Tuesday, September 15, 2015

பிள்ளையார்பட்டி ஹீரோ 

 இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடு செய்து, விரதமிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம் அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.  
இந்த ஆண்டு ஆவணி மாதம் 31ஆம் நாள் வியாழக்கிழமை 17.09.2015 இந்த விரத தினம் சம்பவிக்கின்றது.   
பிள்ளையாரின் அவதார தத்துவம்.


பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.
உண்மையில் விநாயகர் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடாட்ப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேஷன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். அது சம்பவித்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது.

 அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

5 comments:

 1. அன்புள்ள ஜெயா, வணக்கம்மா.

  விநாயக சதுர்த்தி பற்றிய விரிவான விளங்களும் படங்களும் மிகவும் அருமையாக உள்ளன. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. Sorry .... அவசரத்தில் என்னையறியாமல் Spelling Mistake :(

   விளங்களும் = விளக்கங்களும்

   Delete
 2. நான் நீண்ட நாட்களாகவே பிறர் பதிவுகளுக்குச்சென்று படித்து வந்தாலும், பின்னூட்டங்கள் இடுவதை 07.07.2015 முதல் அடியோடு நிறுத்திக்கொண்டுள்ளேன்.

  இருப்பினும் என் இஷ்ட தெய்வமான ’பிள்ளையாரப்பா’வுக்காகவும், நம் ஜெயாவின் அன்பான அழைப்புக்காகவும், முதன்முதலாக இன்று இந்தப் பதிவுக்கு மட்டும் பின்னூட்டமிட்டுள்ளேன்.

  மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 3. தங்களைப்போலவே என்னிடம் மிகவும் ஆத்மார்த்தமான நட்புள்ளம் கொண்டிருந்த வேறொரு சமவயது தோழி விநாயகர் சதுர்த்தியன்றே பிறந்தவராவார். :)

  அவரின் உடல்நிலை + குடும்ப சூழ்நிலை காரணமாக இப்போது என் அன்றாடத் தொடர்பு எல்லைக்குள் இல்லாமல் சற்றே ஒதுங்கி இருந்து வருகிறார்.

  அவருக்கும் என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை இங்கேயே இந்தப்பதிவினிலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.

  ஒருவேளை இந்தப்பதிவினை அவர்கள் பார்க்க நேர்ந்தால் என்னைப்போலவே அவருக்கும் மனதுக்கு கொஞ்சமாவது மகிழ்ச்சியளிக்கலாம்.

  >>>>>

  ReplyDelete
 4. ’பிள்ளையார்பட்டி ஹீரோ’ என்ற தலைப்பும், படங்களும், செய்திகளும் கொழுக்கட்டைப் பூர்ணம் போலவே, தித்திப்பாகவும் சுவையோ சுவையாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  எனக்கென்னவோ இனிப்புக் கொழுக்கட்டை சாப்பிடுவதைவிட, அந்த வெல்லப்பாகு+தேங்காய்த்துருவல்+ஏலப்பொடி கலந்த வெல்லப்பூர்ணத்தை ஓர் மிகப்பெரிய டவராவில் நிரப்பி ஒரு சின்ன ஸ்பூன் போட்டு துளித்துளியாக ரஸித்து ருசித்து சாப்பிடுவது மட்டுமே பிடித்தமாக உள்ளது. :) நான் அப்படித்தான் செய்து வருகிறேன்.

  இதனால் எனக்கானக் கொழுக்கட்டைக்குச் சொப்பு செய்யும் வேலை எங்காத்து மாமிக்கு (மன்னிக்கு) மிகவும் மிச்சமாகிறது. :)

  பிரியமுள்ள கோபு அண்ணா

  ReplyDelete