Thursday, September 21, 2017





ஸ்ரீ காமாக்ஷி தாசன் 
**********************************

சென்னை- புதுப்பெருங்களத்தூரில், மணிமேகலை தெரு, ஸ்ரீலிங்கம் குடியிருப்பில் வசிக்கிறார் காமாட்சிதாசன் சீனிவாசன். சொந்த ஊர்- தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரம். இவரின் தகப்பனார் வெங்கட்ராமய்யர், காஞ்சி மடத்தில் (1901-1966) கார்வாராக கைங்கரியம் செய்து வந்தவர்.

தன்னை, ‘பெரியவாளின் அடிமை’ என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் காமாட்சிதாசன் சீனிவாசன், தனது 18-வது வயதில், முதன்முதலாக காஞ்சி மகாப் பெரியவாளைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

”மகா பெரியவா பீடாதிபதியா வர்றதுக்கு முன்னா டியே, மடத்துல கைங்கரியம் பண்ணிட்டிருந்தவர் என் அப்பா. அதனால, அவர்கிட்டேதான் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சுப்பாராம் பெரியவா.

அப்பாவிடம் ரொம்பச் சிநேகமா இருப்பார்.

அப்பா ஊருக்கு வரும்போதெல்லாம், என்னைப் பெரியவாகிட்ட அழைச்சிட்டுப் போகணும்னு சொல்லிட்டே இருப்பேன். அதுக்கான வேளை வரலே! இன்னிக்கு நாளைக்குன்னு தள்ளிப்போட்டுட்டே இருந்தார் அப்பா.
Image may contain: drawing



PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

அது, 1958-ஆம் வருஷம். ஒரு நாள், பாதி ராத்திரில திடீர்னு விழிப்பு வந்தது எனக்கு. ஒருவித தெய்வீக அருள் வந்த மாதிரி உணர்வு. காமாட்சியம்மன் ஆயிரம் அகவல்னு சொல்ல ஆரம்பிச்சு, அப்படியே வரிவரியா எழுதவும் ஆரம்பிச்சுட்டேன். ஒரு மணி நேரத்துல, ஏதோ மழை பொழிஞ்ச மாதிரி… மெய்ம்மறந்த நிலையில, ஆயிரம் அகவலையும் எழுதி முடிச்சுட்டேன். இது எப்படி நடந்ததுன்னு எனக்கே தெரியலை. அம்மாகிட்ட போய்ச் சொன்னேன். பாவம், அவளுக்கும் ஒண்ணும் புரியல! ‘உடனடியா அப்பாவுக்குக் கடிதம் எழுதிப்போடு. பெரியவாகிட்ட இதைச் சொல்லட்டும்’னு சொன்னா.

அந்த நேரத்துல, சென்னை சம்ஸ்கிருத காலேஜ்ல முகாம் போட்டிருந்தார் பெரியவா. அவரிடம் இந்த விஷயத்தை அப்பா சொன்னதும்,  ’சீனிவாசனை இங்கே வரச் சொல்லு!’ன்னு பெரியவாகிட்டேருந்து உத்தரவாச்சு. நானும் உடனே கிளம்பி, சென்னை வந்தேன்.

காலேஜ்ல ஜேஜேன்னு கூட்டம். கி.வா.ஜ., கிருபானந்தவாரியார்னு பெரியவங்கள்லாம் இருந்தாங்க. பெரியவா முன்னாடி போய் பவ்வி யமா நின்னேன். ‘படிடா சீனிவாசா!’ன்னு பெரியவா சொன்னதும், கடகடவெனப் படிக்க ஆரம்பிச்சுட்டேன். ஓர் இடத்தில்… ’64-வது பீடத்து அரசியே போற்றி!’ன்னு படிக்கும்போது, ‘நிறுத்து’ன்னார் பெரியவா. அறையின் கதவைச் சாத்தவும் உத்தரவிட்டார். பிறகு, பூர்ணபலம் (உரித்த தேங்காய்), மேருவில் பதித்திருந்த சந்தன உருண்டை, குருவின் பாதுகை, ஒரு ஸ்ரீசக்ரம் வைத்து, வில்வத்தையும் போட்டு, ‘பஞ்சாயதன மூர்த்திகள்… பூஜைக்கு வெச்சுக்கோ. எடுத்துட்டுப் போ!’ன்னார் பெரியவா.

நான் புரியாமல் விழிச்சேன். ‘நான் என்ன பண்ணணும்? எப்படிப் பூஜை பண்ணறதுன்னு எனக்கு நியமங்கள் எதுவும் தெரியாதே’ன்னு தயக்கத்துடன் பெரியவாளிடம் கேட்டேன். பெரியவா சிரிச்சார். ஒண்ணும் தெரியாதவன் கிட்டே எப்படிப் பதில் சொல்லணும்னு அவருக்குத் தெரியாதா என்ன? அவர் கேட்டார்…

‘போற்றி அகவல், எப்படி எழுதினே?’

‘நான் எழுதலை. தானா வந்தது, பெரியவா!’


Image may contain: 2 people, drawing

PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS

‘அப்படிப் பூஜா முறையும் தானாவே வந்துடும் உனக்கு. எடுத்துண்டு போ!’ என்றவர், பூர்ண அனுக்கிரகம் பண்ணுவது மாதிரி ஆசீர்வாதம் பண்ணினார். ‘லோக க்ஷேமார்த்தமா பூஜை பண்ணிண்டு வா! எல்லாரும் நன்னா இருக் கணும்னு வேண்டிண்டு பூஜை பண்ணு!’ என்றும் அறிவுரை தந்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் எனக்கு!” – கண்கள் பனிக்க, நெஞ்சில் கைவைத்துச் சொன்ன சீனிவாசன், ஒருமுறை மகா

பெரியவாளே வீடுதேடி வந்து அனுக்கிரகம் செய்த சம்பவத்தையும் சிலிர்ப்புடன் விவரித்தார்.

”பெரியவா சொன்ன மாதிரியே பூஜைகள் செய்து வந்தேன். மூணு வருஷம் ஓடிப்போச்சு! 61-வது வருஷம் பிப்ரவரி 22-ஆம் தேதி. முன்னறிவிப்பு எதுவும் இல்லாம, உத்தமதானபுரம் வீட்டுக்கே வந்துட்டார் பெரியவா. வீட்டில்- மரத்தால் பண்ணின சின்ன கோயில்; அதுலதான் பெரியவா தந்ததையெல்லாம் வெச்சு பூஜை பண்ணிட்டிருந்தேன். பக்கத்திலேயே இருந்த பீரோ மீது சாய்ந்து உட்கார்ந்துண்டார் பெரியவா. பூஜையை அவருக்கும் சேர்த்துப் பண்ணினேன். அம்பாள் பேரிலேயும், பெரியவா பேரிலேயும் பூக்களைப் போட்டுண்டே இருந்தேன். மனசு நிறைஞ்சுபோச்சு.

அதுமட்டுமா? பூஜைக்குப் பால் தேவைன்னு தெரிஞ்சுண்டு, மணப்பாறையிலிருந்து  ஒரு பசு மாட்டை வாங்கிக் கொடுத்தார் பெரியவா!” என்ற சீனிவாசனின் முகத்தில் அப்படியரு பரவசம்.

”மகாபெரியவா கொடுத்த சந்தனம் வளர்ந்துண்டே இருக்கு. அவர் கொடுத்த தேங்காய், உள்ளே இளநீருடன் அப்படியே இருக்கு. என் வீட்டுக்கு ஸ்ரீகாமாட்சி பூஜையைத் தரிசிக்க வரும் அன்பர்கள், தங்களது பிரார்த்தனையையும், வழிபாட்டால் கிடைத்த பலன்களையும், சந்தோஷத்தையும் மனம் விட்டுப் பகிர்ந்துக்கும்போது மனம் பூரிச்சுப்போகும். எல்லாம் காஞ்சி மகானின் கருணை!

அன்னிக்குப் பெரியவா, ‘நீ உலகில் இதற்காகவே பிறந்த காமாட்சிதான். இப்படியே அருள் நிலையில் எழுதிக் கொண்டே இருப்பாய்!’னு ஆசி வழங்கி வாழ்த்தினார். அவர் சொன்னதுபோலவே, பூஜை செய்யும்போது ஏற்படும் அருள் நிலையில்… பாமாலைகள், சதகங்கள், ஸ்லோகங்கள், அருள் மொழிகள்… இப்படி 5,000 பக்கங்கள் எழுதியாச்சு!” என்று நெக்குருக விவரித்தவர், ”நான் ஸ்ரீமடம்  போய்விட்டாலே, நான் எழுதியதை வாசிக்கச் சொல்லி மெய்ம்மறந்து கேட்டுண்டே இருப்பார் மகாபெரியவா. இதனாலேயே மடத்தில், ‘சீனு வந்துட்டானா? இனிமே பெரியவாளோட பூஜை, பிட்சாவந்தனம் எல்லாமே சீனுவுக்குப் பிறகுதான்’னு வேடிக்கையா சொல்வா!”

மலரும் நினைவுகளில் மூழ்கியவர், சற்று நேரம் கழித்து ஏதோ ஞாபகம் வந்தவராக, மீண்டும் தொடர்ந்தார்…

”நான் 58-ல் அவரைப் பார்த்துட்டு ஆயிரம் அகவல் பாடின சமாசாரம் சொன்னேன், இல்லையா? அதே வருஷம் தேவகோட்டையிலே ஒரு கல்யாணம். என்னைக் கூப்பிட்டுப் பிரசாதம் எல்லாம் கொடுத்து, அந்தக் கல்யாணத்தை நடத்துகிற செட்டியாரிடம் கொடுக்கணும்னார் பெரியவா. எனக்குத் தயக்கம். அப்ப, எனக்கு 18- 19 வயசுதான்! ‘நீ தனியா போகவேண்டாம். உன்கூட ஏழெட்டுப் பேர் வருவா’ன்னார் பெரியவா.

சிவப்புக் குஞ்சலம் கட்டின ஸ்ரீமுகப் பிரம்பு,  பிரசாதம் எல்லாம் எடுத்துண்டு போனோம். செட்டியாருக்குச் சந்தோஷம். ஆசார- உபசாரம் பண்ணிட்டார்.

தன் வீட்டுக் கல்யாணத்துக்கு மடத்துலேருந்து பெரியவா ஸ்பெஷலா பிரசாதம் அனுப்பி, ஆசீர்வாதம் பண்ணினதுல ரொம்பக் குளிர்ந்து போயிட்டார் அவர். எங்க எல்லாருக்கும் சாப்பாடெல்லாம் பிரமாதமா போட்டு, 108 ரூபாய் சன்மானமும் கொடுத்தார். அப்புறம், சென்னைக்கு வந்து பெரியவாகிட்டே  செட்டியார் சந்தோஷப்பட்டதையும், 108 ரூபாய் கொடுத்ததையும் சொன்னேன்.

‘நீயே வச்சுக்கோ!’ன்னு சொன்ன பெரியவா,

‘உன்னை எதுக்காகப் போகச் சொன்னேன், தெரியுமா?’ன்னு கேட்டார். நான், ‘தெரியாது’ன்னேன். உடனே, ‘செட்டியாருக்கு ரொம்ப வருஷமா குழந்தையே இல்லை. காமாட்சியைப் பிரார்த்தனை பண்ணிக்கச் சொன்னேன். குழந்தையும் பிறந்தது. அதுக்கு காமாட்சின்னு பெயர் வைக்கச் சொன்னேன். நீதான் காமாட்சி பேர்ல அகவல் ஆயிரம் பாடி இருக்கியே! அதான், உன்னை அவர்கிட்டே அனுப்பினேன்!’ என்றார் பெரியவா.

‘காமாட்சிதான் எனக்கும் கருணை காட்டி னாள். செட்டியாருக்கும் அதே காமாட்சிதான் கருணை செய்தாள். இதை எனக்குப் புரிய வைக்கிறதுக்கு வாய்ப்பா ஒரு சம்பவம் பெரியவா ளுக்குக் கிடைச்சுதே… அதுதான் ஆச்சரியம்!” என்று கைகூப்பி வணங்கிய 72 வயது முதியவர் காமாட்சிதாசன் சீனிவாசன், 1989 முதல் குடும்பத்துடன் சென்னை- பெருங்களத்தூரில் குடியேறிவிட்டாராம்.

இங்கு ஒரு வாடகை வீட்டில், இன்றும் தொடர்கிறது அவரது காமாட்சி பூஜை!


Image may contain: 1 person, drawing


PICTURE COURTESY: SRI SUDHAN KHALIDAS


3 comments:

  1. மிகவும் அருமையான சம்பவங்களை கோர்வையாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  2. ஸத்குருவான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹம் மட்டும் பரிபூர்ணமாகக் கிடைத்து விட்டால், பிறகு எல்லாமே ஆடோமேடிக் ஆகக் கிடைத்து விடும். அவ்வாறு கிடைக்கப் பெற்றவர்கள் மிகுந்த பாக்யசாலிகள்.

    >>>>>

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தும் வழக்கம்போல அழகோ அழகு !

    இன்று கூட இதன் இணைப்பினைச் சரியாக அனுப்பாமல் வேறு ஏதோ ஒரு பதிவின் இணைப்பினை தவறுதலாக அனுப்பியுள்ளீர்கள்.

    எப்படியோ நானே தேடிக்கண்டுபிடித்து இதனைப் படிக்க நேர்ந்துள்ளதும் அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்கிரஹத்தினால் மட்டுமே.

    பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete