Thursday, January 26, 2017


*தெரியறதா?*
*தெரியலை.*

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது

மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை….

மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பா’ என்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்‌ஷா ஓட்டி.

கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.   கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுரு’ என்று சொல்லிட்டு வெளியே போனான்.
பெரியவர் கைமாறினார்.

பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது. உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வெள்ளைச் சட்டை. மேல் சட்டைப் பைக்குள் ஒரு மூக்குப் பொடி டப்பாவும் பத்துப் பதினைந்து ரூபாயும் தெரிந்தன.

தனியாக நடப்பதற்கே பெரிதும் சிரமப்பட்ட அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பெரியவா இருந்த இடம் அருகே விட்டார் சிப்பந்தி. மேடை போல் இருந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டார் பெரியவர். வலக் கையை நெற்றியில் வைத்து பெரியவா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்.

தான் இருந்த இடத்துக்கு எதிரே மஹாபெரியவா அமர்ந்திருப்பது அரைகுறையாக அவருக்குத் தெரிந்தது. இருந்த இடத்தில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தார் பெரியவா.

*பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தார் மஹாபெரியவா. இந்தப் பெரியவர் இந்த சாயங்கால வேளையில் ஏன் இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அந்த மகான்*?

ஒரு சிஷ்யன் ஓடோடி வந்து பெரியவா அருகே நின்றான். வாய் பொத்தி, ஏதோ ஒரு தகவலை குசுகுசுப்பாகச் சொன்னான். அதாவது பெரியவா தரிசனத்துக்காக அப்போது ஸ்ரீமடத்துக்கு சில முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பதாகவும், வெளியே அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னான். அன்று யாரையும் பார்க்க இயலாது என்றும் மறுநாள் காலை வருமாறும் தகவல் சொல்லி அனுப்பினார் மஹாபெரியவா. சிஷ்யன் ஓடிப் போய் விட்டான்.

தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சிலருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹாபெரியவா.

இப்போது அங்கு இருப்பது மஹாபெரியவாளும், உள்ளூர்ப் பெரியவரும் தான்.  இன்னமும் அந்தப் பெரியவர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மஹாபெரியவா அமர்ந்திருந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

*மஹாபெரியவா தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தார். இறங்கினார். பெரியவரை நோக்கி நடந்தார்*.

சிஷ்யர்கள் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் எந்த ஒரு பக்தருக்கும் அனுக்ரஹம் செய்வதற்காக மஹாபெரியவா இது போல் எழுந்து சென்று அவர்கள் பார்த்ததில்லை.

காஞ்சிபுரத்துப் பெரியவர் தான் அமர்ந்த இடத்திலேயே இருக்கிறார். தள்ளாத வயது அல்லவா! அவர் அருகில் சென்ற மஹாபெரியவா தன் தலையில் வில்வமாலை ஒன்றை வைத்துக் கொண்டு ‘தெரியறதா” என்று கேட்டார் தீர்க்கமாக.

கண்களை மிகவும் இடுக்கிக் கொண்டு பார்த்த பெரியவர் ‘ தெரியலை’ என்றார்.

இதை அடுத்து தனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் சுருக்கினார் மஹாபெரியவா. அருகில் இருந்த ஒரு புத்தம் புது ரோஜா மாலையைக் கையில் எடுத்தார் மஹாபெரியவா. தலையில் வைத்துக் கொண்டார். அதை பெரியவா தன் சிரசில் அணிந்த பிறகு அந்த ரோஜா மாலை இன்னும் அழகாகத் தெரிந்தது. இப்போது பெரியவரைப் பார்த்து ‘இப்ப தெரியறதா? என்று கேட்டார் மஹாபெரியவா.

ரொம்பவும் சிரமப்பட்டு உற்றுப் பார்த்த பெரியவர் ‘தெரியலை’ என்றார் மீண்டும்.

ரோஜா மாலையை எடுத்துத் தன் சிஷ்யனிடம் நீட்டினார் பெரியவா. அவன் ஓடோடி வந்து அதை வாங்கிக் கொண்டான். பிறகு ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்து அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டார் மஹாபெரியவா. ‘இப்ப தெரியறதா…. பாருங்கோ” என்றார் மஹாபெரியவா.





“ஊஹும்” என்பதாகத் தன் உதட்டைப் பிதுக்கினார் பெரியவர்.

அப்போது அந்த இடத்தில் இருந்த சிஷ்யர்கள் குழம்பிப் போனார்கள். ‘தெரியறதா? என்று பெரியவா எதைக் கேட்கிறார், ‘தெரியல’ என்று பெரியவர் எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் தவித்துப் போனார்கள். சிஷ்யர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்.

அதற்குள் யாரோ ஒரு சில பக்தர்கள் பெரியவா இருந்த இடத்துக்குள் நுழைய முற்பட்டு அவரை தரிசிக்க யத்தனித்தார்கள். இதை அறிந்த பெரியவா அவர்களை சைகை காட்டி வெளியே அனுப்பினார். சிஷ்யர்களும் அவர்களிடம் ஓடிப் போய் ‘இப்ப பெரியவா உங்களைப் பார்க்க மாட்டார்’ என்று சொல்லி அனுப்பினார்.

அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது. தான் எதிர்பார்த்து வந்தது இன்னமும் நிறைவேறவில்லை என்பதாக இருந்தது  காஞ்சிபுரத்துப் பெரியவரின் முகம். காஞ்சிபுரத்துப் பெரியவர் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?

*அது மகா பெரியவாளுக்கும் அந்தப் பெரியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்*.

*தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய பெரிய ருத்திராட்ச மணிகளால் கோர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துத் தலையில் வைத்தவாறு ‘தெரியறதா’ என்று கேட்டார் பெரியவா*.
அவ்வளவு தான்…*அதுவரை ஏமாந்து போயிருந்த பெரியவரின் முகம் திடீரென பிரகாசம் ஆனது. அவரது விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது*. ஏதேதோ பேச வாய் எடுத்தவருக்கு அந்தக் கணத்தில் அது முடியாமல் போனது.

மெள்ளச் சுதாரித்துக் கொண்டு ‘எல்லாமே தெரியறது பெரியவா. நல்லா தெரியறது பெரியவா’ என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அந்த பரப்பிரம்மத்தை நன்றியுடன் பார்த்தார். தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டு உயரே தூக்கி நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் பெரியவர். பிறகு உடல் வளைந்து கொடுக்காவிட்டாலும் சிரமப்பட்டுத் தரையில் விழுந்து அந்தக் கருணை தெய்வத்தை உளமார வணங்கினார்.






பிறகு அந்தப் பெரியவரே மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு முன்பாக நின்றார். அவரது திருமுகத்தையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கசியத் துவங்கிய நீர் வரத்து இன்னும் நிற்கவில்லை.
விரலைச் சொடுக்கி, சிஷ்யர்களை அருகே வரச் சொன்னார் மஹாபெரியவா. ஓடோடி வந்தனர்.

‘இவா வந்த ரிக்ஷா வெளில நிக்கும். அதுல பத்திரமா இவரை ஏத்தி அனுப்ச்சுட்டு வாங்கோ. சந்தோஷமாப் புறப்படட்டும்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியது அந்தக் கலியுக தெய்வம்.

*உடலிலும் உள்ளத்திலும் சந்தோஷம் கொப்பளித்த பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்தின் வாசலுக்குப் போனார்கள் சிஷ்யர்கள்*. தான் கூட்டி வந்த பெரியவர் வெளியே வருவதைப் பார்த்தவுடன், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரிக்ஷாக்காரன் ஓடோடி வந்தான். ‘வுடுங்க சாமி… இனிமே நா அவரை இட்டுகினு போயிடறேன்’ என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவுக்குள் பெரியவர் ஏறி அமர்வதற்கு உதவி செய்தான்.
பெரியவரை ரிக்ஷாவுக்குள் ஏற்றி அனுப்பிய சிஷ்யர்கள் இருவரும் மடத்துக்குள் நுழையும் போது பேசிக் கொண்டார்கள்.

‘உனக்குப் புரியறதாடா பெரியவா ‘தெரியறதா?ன்னு எதைக் கேட்டார்னு?- முதலாமவன்.

இல்லேடா…என்னைவிட ரொம்ப வருஷமா நீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே….. உனக்கே புரியலேன்னா எனக்கு எப்படிப் புரியும்? இது இரண்டாமவன்.

நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, இது மாதிரி ஒரு அனுபவத்தைப் பார்த்ததில்லை. பெரியவா தெரியறதா? ன்னு எதைக் கேட்டார்னும் புரியல. ‘தெரியல’னு அடிக்கடி அந்தப் பெரியவர் எதைச் சொன்னார்னும் புரியலை. ஆனா அவர் கண்ல ஜலம் வந்ததைப் பார்த்த உடனே என் கண்களும் ஈரமாயிடுச்சு. சமாச்சாரம்தான் என்னன்னு புரியாம ஒரே குழப்பமா இருக்கு’ என்று சொன்ன முதலாமவன் கொட்டாவி விட்டுக் கொண்டு தூங்கப் போயிட்டான்.

*இதற்கான விளக்கம் அடுத்த நாளே அனைவருக்கும் தெரிந்தது.*

அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெரியவர் இறைவனடி சேர்ந்த செய்தி ஸ்ரீமடத்துக்கு யார் மூலமாகவோ வந்து சேர்ந்தது.

முதல் நாள் மாலை ஸ்ரீமடத்துக்கு இந்தப் பெரியவர் வந்த போது அவருக்கு உதவிய ஊழியர்களும் சிப்பந்திகளும் சிஷ்யர்களும் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்கள்.

*அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகளின் பேச்சில் இருந்து இதற்கான விளக்கம் அனைவருக்கும் கிடைத்தது*.

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார் காஞ்சிபுரத்துப் பெரியவர். தன் தேகம் இந்தப் பூவுலகில் இருந்து மறைவதற்கு முன் கயிலைக் காட்சியைக் கண்டு தரிசிக்க விரும்பியிருக்கிறார். தான் விரும்பும் தரிசனம் எப்படியாவது மஹாபெரியவாளிடம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்பி ஒரு ரிக்ஷாக்காரரை அமர்த்திக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

*தன்னை நாடி வந்த உள்ளூர்ப்பெரியவரின் ஏக்கத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட மஹாபெரியவா, கயிலைவாசியான அந்த ஈசனின் சொரூபத்தை அவருக்குக் காட்டி அனுக்ரஹித்து மோட்ச கதி கொடுத்தார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்பட்டது*.



ஆக, *பெரியவாளின் திருமுகத்தில் ஈஸ்வர தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெரியவர் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் என்பது உறுதியானது*.

*சிவபெருமானின் ஓர் அம்சம் தான் மஹாபெரியவா என்று சொல்லப்படுவதுண்டு. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த சில பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசித்து, அத்தகைய தரிசனம் பெற்றிருக்கிறார்கள்*. அந்த வகையில் காஞ்சிபுரத்துப் பெரியவர் மறைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், அவருக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் காட்டி அருளி அருக்கிறார் மஹாபெரியவா.



அதனால் தான் ஒவ்வொரு முறையும் ‘தெரியறதா? என்று பெரியவா கேட்ட போதும் ‘தெரியல’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், *ருத்திராட்ச மாலையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதும், சாட்சாத் அந்த சிவபெருமானே பெரியவா முகத்திலே தரிசனம் தந்திருக்கிறார். இதன் பின்னால் அந்தக் காஞ்சிபுரத்துப் பெரியவருக்கு மோட்சம் கிட்டாமலா இருக்கும்*?




4 comments:

  1. இதனி மிகவும் அருமையாகவும், உருக்கமாகவும் எழுதி வெளியிட்டுள்ளீர்கள்.

    சாக்ஷாத் பரமேஸ்வரனின் அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் என்பது நம்மில் சில பேருக்கு மட்டுமே, அவரவர்களின் அனுபவங்களால் உணர முடிந்ததோர் பரம இரகசியமான விஷயமாகும்.

    ReplyDelete
  2. இன்று வெளியிட்டுள்ள நான்கு படங்களும் சூப்பரோ சூப்பர் !


    >>>>>

    ReplyDelete
  3. *தெரியறதா?*
    *தெரியலை.*

    என்ற தலைப்புத் தேர்வும் மிகச் சிறப்பாக உள்ளது. எனக்கும் இன்னும் ஏதேதோ பாராட்டிச் சொல்லணும் போலத் *தெரியறதா*னாலும் எழுத்தில் சொல்லத் *தெரியலை*.

    படித்து மகிழ்ந்தேன். கண் கலங்கியது. பகிர்வுக்கு நன்றிகள், ஜெயா.

    ReplyDelete
  4. என் முதல் பின்னூட்டத்தின் முதல் வார்த்தை :

    இதனி = இதனை

    ReplyDelete