Showing posts with label தைப்பூசம். Show all posts
Showing posts with label தைப்பூசம். Show all posts

Monday, February 2, 2015

தைப்பூசம் பகுதி 5

சோழநாட்டை அம்சத்வசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் ராஜ்ய பாரக் கடமைகளால் அது நிறைவேறவில்லை.  எனவே தனக்கு பதிலாய் வேதம் அறிந்த ஓர் அந்தணருக்கு பெரும் பொருள் உதவி செய்து தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைத்தான். அவர் திரும்பி வரும் வரை அவரது குடும்பத்துக்குத் தேவையான  பொருளுதவியையும் அளித்து வந்தான்.
பல நாள்கள் கழிந்தன. மாறுவேடம் பூண்டு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய மன்னன் அப்படியே அந்த அந்தணரது குடும்பம் எப்படி இருக்கிறது என்றும் பார்க்கலாம் என்று போய்ப் பார்த்தான். வீட்டில்  யாரோ ஒருவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரசன், கோபாவேசமாக வீட்டிற்குள் புகுந்து அந்த நபரைக் குத்திக் கொன்றான். அதன்பிறகே தனக்காக தீர்த்த யாத்திரை சென்ற அந்தணர்தான்  என்பதை அறிந்து திடுக்கிட்டான். அந்தப் பாவம் தன்னை பீடிக்குமே என்று அஞ்சினான். அதற்கு ஏற்றாற்போல் கொலையுண்ட அந்தணரின் ஆவி அரசனை இரவிலும் பகலிலும் துன்புறுத்தியது. அந்தப்  பாவத்தைப் போக்க தீர்த்த யாத்திரையாக பல தலங்களுக்கும் சென்றான். இறுதியாக திருவிடைமருதூர் வந்தான். கோயிலுக்குள் உள்ள தீர்த்தத்தில் நீராடினான். 



என்ன ஆச்சரியம்..! அந்தணர் ஆவி அவனை  விட்டு நீங்கியது. அவ்வாறு அந்த ஆவி நீங்கிய நாள் தைப்பூசத் திருநாள். இதையறிந்த மன்னன் அக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற பெரும் நிதியுதவி செய்தான்.இதேபோல் இன்னொரு கதையும் பிரபலம்.


மதுரையை ஆண்ட வரகுண பாண்டியன் குதிரையில் வேகமாக வந்துகொண்டிருந்தான். அப்போது வயதான பிராணமர் ஒருவர் அந்த நேரம் தெருவைக் கடக்க முயல, குதிரையில் அடிபட்டு உயிரிழந்தார். அந்தப் பாவத்திலிருந்தும் ஆவியின் பிடியிலிருந்தும் விடுபட நினைத்த மன்னன் பல  தலங்களுக்கும் சென்று வழிபட்டான். இறுதியில் திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் விடிமோட்சம் பிறக்கும் என்று கூறினர். ஆனால் பாண்டியனுக்கு சோழநாட்டுக் கோயிலுக்குச் சென்று வழிபட  மனம் வரவில்லை. எனவே சுந்தரேஸ்வரரை வேண்டினான். ""இன்னும் கொஞ்ச நாளில் சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான்; உன்னிடம் மோதுவான்; ஆனால் தோற்றுவிடுவான்.  திரும்பி ஓடுவான். நீ அவனைத் துரத்திக்கொண்டு சோழ நாட்டிற்குச் செல். அப்போது திருவிடைமருதூர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்'' என்றார் சுந்தரேஸ்வரர். இறைவன் சொன்னபடியே எல்லாம்  நடந்தன. சோழனைத் துரத்திய பாண்டியன் திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றான். என்ன ஆச்சரியம்! அவன் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டதும் அவனை பிடித்திருந்த ஆவி விலகியது. இந்த  அற்புதம் நடந்ததும் தைப்பூசத்தன்றுதான்.

மயிலையில் தைப்பூச விழா கொண்டாடியது பற்றியும் அப்போது அன்னதானம் செய்தது பற்றியும் ஞானசம்பந்தர் தேவாரத்தில், (சம்பந்தர் தேவாரம், திருமயிலைப் பதிகம், பா.எண். 5)


""மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான்
நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்''



என்று குறிப்பிடுகின்றார். தைப்பூசத் திருவிழாவைக் கண்ணாறக் கண்டு களித்தல் முக்கியமானது என்று உணர்த்துகிறது இந்தப் பாடல்.


ஒரு தைப்பூசத் திருநாளில்தான் திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பினார். இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் தைப்பூசத்தன்று  திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம் பகுதி 4

தைப்பூசமும் வள்ளலாரும்


ஆன்மிக ஜோதி வள்ளலார் அருட்பெருஞ் ஜோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான். தீப தரிசனம், ஜோதி தரிசனம் என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று. தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கம். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சம்.வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனத்தையும், இறைவன் ஜோதி சொரூபியாக உள்ளான் என்பதையும், அன்னதானத்தின் மகிமையையும் உணர்த்தியுள்ளார். மேலும் மரணமில்லா பெருவாழ்வு அடைந்து மீண்டும் பிறவாமல் இருக்க போதனை செய்துள்ளார். 



25/1/1872 அன்று தைப்பூச நாளில் முதல் முறையாக ஜோதி வழிபாட்டை வடலூரில் தொடங்கி வைத்தார்.       எல்லாவற்றும் மேலாக 19ஆம் நூற்றாண்டில் வள்ளலார் நிகழ்த்திய அற்புதம் எவரையும் பிரமிக்க வைக்கும். வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் அமர்ந்திருந்த அன்பர்களை பெருங்கருணையோடு  நோக்கி, "அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள்'' என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். பின் இரண்டரை நாழிகை அளவில் அருட் பெருஞ்சோதியாகிய  ஆண்டவனோடு ஐக்கியமாகி விட்டார். அன்றும் தைப்பூசத் திருநாளே.





 அன்று முதல் இன்று வரை தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி ஜோதி தரிசனம் செய்கிறார்கள்.



தைப்பூசம் பகுதி 3




தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 




திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும். சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால்,அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது. 


சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.
வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.



சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான். அதன் காரணமாகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.


தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.





தைப்பூசம் பகுதி 2


முருகனுக்கு வேல் வழங்கிய நாள்








தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு

இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.. 

கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. 

கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான். 




அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.



தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருகக்கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். 

பழனியில் தைப்பூசம்

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். 

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். 

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.