Monday, July 17, 2017

புதுக்கோட்டை பகுதி 1இந்த மாதம் 13, 14, 15 மூன்று நாட்களும் புதுக்கோட்டையில் தங்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது என் அக்காளின் இரண்டு பேரன்களின் உபநயனத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புடன்.   எந்த எந்த கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு பட்டியலுடன் கிளம்பி விட்டோம்.  அத்தனை கோவில்களையும் தரிசிக்க ஆசை தான்.  ஆனால் கிடைத்த நேரத்தில் தரிசித்த கோவில்களைப் பற்றி எழுதுகிறேன்.

முதலில் நாங்கள் சென்றது அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில். 
சுவாமி : அருள்மிகு கோகர்ணேசுவரர், அருள்மிகு மகிழவனேசர்.
அம்பாள் : அருள்மிகு பிரகதம்பாள், அருள்மிகு பெரியநாயகி, அருள்மிகு மங்கள நாயகி.
தீர்த்தம் : கங்கா தீர்த்தம் (சுனை), மங்கள தீர்த்தம் (மகிழவன நாதர் திரு முன்பு).
தலவிருட்சம் : மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).
தலச்சிறப்பு : இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.  திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும்.  குடவரைக் கோயில்கள்  என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை  அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.  திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு முன்னால் உள்ள  மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும், வடப்புறச் சுவர்ப் பகுதியில்  கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மண்டபப் பகுதி முழுவதும் நான்கு  தூண்களின் மீது அமைந்துள்ளது போல் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.  சந்நிதியின்  இடப்புறம் உள்ள சுவரைக் கற்பனையால் விலக்கி விட்டுப் பார்த்தால் விநாயகர் திருமேனிக்குப்  பின்புறமாகவும் பாறைச் சரிவு நீண்டிருப்பதைக் காணலாம்.  இந்தப் பாறைச்சரிவின் அடிப்புறத்தில்,  தரையோடு ஒட்டியதுபோல் ஏழு பெண் தெய்வங்களின் திருவுருவங்கள் குடைவரைக் கலையாகச்  செதுக்கப் பட்டிருக்கின்றன.  இடப்புறம் வீரபத்திரர் திருமேனியும், வலப்புறக் கோடியில் விநாயகர்  திருமேனியும் விளங்க, இடையில் ஸப்த கன்னிமார்கள் அல்லது ஸப்த மாதாக்கள் என்னும்  திருநாமத்தோடு ஏழு பெண் தெய்வங்களின் திருமேனிகள் வடிக்கப்பட்டுள்ளன.  பைரவி, இந்திராணி, மாகேஸ்வரி, நாராயணி, வராஹி, கௌமாரி, பிடாரி - என்ற இந்த ஸப்த மாதர்களின் திருமேனிகள் வெகு நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. 
இந்தச் சிற்ப வடிவங்கள் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவர்களின் கலைப்பணிகளாக இருந்த போதிலும்  இந்தக் கருவறைகளை உள்ளடக்கிய மண்டபப் பகுதிகள் பதினோராம் நூற்றாண்டுச் சோழர்களின்  கலைப்பணி என நம்பப்படுகிறது.  கி.பி. 1012 இல் அரசுரிமையேற்ற பரகேசரி முதலாம் ராஜேந்திரச்  சோழன் காலத்தில் இந்த பிரகதாம்பாள் திருக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என  கருதப்படுகிறது.  
எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பாக, திருகோகர்ணம்  திருக்கோயிலில்தான் மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம்  பெற்றுள்ளன.  இந்த மாடிப் பகுதியில் முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு ஒன்றும்  காணப்படுகிறது.  இந்த மாடியில் முருகன் வள்ளி தேவஸேனாவுடன் எழுந்தருளியுள்ள  திருக்கோவிலுக்குத் தென்புறம் உள்ள பாறைச் சரிவில் காணப்படுகிறது.  கட்டுமானங்கள்  இல்லாமல் பார்த்தால் கோகர்ணேசுவரர், சப்த கன்னிமார் திருமேனிகள் உருவாகக்கப்பட்டுள்ள  பாறையின் மேல் பகுதியில் இக்கல்வெட்டு அமையும்.  முருகன் கோயிலை ஒட்டி வடபுறச்  சுவருக்கு அப்பால் பாறை நீண்டு உயர்ந்திருக்கிறது.  மேற்குப் புறப்பாறைப் பிளவில் சுனை, வற்றாத  நீர்வளத்தோடு விளங்குகிறது.  சுனை அருகே நான், என் கணவர், என் தம்பிமுருகன் சந்நிதியில் நானும், என் கணவரும்
இந்த கோவில் நித்யோசவம் என்று சொல்லக்கூடிய மிக பெரிய சிறப்புடையதாக இருந்தது.  நித்யோசவம் என்றால்  தினந்தோறும் திருவிழா நடத்துவதாக ஐதீகம்.  சமீப காலத்தில் 12 மாதமும் திருவிழாக்கள் நடந்த கோவில் முந்தய காலத்தில் 20  நாட்களுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடும் 10 நாட்களுக்கு வெளியிலேயே திருவிழா என்று சொல்லப்படும்.  காலத்தினுடைய  நிர்பந்தத்தினால் இப்போது 12 மாத திருவிழாக்கள் எல்லாம் நின்று போய் 3 திருவிழாக்கள் தான் நடைபெறுகிறதுருத்ராட்ச லிங்கம்

 இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோவில் தெற்கு  வடக்காக 680 அடி நீளத்திலும் கிழக்கு மேற்காக 190 அடி அகலத்திலும் அமைந்துள்ளது.   இக்கோவில் தெற்கு  நோக்கியும், சந்நிதிகள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. 
தல வரலாறு : இத்திருத்தலதிற்கு புராணக்கதை ஒன்று உள்ளது.  அதன் அடிப்படையிலேயே திரு-கோ-கர்ணம் என்ற ஊர்ப் பெயரும் அமைந்தது.  ஒருமுறை அமரருலகில் தேவர்களின் தலைவனான  இந்திரனின் அவை கூடியிருந்த போது, எல்லாரும் குறித்த நேரத்தில் அவைக்கு வந்து விட்டார்கள்.   கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் இயல்புடைய தெய்வப் பசுவான காமதேனு மட்டும் சற்றுக்  காலம் கடந்து வந்ததால் தேவேந்திரனுக்குக் கடும்கோபம் உண்டாயிற்று.  இதனால் காமதேனுவை,  நீ பூமியில் போய் பசுவாகப் பிறப்பாயாக என்று சாபம் தந்து விட்டார்  தேவேந்திரன்.  காமதேனுப் பசு  பூமியில் வந்து சாதாரணமான பசுவாகப் பிறப்பெடுத்து அதை மாமுனிவர் வசிட்டர் அன்போடு  பேணிப் பாதுகாத்து வந்தார். பூமியில் வந்து பிறந்துவிட்ட போதிலும் தெய்வப் பசுவுக்கு  மனிதர்களோடு பேசும் ஆற்றல் இருந்திருக்கின்றது.  அத்துடன் தன் வினையையும்,  வினைப்பயனையும் உணர்ந்த நிலையிலும் இருந்தது.
ஒரு நாள் மாமுனி வசிட்டரை வணங்கிய பசு தன்னடைய சாப விமோசனத்துக்கு ஏதேனும்  வழியுண்டா என்று கூறி அருளுமாறு வேண்டி நின்றது.  மாமுனிவர் வழி சொன்னார், பாரதத்தின்  தென்பகுதியில் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழ மரங்கள் அடர்ந்த காடு ஒன்று உள்ளது.   அங்கே கபிலர் என்னும் முனிவர் ஒருவர் தவம் இயற்றுகிறார், நீ அவரைச் சென்றடைந்தால் உன்  சாபம் நீங்கும், வடமொழியில் வகுளம் என்றால் மகிழமரம் என்று பொருள்.  வகுள ஆரண்யம்  என்பது மகிழமரக்காடு.  அவ்வாறே பசுவும் வகுளாரண்யத்தை அடைந்து கபில முனிவரிடம்  சென்று வணங்கித் தன்னுடைய வரலாற்றைச் சொன்னது. பசுவின் கதையைக் கேட்டு  மனமிரங்கிய கபில முனிவர் அந்த மகிழவனத்தில் ஒரு சிவாலயம் இருப்பதாகவும் அதில்  வகுளவனேசுவரர் என்கிற திருநாமத்தோடு மகாதேவர் அருள்பாலித்துக் கொண்டிருப்பதாகவும்  சொல்லி தினமும் நீ கங்கை நீரால் வகுளவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் உன் சாபம்  அகலும் என்று வழி காட்டினார்.
அவ்வாறே தினமும் கங்கை நீரைக் தன்னுடைய காதுகளில் ஏந்திக்கொண்டு மகிழவனக்  கடவுளுக்குப் புனித நீராட்டிக் கொணடிருந்தது பசு.  இந்நிலையில் அது ஒரு கன்றையும் ஈன்று  பாலூட்டிக் கொண்டிருந்தது.  வழக்கமான இறைவன் பணியில் காதுகளில் கங்கை நீரோடு ஒருநாள்  அது மகிழ வனத்துக்கு வரும் வழியில் ஒரு வேங்கைப்புலி வழிமறித்தது, உடனே அதைத் தனக்கு  இரையாக்கிக் கொள்ளவும் முயன்றது வேங்கை.  வேங்கையிடம் மன்றாடியது பசு, நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீர் சுமந்து வந்து கொண்டிருக்கிறேன், என்னை இப்போது  விட்டுவிடு, அபிஷேகம் முடித்துவிட்டு என்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிப் பசியாற்றிவிட்டுத்  தவறாமல் உனக்கு இரையாக வந்து விடுகிறேன், என்னை நம்பு.  நான் சொல் மாற மாட்டேன்....  தயவு செய்து என்னை மேலே செல்ல அனுமதித்து வழியை விடு, என்று வேண்டிக் கேட்டுக்  கொண்டது.

சிவபிரானுக்கு அபிஷேகப் பிரியர் என்கிற திருநாமம் உண்டு.  தனக்கு தினமும் கங்கை நீரால் திருமுழுக்காட்டி வரும் பசுவின் பக்தியில் மனம் பறிகொடுத்த சிவபெருமான் - வகுளவனேசுவரர்.   அதை மேலும் சோதித்து முக்தியளிப்பதற்காகவே வேங்கை வடிவெடுத்து வந்திருந்தார்,  வழிமறித்தார்.  பசுவின் விருப்பத்தை ஏற்று உடனே அதற்கு வழிவிட்டது வேங்கை.  சொன்ன  சொல் தவறாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டுத் தன்னுடைய இளங்கன்றுக்கும்  பாலூட்டிவிட்டு வேங்கையின் முன்னால் இரையாக நின்றது பசு.  பசுவின் வாக்கு தவறாத பண்பால்  மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் ரிஷப ஆரூடராகத் தம் தேவியோடு காட்சியளித்து அந்தக்  காமதேனுப் பசுவுக்கு நற்கதி அருளினார்.

நுழைவு வாயில்வேங்கையாக உருமாறி சிவபெருமான் பசுவை வழிமறித்த இடம் திருவேங்கை வாசல் என வழங்கப் படுகிறது, பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது.  அபிஷேகம் செய்தது போக  எஞ்சிய கங்கை நீரை காமதேனுப்பசு பாறையைக் கொம்புகளால் கீறி அதில் வடித்துச் சேமித்தாம்.   அது கபில தீர்த்தம் என்கிற பெயருடன் இன்றைய திருகோகர்ணம் கோகர்ணேஸ்வரர் திருக்கோவில்  மலைச் சுனையாக, வற்றாத பெருங்கருணையாய் என்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது, இதை  கங்கா தீர்த்தம் எனவும் வழங்குவதுண்டு.
பாடியோர் : அப்பர் சாமிகள் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம்.
 

மகிழ மரம்
பிரகதாம்பாள் மேல் உருகி அருமையாக பாடிய என் அக்காளின் கடைசி சம்பந்தி தொடரும்........23 comments:

 1. மிகப் பழைய கோவில் என்று தெரிகிறது. புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் மூலம் எங்களுக்கும் தரிசனம் கிடைக்கச் செய்தமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். 500 - 1000 வருடங்களுக்கு முற்பட்ட கோவிலாம். அருமையான குடவரைக் கோவில். நேரம் கிடைக்கும் போது சென்று தரிசித்து வாருங்கள். நாங்கள் விடியற்காலை 6 மணிக்குச் சென்றோம். ஐந்தாவது, ஆறாவது படங்களில் இருக்கிறாரே அவர் எங்களுடன் வந்து கோவில் முழுக்க சுற்றி காண்பித்தார்.

   Delete
 2. //இந்த மாதம் 13, 14, 15 மூன்று நாட்களும் புதுக்கோட்டையில் தங்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது//

  அதானே பார்த்தேன். ஆளையே காணுமே, என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ? என்று மிகவும் கவலைப்பட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. 12ம் தேதி மாமனார் ஸ்ரார்த்தம். இரவு 745க்கு ட்ரெயின். போகும் முன் உங்களுக்கு message அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் 11ம் தேதி மாலையில் இருந்து நாங்கள் கிளம்பும் வரை நெட் வேலை செய்யவில்லை. BSNL இல்லை. ACT connection.

   Delete
 3. //முதலில் நாங்கள் சென்றது அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில். //

  ஆஹா, கொடுத்து வைத்த மகராஜி.

  ’கோகர்ணன்’ என்ற பெயரைக்கேட்டதும், நொச்சூர் வெங்கட்ராமன் அவர்கள் ஸ்ரீமத் பாகவத்தில் ‘கோகர்ணன்’ என்பவரைப் பற்றி சொன்ன கதைதான் என் ஞாபகத்துக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. //ஆஹா, கொடுத்து வைத்த மகராஜி. //

   எல்லாம் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள்.

   Delete
 4. //சுனை அருகே நான், என் கணவர், என் தம்பி//

  சுனையும், சுனை நீரும் அருமை. சுனை நீர் அருகே நீரும், நின் கணவரும், நின் தம்பியும் ஜோராக உட்கார்ந்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு உயரத்தில் பாறை மேல் எப்படி சுனை இருக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது.

   Delete
 5. //முருகன் சந்நிதியில் நானும், என் கணவரும்//

  முருகன் சந்நிதியில் .... தங்கமான தம்பியைப்போய் இப்படி அநியாயமாகக் கழட்டி விட்டுட்டேளே .... ஜெயா. :)

  ReplyDelete
  Replies
  1. அப்ப யாரு புகைப்படம் எடுப்பதாம்?

   Delete
 6. //இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.//

  ஆஹா, இன்று ஸோமவாரம் எங்களுக்கும் அபூர்வ தரிஸனம்
  இந்தப் பதிவின் மூலம் கிடைத்துள்ளது.

  இருப்பினும் எல்லா புண்ணியமும் உங்களுக்கு மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. ஆலய தரிசனம், அனந்த கோடி புண்ணியம் அனைவருக்கும்.

   Delete
 7. மகிழ மரத்தைக்காட்டி மகிழ்ச்சியளித்துள்ளீர்கள். ஆனால் ஒர் சின்ன குறை .....

  //என் அக்காளின் இரண்டு பேரன்களின் உபநயனத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புடன். //

  இரண்டு வடுக்களுக்கும் பிக்ஷையரிசி போட்டிருப்பீர்கள். மிகப்பெரிய சீர் லாடும், முறுக்கும் கிடைத்திருக்கும். அதுவும் இரட்டை உபநயனம் வேறு ....

  படத்திலாவது காட்டியிருக்கலாம்.

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
  Replies
  1. கோபு சார்... உங்கள் வீட்டில் உப'நயனம் நடக்கும்போது நான் வந்து கலந்துகொள்கிறேன். எதுக்கும் எக்ஸ்டிரா சீர் லாடும், முறுக்கும் தயார் செய்து வையுங்கள் (அல்லது பத்திரிகையோடே இதனை அனுப்பினாலும் சந்தோஷம்)

   Delete
  2. //நெல்லைத் தமிழன் July 19, 2017 at 1:12 AM
   கோபு சார்... உங்கள் வீட்டில் உப'நயனம் நடக்கும்போது நான் வந்து கலந்துகொள்கிறேன். எதுக்கும் எக்ஸ்டிரா சீர் லாடும், முறுக்கும் தயார் செய்து வையுங்கள் (அல்லது பத்திரிகையோடே இதனை அனுப்பினாலும் சந்தோஷம்)//

   மூன்று பேரன்களில் ஒருவனுக்கு பூணல் போட்டாச்சு. மீதி இருவரும் (அநிருத் + ஆதர்ஷ்) பொடிப்பயல்களாக உள்ளனர். எப்படியும் 2-3 வருடங்களாவது ஆகலாம். பார்ப்போம்.

   இந்த ஜெயாவுக்கும் எனக்கும், நெய்யில் செய்த மிகப் பெரிய ருசியான உதிர் உதிரான சீர் அதிரஸம், சீர் லாடு, சீர் முறுக்கு முதலியவற்றில் ஒரு மிகப்பெரிய டீல் பாக்கி உள்ளது. ஏனோ மறந்தது போல உள்ளார்கள்.

   அதுபற்றிய விபரங்கள் கொஞ்சம் இதோ இந்தப் பதிவினில் உள்ளது. படிச்சுப்பாருங்கோ, ப்ளீஸ்:

   http://gopu1949.blogspot.in/2014/10/9.html

   Delete
  3. படத்தில் காட்டினா சரியா வராது. உங்களை வந்து தரிசிக்கும் ஆசை இருக்கிறது. பார்ப்போம். விரைவில் திருச்சி வந்து DEAL ஐ REEL ஆக்காமல் REAL ஆக்கப் பார்க்கிறேன்.

   Delete
 8. நெரூரில் அதிஷ்டானம் அமைந்துள்ள ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திராள் ஸ்வாமிகள் பற்றிய செய்திகளையும் இங்கு காட்டியிருப்பது கூடுதல் சுவாரஸ்யமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. அறிய வாய்ப்பை கொடுத்த ஆசார்யர்களுக்கு நன்றி.

   Delete
 9. //தொடரும்........//

  அடடா...... இதுவே மிகப்பெரிய பதிவாக உள்ளது. இன்னும் உள்ளதா?

  படிக்க / பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய கோவில்களுக்குச் சென்றோம். ஒரு 8 - 10 EPISODE ஓடும்.

   Delete
 10. "அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில்" - திருத்தல தரிசனம் கண்டேன். மகிழ்ந்தேன்.

  உருத்திராட்ச லிங்கமும், உங்கள் கணவர் நின்றுகொண்டிருக்கும் போட்டோவில் உள்ள பாறையின்மேல் வைக்கப்பட்டுள்ள கல் தூண்களும் அருமையாக இருக்கின்றன. சிறப்புகள் தெரியாத மனிதப்பதர்கள்தான் லிங்கத்துக்குப் பின்னால் உள்ள சுவற்றில் கிறுக்கியிருக்கின்றனர்.

  பதிவு சிறிது நீளம். இதனை இரண்டு பகுதிகளாகக் கொடுத்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   தேர்வு எண்ணை கோவிலில் எழுதி வைத்தால் தேறி விடலாம் என்று நினைப்பவர்கள் இருக்கும்வரை இந்த கிறுக்கல்கள் தொடரும். நாம் ஒரு சிறிய இரண்டு படுக்கை அறை வீடு கட்டவே திணறுகிறோம். மகானுபாவர்கள் இவ்வளவு அருமையாக கோவில்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். நம்மால் கட்ட முடியாவிட்டாலும் அதை சரியாக பாதுகாத்து, பராமரிக்க செய்யலாம். மனிதப்பதர்கள் சரியான பதம்.

   Delete
  2. //பதிவு சிறிது நீளம். இதனை இரண்டு பகுதிகளாகக் கொடுத்திருக்கலாம்.//

   NOTED FOR FUTURE GUIDANCE.

   உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன் பதிவு நீளம் என்று.

   ஆலோசனைக்கு மிக்க நன்றி.

   Delete