என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.
இந்திரனோ, 'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்…’ என்றார்.
'யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்…’ என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.
அவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்…’ என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.
அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை…’ என்றனர்.
'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே… இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா…’ என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.
அலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்; அவனருளாலே அல்லல்களை வெல்வோம்!
'தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்…’ என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.
மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கிறோம்.
திருமந்திரம்!
பற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்ததுவே துணை
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளுமாறே!
விளக்கம்: ஆசைக்கு அளவில்லை; உண்மையான பற்று என்பது, அறவாழ்வை மேற்கொள்வதே! இதை உணர்ந்து, மனம் பொருந்தி, அடுத்தவருக்கு கொடுத்து வாழுங்கள். அதுவே, உங்களுக்கு துணையாகும். அதுவே, இறைவனுக்கும் பிடித்த செயல் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்
நான்கு படங்களும் கொள்ளை அழகு.
ReplyDeleteஸ்ரீராமர் கோதண்ட ராமராகவும், பட்டாபிஷேக ராமராகவும் ....
பழுத்த பழமாக நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா !!
>>>>>
வரவுக்கு மிக்க நன்றி கோபு அண்ணா
Deleteஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளின் முகமலர்ந்த சிரிப்பு அருமையோ அருமை.
ஸ்ரீ ராம நாம மஹிமை சொல்லில் அடங்காது.
ReplyDeleteஇதில் ’ரா’ என்பது ராமனாகிய மஹா விஷ்ணுவையும், ‘ம’ என்பது மஹேஸ்வரனான சிவனையும் குறிப்பதாகும்.
ஹரியும் சிவனும் ஒன்றே என்பதைக்கூறிடும் நாமமாகும்.
வேதங்கள் மொத்தம் ஐந்து (1) ரிக் வேதம் (2) சுக்ல யஜுர் வேதம் (3) கிருஷ்ண யஜுர் வேதம் (4) ஸாம வேதம் (5) அதர்வண வேதம்.
இதில் நடு நாயகமாக உள்ள கிருஷ்ண யஜுர் வேதத்தில், நடு நாயகமாக வருவதே, சிவனைப்பற்றிச் சொல்லும் ’ஸ்ரீருத்ரம்’ ஆகும்.
முழுக்க முழுக்க மஹாவிஷ்ணுவான ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிச் சொல்லும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாகத்திலும்கூட, சிவ-ஷக்தி பற்றிச் சொல்லிடும் ‘தாட்சாயணி’ கதையும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது.
சைவ-வைஷ்ணவ பேதங்களே பார்க்கக்கூடாது என்பதற்கு இதெல்லாம் ஓர் பிரமாணமாகும்.
கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி கோபு அண்ணா
Deleteஹரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவன் வாயில மண்ணு.
அருமை. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
ReplyDeleteநாமும் ராம நாமம் சொல்லி பாக்கியவான் ஆவோம் ஸ்ரீராம்
Deleteதிருமந்திரத்தின் விளக்கம்
ReplyDeleteதிருத்தமாக நன்கு சொல்லப்பட்டுள்ளது.
மிக்க நன்றி.
Deleteஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ReplyDeleteஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
வழக்கமாக 3 பின்னூட்டங்கள் கொடுப்பீர்கள்.
Deleteஇந்த பதிவில் நான்காக கொடுத்ததற்கு மிக்க நன்றி.
உங்கள் வரவும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என்றும் தேவை.
நன்றியுடன்
ஜெயந்தி ரமணி
திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார், யோகியாவதற்கு முன், குரு உபதேசம் பெற்று 'ராம நாம' ஜெபம், அல்லும் பகலும் பைத்தியக்காரனைப்போல் விடாது சொல்லிக்கொண்டிருந்தாராம். எப்போதும் ராம நாமம். அதனால் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றார் என்று படித்திருக்கிறேன். (அவர் காஞ்சி முனிவரின் ஆக்ஞையின்பேரில் சந்தித்ததும், இருவரும் காஞ்சி மடத்தில், வாய் வார்த்தையின்றி மானசீகமாகப் பேசிக்கொண்டதும், பிறகு அவர் விடைபெற்றதும் படித்திருக்கிறோம் அல்லவா?)
ReplyDeleteநானும் படித்திருக்கிறேன். இதெல்லாம் படித்தாலும், ராம நாம ஜெபம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நடப்பதில்லை. இப்படி படிக்கும் போது தோன்றுகிறது. ஆனால் தினப்படி வேலைகளில் உழன்று உழன்று மறந்து விடுகிறது.
Deleteஉங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி.
”ஸீதையைத்தேடி தெற்கேயுள்ள சமுத்திரத்தைத் தாண்டி யாரால் இலங்கைக்குச் செல்ல முடியும்?” என்று சுக்ரீவனின் வானரப்படைகளில் உள்ள ஒவ்வொரு குரங்குகளையும் பார்த்து ஜாம்பவான் கேட்கிறார்.
ReplyDelete”என்னால் பத்து யோஜனை தூரம் தாண்டமுடியும்” என்று முதல் குரங்கு சொல்லுகிறது.
“என்னால் முப்பது யோஜனை தூரம் தாண்ட முடியும்” என்று இரண்டாவது குரங்கு சொல்கிறது.
“நான் நூறு யோஜனை தூரமும் தாண்டி விடுவேன் ஆனால் திரும்பி வரமாட்டேன்” என்கிறது மற்றொரு மூன்றாவது குரங்கு.
ஏனெனில் இவைகள் யாவும் தனது பலத்தினை மற்றுமே பார்த்தன. அதனால் இதுபோல மட்டுமே அவைகளால் சொல்ல முடிந்தன.
இறுதியில் ஜாம்பவான் ஹனுமனைப்பார்த்து, “உம்மால் இந்த சமுத்திரத்தைத் தாண்டி ஸீதா தேவியின் இருப்பிடத்தைத் தேடி அறிந்து வர முடியுமா? எனக் கேட்கிறார்.
அதற்கு ஹனுமான் சொல்கிறார்:
”இங்கிருந்து புறப்பட்டால் ஒரே தாவாகத் தாவி இலங்கையில் போய்த்தான் குதித்து நிற்பேன். அங்கு ஸீதா தேவியைத் தேடிப்பார்ப்பேன். அங்கு எங்கும் இல்லாவிட்டால் நேராக தேவலோகத்திற்குச் சென்று தேடுவேன். அங்கும் இல்லாவிட்டால் நேராக பாதாள லோகத்திற்குப் போவேன். அங்கும் இல்லாவிட்டால், இலங்கைப் பட்டிணத்தையே இராவணனோடு சேர்த்து, பெயர்த்துக் கொண்டு வந்து ஸ்ரீராமபிரான் முன்பு வைத்து விடுவேன். காரியத்தை சாதித்து விட்டு மட்டுமே திரும்பி வருவேன்” என மிகவும் மன உறுதியுடன் கூறுகிறார்.
இப்பேர்ப்பட்ட வினயத்துடன் கூடிய மன உறுதி ஹனுமனுக்கு ஏற்படக் காரணம், அவர் தன் பலத்தை நம்பவில்லை. ’ராம நாம’ பலத்தை மட்டுமே நம்பினார்.
மற்ற குரங்குகள் எல்லாம் அதனதன் பலத்தை மட்டுமே நம்பின.
பகவானையும், பகவன் நாமாவையும் மட்டுமே நம்புவோர் என்றுமே கடவுளால் கைவிடப்படார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரமு
Deleteப்ரும்மஸ்ரீ ஹரிஜி என்பவர் (திருமதி. விஸாஹா ஹரி அவர்களின் ஆத்துக்காரர்) சொல்லும் பல்வேறு உபந்யாஸங்களையும், பக்திக் கதைகளையும் தினமும் இரவு கேட்டுவிட்டுத்தான் நான் தூங்குவது வழக்கம்.
ReplyDeleteஅதில் நேற்று இரவு என் உள்ளம் உருக நான் கேட்க நேர்ந்தது: ‘பத்ராசலத்தில் ஸ்ரீராமருக்கு மிக அழகாகக் கோயில் எழுப்பிய கோபண்ணா என்னும் இராமதாஸர்’ அவர்களின் சரித்திரக் கதை.
அதில் ஹனுமனைப்பற்றிய மேற்படி நிகழ்ச்சியை அவர்கள் ஓரிடத்தில் எடுத்துச் சொன்னார்கள். அதைத்தான் நான் மேலே தங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன்.
மிக்க நன்றி. சத் விஷயங்களைக் கேட்க, படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி நானும் கேட்கிறேன்.
Delete