Sunday, September 4, 2016

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.



விநாயகர் காயத்ரி

ஓம் தத் புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

நந்தோ தந்தி ப்ரசோதயாத்







விநாயகர் திரு நாமங்கள்  



கணேசன்

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும்

தலைவன்.



ஏகதந்தன் 

ஏக எனில் மாயை; தந்தன் எனில் 

மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் 

விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று 

என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் 

சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் 

ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு 

தந்தத்துடன் விளங்குபவர் என்றும் 

கொள்ளலாம்.  



சிந்தாமணி

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் 

மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் 

செய்பவன்.



விநாயகன்

வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு

யாரும் நிகரில்லாத தலைவன்.



டுண்டிராஜன்

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு 

வழிகாட்டுபவர்.



மயூரேசன்

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும்

பக்தர்களை மாயை நெருங்காமலும்

செய்பவன்



லம்போதரன்

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் 

பெரிதாகக் காணப்படும் வயிற்றினை 

உடையவன்



கஜானனன்

ஆணவம் எனும் யானையை அடக்கும் 

வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.



ஹேரம்பன் 

ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் 

ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து 

ரட்சிப்பவன்.



வக்ர துண்டன்



பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை 

தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை 

அன்னை உமாதேவி வைத்தார்.



ஜேஷ்டராஜன்

ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் 

முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி

அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் 

செல்பவன்.



நிஜஸ்திதி


உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் 

இருப்பவன். 




ஆசாபூரன்


எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் 

செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் 

புருசுண்டி முனிவர்.



வரதன்:  



வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.



விகடராஜன்



மாயையான உலகில், உண்மை 

பரம்பொருளாகத் திகழ்பவன்.



தரணிதரன்

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும்

காப்பவன்.



சித்தி - புத்தி பதி

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி 

எனும்இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் 

தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.



பிரும்மணஸ்தபதி:  


இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது

பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு 

ஆதாரமாக விளங்குபவர்.



மாங்கல்யேசர்

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் 

அழியாமலிருந்து அனைத்தையும் 

பரிபாலிப்பவர்



சர்வ பூஜ்யர்

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா 

தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக 

பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும்


 வணங்கப்படுபவர்.



விக்னராஜன்

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது 

வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் 

காப்பவர்






அருகம்புல்

ஒரு முறை தேவர்களை கொடுமைப்படுத்திய 
அனலாசுரன் என்னும் அரக்கனுடன் விநாயகப் 
பெருமான் போர் புரிந்தார்.   அப்போது, 
அனலாசுரனை தன் வாயில் போட்டு விழுங்கி
 விட்டார்.  உள்ளே சென்ற அரக்கனின் அனல் 
காரணமாக விநாயகரால் வெப்பத்தை தாங்கிக் 
கொள்ள முடியவில்லை.  முனிவர்கள் பலரும் 
எந்த முயற்சி செய்தும் பலன் இல்லை.  பிறகு 
அருகம் புல்லை மாலையாககட்டி போட்டதும்
 அனல் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.  அது 
முதல் விநாயகருக்கு அருகம்புல் மாலை 

அணிவிப்பது வழக்கமாயிற்று.




Wednesday, February 3, 2016

பல்லக்கு தூக்கிய எமன்



வீதியில் ராமா நாம சங்கீர்த்தனம் பாடியபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார்.
அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான்.
அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர்.
அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான்.
திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார்.
'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன் அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா என்றான்.
இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.
இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள் என்றார்.
யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.
அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.
அவரும் ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.
அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர்.
இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே...இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா ?? என்று சொல்லிபல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான் !!





Tuesday, January 26, 2016


 என் கணவரின் நெடு நாள் ஆசை, எந்த ஊருக்குச் சென்றாலும் இது போல் காமதேனு சிலை இருக்கிறதா என்று ஒவ்வொரு கடைக்கும் சென்று பார்ப்பார்.  பொதுவாக ஒரு பக்கம் லட்சுமியும், மற்றொரு பக்கம் விநாயகரும் இருக்கும் சிலைகள்தான் கிடைக்கும்.

  என்னை BOOK FAIRக்குத்தான் அழைத்துச் செல்லவில்லை.  இன்று மயிலை கபாலி கோவிலுக்குச் சென்றுவிட்டு அப்படியே GIRI TRADERS ல் ஏதாவது புத்தகங்கள் வாங்கிக்கொண்டுவருவோம் என்று  கட்டாயப்படுத்தி அவரை அழைத்துச் சென்றேன்.  என்ன ஆச்சரியம், GIRI TRADERSல் அவர் ஆசைப்பட்ட சிலை கிடைத்தது.   வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்து சந்தனம், குங்குமம் இட்டு, ஆராதித்தாயிற்று.   இன்று அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.





காமதேனு காயத்ரி மந்திரம்

ஓம் சுபகாயை வித்மஹே காமதாத்ரியை சதீமஹி தந்தோ தேனு: ப்ரசோதயாத்.
பசு காயத்ரி மந்திரம்:-
 
ஓம் பசுபதயேச வித்மஹே மகா தேவாய தீ மஹி தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.




பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.



லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள். பசுவும், தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.



வைகுண்டம், ஸத்யலோகம் போன்று கோலோகம் என்று உள்ளது. அதில் ராதிகையுடன் ஸ்ரீகிருஷ்ணன் பக்த ரக்ஷகனாக இருக்கிறார். அங்கு காமதேவனைப் படைத்து அதன் கன்றுகளை கோலோகம் முழுவதும் வைத்து கிருஷ்ணனும் ராதையும் பூஜை செய்வதாக தேவி பாகவதத்தில் இருக்கிறது. இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். கோமவை லட்சுமியாக பாவித்து வேதோக்த்த ஸ்ரீஸுக்தத்தினால் ஓம் ஸுரப்யை நம: என்னும் மந்திரம் சொல்லி ஆவாஹனாதி தூபதீப நைவேத்யம் முதலானவைகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்ய மற்றும் பிரும்ம தேவன் சரஸ்வதியுடனும் இந்திரன் இந்திராணியுடனும் பூஜை செய்தார்கள்.





நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை நமோ நம

கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே

நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம

நம: கிருஷ்ணப் பிரியாயை கவாம் மாத்ரே நமோ நம

கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்

ஸ்ரீதாயை தன தாயை வ்ருத்தி தாயை நமோ நம

சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம

யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம

இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி

யுக்தச்ச : படேத்

ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்

புத்ர வான் பவேத்



இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.



  1.  பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
  2. கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
  3. சிரம் - சிவபெருமான்
  4. நெற்றி நடுவில் - சிவசக்தி
  5. மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
  6. மூக்கினுள் - வித்தியாதரர்
  7. இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
  8. இரு கண்கள் - சந்திரர், சூரியர்
  9. பற்கள் - வாயு தேவர்
  10. ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
  11. ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
  12. மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
  13. உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
  14. கழுத்தில் - இந்திரன்
  15. முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
  16. மார்பில் - சாத்திய தேவர்கள்
  17. நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
  18. முழந்தாள்களில் - மருத்துவர்
  19. குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
  20. குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
  21. குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
  22. முதுகில் - உருத்திரர்
  23. சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
  24. அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
  25. யோனியில் - ஏழு மாதர்கள்
  26. குதத்தில் - இலக்குமி தேவி
  27. வாயில் - சர்ப்பரசர்கள்
  28. வாலின் முடியில் - ஆத்திகன்
  29. மூத்திரத்தில் - ஆகாய கங்கை
  30. சாணத்தில் - யமுனை நதி
  31. ரோமங்களில் - மகாமுனிவர்கள்
  32. வயிற்றில் - பூமாதேவி
  33. மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
  34. சடாத்களியில் - காருக பத்தியம்
  35. இதயத்தில் - ஆசுவனீயம்
  36. முகத்தில் - தட்சிணாக்கினி
  37. எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
  38. எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்