Thursday, January 12, 2017

அடங்கிய வெள்ளமும், பெருகிய அன்னமும்!







ஒருமுறை சாதுர்மாஸ்ய விரதத்தை  பெரியவா பண்டரீபுரத்தில் அநுஷ்டித்தார். சந்த்ரபாகா நதிதீரத்தின் அருகே மாட்டுக்கொட்டகை ஒன்றில் தங்கியிருந்தார். 

பண்டரிபுரம்-ஷோலாப்பூர் ரோடில் உள்ள வேதவ்யாஸர் கோவிலில், வ்யாஸபூஜை செய்தார். அன்று ஊரே திரண்டது, பெரியவா தரிசனத்துக்காக.  ! பெரிய அளவில் அன்னதானமும் நடைபெற்றது. 

அதன் பிறகு வந்த தேவகிநந்தனின் அவதார தினத்தையும் வெகு விமரிசையாக கொண்டாடினார்கள். 

அந்த சமயத்தில் பண்டரீபுரத்தில் மழையான மழையும் பெய்து கொண்டிருந்தது..... 

சந்த்ரபாகா நதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. 

பண்டரீபுரத்தில் பெரியவா தங்கியிருந்த மாட்டுக் கொட்டகைக்குள்ளும் வெள்ளம் புகுந்து ஒரே வெள்ளக்காடாக ஆனது!   பெரியவா சற்று மேடான இடத்துக்கு சென்று அமர்ந்திருந்தார். 

இரவு முழுவதும் மழையும் நிற்கவில்லை; வெள்ளமும் வடியவில்லை! 

விடியற்காலை மூன்று மணியளவில், கொட்டகைக்குள் முழங்கால் அளவுக்கு ஜலம்! 

பெரியவா, அந்த முழங்காலளவு ஜலத்தில் இறங்கி நின்று கொண்டார்..... 

ஆஹா! தெய்வம் திருவாய் மலர்ந்து..... சந்த்ரபாகாவுக்கு உத்தரவிட்டது!

"போய்டு! போய்டு!....."


சிறிது நேரத்தில் மளமளவென்று ஜலத்தின் அளவு குறைய ஆரம்பித்துவிட்டது! வெள்ளம் வடிந்தது!

மதுரையில் மணிவாசகருக்காக வைகையில் வெள்ளத்தை பெருக்கெடுத்து ஓடவிட்ட சொக்கநாதன், இன்று சந்த்ரபாகாவில் வெள்ளத்தை வடிய வைத்து பண்டரீபுரத்தை ரக்ஷித்தான். 

ஆனால் அந்த வெள்ளத்தால், பாலம் மூழ்கிவிட, படகில் வந்து பக்தர்கள் பெரியவாளை தரிசனம் பண்ணினார்கள். 

மறுபடி யாத்ரையைத் தொடங்கினார். பண்டரீபுரத்துக்கு அருகில் விட்டலனுக்காக ஒரு சின்ன கோவில் இருந்தது. அந்தக் கோவிலைத் தாண்டி, பச்சை வயல் வெளியில் ஒரு மரமும், பக்கத்தில் ஒரு கிணறும், பனை ஓலையால் வேயப்பட்ட ஒரு குடிசையும் இருந்தது!   மனதை கொள்ளைகொள்ளும் எழில் கொஞ்சும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், பெரியவாளை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, அந்த பனையோலை குடிசையில் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை பண்ணிக்கொடுத்தார்கள்.


பெரியவாளும் அவருடைய அருமையான பாரிஷதர்கள் சில பேரும் அங்கே தங்கினார்கள். ஸ்ரீ வேதபுரி மாமா பெரியவாளுக்கு பிக்ஷை பக்வம் செய்துவிட்டு, கூட இருக்கும் அஞ்சாறு பேருக்குமாக ஒரு பெரிய தவலையில் ஸாதம் வடித்து, பக்கத்து தோட்டத்திலிருந்து காய்கள் சிலவற்றை பறித்து வந்து குழம்பும், கறியும் பண்ணினார். 

பெரியவா பிக்ஷை ஆனதும், வெளியே பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். பாரிஷதர்கள் 6 பேரும் சாப்பிட்டு முடித்ததும், பெரியவா ஒரு பாரிஷதரை அழைத்தார். 

"இவாளுக்கெல்லாம் சாப்பாடு போட்டுடு".....


உள்ளே சாப்பிட வந்தவர்களோ..... 10 பேர்!

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே..... அடுத்து 15 பேர், பெரியவா அனுப்பி, உள்ளே சாப்பிட வந்தார்கள்! 

இப்படியாக அடுத்தடுத்து batch batch-ஆக வந்தார்கள்..... 

ஒரே ஒரு தவலையில் 6 பேருக்காக வடிக்கப்பட்ட அன்னமும், குழம்பும், கறியும்..... பரமானுக்ரஹமாக, அன்று 45 பேருடைய வயிற்றை நிரம்பியிருக்கிறது! 

"வேதபுரி.... இத்தன பேர் வந்திருந்தாளே? நீ.... திருப்பி சமைச்சியா?..."


மற்றொரு பாரிஷதர் அதிசயத்தோடு கேட்டார்....

"இல்ல...! நம்ம உம்மாச்சி அன்னபூரணியோன்னோ? இன்னிக்கி உம்மாச்சியோட க்ருபை-னால இந்த தவலைதான் அக்ஷயபாத்ரம்! அள்ள அள்ள கொறையாம எல்லாருக்கும் வயறார போறித்து!.."


எல்லாரும் சென்றதும், பெரியவா பாரிஷதர்களிடம் கேட்டார்......

"ஏண்டா.... நாம்பாட்டுக்கு.... வந்தவாளை-ல்லாம் ஸாப்படறதுக்கு அனுப்பிண்டே இருந்தேனே! எல்லாருக்கும் போறித்தா? நன்னா சாப்ட்டாளா?....."


"பெரியவா இருக்கறச்சே.... எல்லாமே அக்ஷயமாத்தானே இருக்கும்! எல்லாமே எடுக்க எடுக்க கொறையாம வந்துண்டே இருந்துது! எல்லாருமே நன்னா த்ருப்தியா சாப்ட்டா.... பெரியவா!.."


பாரிஷதர்கள் காஞ்சீ அன்னபூர்ணேஶ்வரியை அன்று ப்ரத்யக்ஷமாக கண்டனர். 


8 comments:

  1. வழக்கம் போல் மூன்று படங்களும் அருமையோ அருமை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றியோ நன்றி.

      படம் வரையறதிலயும், புகைப்படம் எடுக்கறதிலயும் தேர்ச்சி இல்லாவிட்டாலும், யாரோ எடுத்த படத்தை நம்ப கூகுளாண்டவர் தயவோட சுடறதுல நான் EXPERT ஆக்கும். எல்லா ஐடியாக்களும் உங்களிடமிருந்து சுட்டதுதான்.

      Delete
  2. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பண்டரீபுரத்தில் சந்திரபாகா நதிக்கரையின் அந்தப்பக்கம் ஓர் கரும்புக்காட்டில் தங்கியிருந்தபோது, நானும், என் தாயாரும், மனைவியும், குழந்தைகளும் தரிஸனம் செய்து வந்தோம். பரிசலில் ஏறி அக்கரைக்குச் சென்றோம்.

    பரிசல்காரர்கள் யாரும் தரிஸனம் செய்ய வரும் பக்தாளிடம் பணமே வாங்கிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீர் கொடுத்து வைத்த மகராசன் ஐயா. என்றும் இப்படியே நீங்கள் இருக்க அந்த மகா பெரியவரையே வேண்டிக் கொள்கிறேன்.

      Delete
    2. http://gopu1949.blogspot.in/2013/06/4.html இதோ இந்தப் பதிவினை ஒருமுறை மீண்டும் பாருங்கோ.

      அதில் பண்டரீபுரம் பற்றியும், அங்கு 1981-இல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா தங்கியிருந்தது பற்றியும், ஸ்ரீ பாண்டுரங்கனை அவர் தரிஸிக்கச் சென்றது பற்றியும் பல சுவையான சம்பவங்கள் உள்ளன.

      Delete
  3. மஹாராஷ்ட்ராவில் ஓர் 500 ஆண்டுகளுக்கு முன்பு சர்ஜன் காட் என்ற இடத்தில் சமர்த்த இராமதாஸர் என்ற மஹான் இருந்துள்ளார். ’ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்’ என்ற அகண்ட நாம பாராயணம் மட்டுமே செய்து வந்தவர், அவர்.

    அவரின் சமகாலத்தில் புனே அருகே தேஹூ என்றொரு கிராமத்தில் துக்காராம் என்ற மஹான் ... ஸ்ரீ பாண்டுரங்க பக்தர் இருந்தார். இவர்கள் இருவரும் சம காலத்தவர்கள்.

    மராட்டி சிவாஜி மஹாராஜா இவ்விருவரையும் தனது குருநாதராக ஏற்றுக் கொண்டு பக்தி செலுத்தி வந்தவர்.

    சிவாஜி தரிஸனத்திற்கு வந்தபோது இவர்கள் இருவருமே ஒவ்வொரு நாள் சிவாஜியை அங்கேயே சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லியிருந்தார்கள்.

    அப்போது சிவாஜி, தான் தன் மிகப்பெரிய சேனையோடு வந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். சேனையோடேயே சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

    திடீர் வருகை தந்த ஆயிரக்கணக்கான படைவீரர்கள், குதிரைகள், யானைகள் என எல்லோருக்கும் சமர்த்தியாக மாபெரும் விருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

    எடுக்க எடுக்கக் குறையாமல் அக்ஷயமாக உணவுப்பொருட்கள் வந்து கொண்டே இருந்துள்ளது. மஹாராஜா சிவாஜி வியந்து, மகிழ்ந்து அசந்து போய் உள்ளார்.

    மஹான்களால் முடியாதது எதுவும் இல்லை. அவர்கள் கையைக் காட்டிவிட்டால் எதுவுமே அக்ஷயமாக இருந்துகொண்டே இருக்கும்.

    இதை சமீபகாலத்தில் நிரூபித்துள்ளவர் நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா என்பது உங்களின் இந்தப் பதிவின் மூலம் தெரிய வருகிறது. மிக்க மகிழ்ச்சி.

    பகிர்வுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றியோ நன்றி. கறிவேப்பிலை கொத்து போல் என்ரேக்கு ரசிகர். ஆனால் உமக்கு இருப்பதோ ரசிகர் பட்டாளமே.

      வணக்கத்துடன் வாழ்த்துக்கள்.

      Delete
    2. //ஆனால் உமக்கு இருப்பதோ ரசிகர் பட்டாளமே.//

      ரசிகர் பட்டாளத்திற்கு பயந்துகொண்டு நானே என் வலைப்பதிவிலிருந்து பெரும்பாலும் விலகிக்கொண்டு விட்டேன். ஜெயா போன்ற ஒருசிலருடன் மட்டுமே இப்போது என் தொடர்புகள் உள்ளன.

      2016-இல், அதுவும் ஒருசில தவிர்க்க முடியாத நிர்பந்தங்களுக்காக மட்டுமே, நான் வெளியிட்டுள்ள பதிவுகள் மொத்தம் 33 மட்டுமே. அதற்கே எங்கட ஜெயா முழுவதுமாக வரக்காணும் என்பதில் எனக்கு வருத்தமே. :(

      Delete