Thursday, April 20, 2017

காமாக்ஷியின் தீர்ப்பு…!








தஞ்சாவூர் மாவட்டம் பதினெட்டு க்ராம வாத்திமர் குடும்பம். செல்வ செழிப்பு, ஈஶ்வர ஆராதனை, பெரியவாளிடம் பக்தி எல்லாம் சேர்ந்திருந்தது.

ஜாதகம் பார்த்து, பெண் பார்த்து, விமர்ஸையாக விவாஹம் நடந்தது. மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கை. 

எந்த க்ரஹம் எங்கே இடம் பெயர்ந்ததோ? …. 

ஸாதாரணமாக தோன்றிய ஒரு அல்ப விவாதம், கணவன் மனைவிக்குள் கசப்பை உண்டாக்கி விவாஹரத்து வரை வந்து விட்டது. விசாரணைகள், ஆலோசனைகள், மறு ஆய்வுகள்……

உஹூம்!!!..எதுவுமே ஒத்து வரவில்லை!

நாளைக்கு தீர்ப்பு! நிரந்தரமாகப் பிரிவதற்கு!

பெண்ணும், பெத்தவாளும், பெரியவா தர்ஶனத்துக்கு வந்தார்கள்.

“காமாக்ஷிய மொதல்ல தர்ஶனம் பண்ணிட்டு வா!”

பெண்ணை மட்டும் அனுப்பினார்.

கோவிலில் எக்கச்சக்க கூட்டம்! 

அத்துடன் பக்திபூர்வமாக தர்ஶனம் செய்யும் மனநிலையில் அவளும் இல்லை.

தெரிந்தவர் ஒருவர் எதிரே வந்தார்.

“அடேடே! ஏது இன்னிக்கி இவ்ளோவ் தூரம்?”

“பெரியவா சொல்லிட்டா...! அதுனால வந்தேன்”

அம்பாள் பேருக்கு அர்ச்சனை செய்வதற்காக அர்ச்சனை தட்டை ஸ்தானீகரிடம் கொடுத்தாள்.

ஸ்தானீகர் அர்ச்சனை செய்துவிட்டு, ப்ரஸாத தட்டை கொண்டு வந்தார்.

கூட்டமான கூட்டம் !

“சேர்ந்து வாங்கிக்கோங்கோ”

சேர்ந்தா?? …….

அந்தப் பெண் முழித்தாள்!

“நா……. தனியாத்தான் வந்தேன்…”

“அதுனால என்ன? ரெண்டு பேருமா சேந்து வாங்கிக்கோங்கோ”

மறுபடி அர்ச்சகர் சொன்னதும், “யாரோட சேர்ந்து வாங்கிக்கச் சொல்றார்?”…

சட்டென்று திரும்பிப் பார்த்தபோது……

அங்கே அவளுடைய பிரியப்போகிற புருஷன்தான், அவள் பின்னால் நின்று கொண்டிருந்தான் !

“சேர்ந்து வாங்கிக்கோங்கோ”….………….

மறுபடியும்!

“அம்மா! பரதேவதே! காமாக்ஷி! இது... உன்னோட ஆணையா?”

கண்கள் கண்ணீரைப் பெருக்க, இருவருமே உண்மையில் ஆத்மார்த்தமாக இதைத்தான் விரும்பியதால், இதற்காகவே ஏங்கிக் கொண்டிருந்ததால், ஸந்தோஷமாக ப்ரஸாதத்தைப் பெற்றுக் கொண்டனர்.

கர்ப்பக்ருஹத்துக்குள் காமாக்ஷி தீபத்தின் ஜோதியில் ஜொலித்துக் கொண்டிருந்தாள்!

“இப்படி அழுது, அழுது பிரிந்து போவதற்காகவா உங்களை சேர்த்து வைத்தேன்?” என்று கேட்பது போல் புன்னகையோடு காட்சியளித்தாள்.

மனஸ் முழுக்க ஸந்தோஷத்தை நிரப்பிக் கொண்டு ரெண்டு பேரும் கோவிலிலிருந்து வெளியே வந்த பிறகு, இரண்டு குடும்ப பெரியவர்களும் பார்த்து பேசி கொண்டார்கள்.

விவாஹரத்து………

ரத்தாகி விட்டது.!!

காமாக்ஷி அல்லவா ஜட்ஜ்மென்ட் கொடுத்திருக்கிறாள்!







ஶ்ரீமடத்துக்கு வந்து, பெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தார்கள்.

“என்ன? ஜட்ஜ்மென்ட் வந்துடுத்து போலிருக்கே?” …………

எவ்வளவு புஷ்டியான சொற்கள்!!!

“எழுதினது, பெரியவாதானே!”

பெண் மனஸு நிறைந்து சிரித்துக் கொண்டே சொன்னாள். 

ஸுந்தரமூர்த்தி நாயனாருக்கும், பரவை நாச்சியாருக்கும் நடுவே தூது போன ஞாபகம் இன்னும் இந்த பரமேஶ்வரனுக்கு இருந்திருக்கிறது. அதனால்தான் கணவன், மனைவி இருவரையும் தனியாக கோவிலில் ஸந்திக்க வைத்திருக்கிறார். 

அதோடு, தாய்க்கும் மேலாக, தன் குழந்தைகளான நமக்கும், இனி வரப்போகும் ஸந்ததிகள் எல்லாருக்குமாக உபதேஸித்தார்…..

“பாருங்கோ! வாழ்க்கைன்னா…. ஆயிரம் கஷ்ட நஷ்டம் வரத்தான் வரும். குடும்பம்ன்னா…. சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும். பொறுமையா ஒத்தரோட ஒத்தர் அனுஸரிச்சு போனா….  எப்பேர்ப்பட்ட ப்ராப்ளத்தையும் ஈஸியா solve பண்ணலாம். அல்ப விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டையைப் போட்டுண்டு, விவாஹரத்து பண்ணிக்கறதுக்கா, இத்தனை செலவழிச்சு கல்யாணம் பண்றா?…. 

…..அல்ப மனஸ்தாபத்துக்காக, நீயா?நானா?-ன்னு ego clash-னால, வேத மந்த்ரங்களோட, அக்னியை ஸாக்ஷியா வெச்சுண்டு, நாள் நக்ஷத்ரம் பாத்து பண்ற கல்யாணத்தை, யாரோ வக்கீல்கள், அவாளுக்குள்ள பேசிண்டு, argue பண்ணிண்டு, அதுக்கு ஒத்தர் ஜட்ஜ்மெண்ட் குடுத்து பிரிச்சு வெக்கறார்ன்னா, அப்றம் நம்ம வேத மந்த்ரங்களுக்கு என்ன மதிப்பு? அக்னி பகவானுக்கு என்ன மதிப்பு? இல்ல….பத்ரிகைல ‘ஆச்சார்யாள் அனுக்ரஹத்தோட’ அப்டீன்னு போடறேளே, எங்களுக்கு என்ன மதிப்பு?…..”

எத்தனை ஸத்யமான வார்த்தைகள்!

இரண்டு பேரும் மனமொத்த தம்பதிகளாக மறுபடியும் நமஸ்காரம் பண்ணினார்கள்.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்






4 comments:

  1. வழக்கம்போல் மூன்று படங்களும் அருமையாக உள்ளன.

    அதுவும் அந்த முதல்படம் ’கட்டிக்கரும்பு காமாக்ஷி’ சூப்பரோ சூப்பர் ! :)

    ReplyDelete
  2. //காமாக்ஷி அல்லவா ஜட்ஜ்மென்ட் கொடுத்திருக்கிறாள்!//

    கருணையுடன் கூடிய காமாக்ஷியின் இந்தத் தீர்ப்பு என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது.

    ReplyDelete
  3. //“என்ன? ஜட்ஜ்மென்ட் வந்துடுத்து போலிருக்கே?” …………
    எவ்வளவு புஷ்டியான சொற்கள்!!!
    “எழுதினது, பெரியவாதானே!”//

    ஸ்ரீ காமாக்ஷி வேறு நம் பெரியவா வேறு கிடையாது. இதை நம்மால் பல நிகழ்வுகளின் மூலம் நன்கு அறிய முடிகிறது.

    ReplyDelete
  4. நிறைவுப்பகுதியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்லியுள்ள உபதேசங்கள் எத்தனை எத்தனை அருமையாக உள்ளன! :)

    கணவன் - மனைவிக்குள் ஏற்படும் சிற்சில பிரச்சனைகளுக்கு
    after all இந்தக் கோர்ட்டாரால் எப்படி தீர்ப்பளிக்க முடியும்?

    அது ஆயிரம் காலத்துப்பயிர் அல்லவா !

    அருமையான இந்தப்பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள், ஜெயா.

    ReplyDelete