Thursday, February 2, 2017

பாவம் விலகி செல்வவளம் தரும் 
ரத சப்தமி (சூரிய ஜெயந்தி)வழிபாடு
03.02.2017

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக
முக்கியதானது ரத சப்தமி . ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது . தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்கிறது சாஸ்திரம் .
சூரியன் தோன்றிய வரலாற்றினைப் புராணங்கள் தெரிவிக்கின்றன. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அந்தணர் ஒருவர் அங்கு வந்து உணவு கேட்டார். கணவருக்கும் பரிமாறியபின்னர் நிறைமாத கர்ப்பம் என்பதால் மிக மெதுவாக நடந்து வந்த அதிதி அந்தணருக்கு உணவு அளித்தாள்.
இதனால் கோபம் கொண்ட அந்தணர், கர்ப்பத்தைப் பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்ததால் அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள்.
இதைக்கேட்ட காஷ்யப முனிவர், அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில் லாத மகன் பிறப்பான் என்று வாக்களித்தார். அதன் படி ஒளி பொருந்தியவனாக உலகைக் காக்கும் சூரியன் பிறந்தான்.
ரத சப்தமி வழிபாடு
சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும்.வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.பீஷ்மர் செய்த பாவம்
எருக்கம் இலையின் மகத்துவம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத் தில் உயிர் விடலாம் என்ற வரம் பெற்றவர். உத்தராயணத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருந்து காத்திருந்தார். காலம் போய்க்கொண்டே இருந்தது. பீஷ்மரின் உயிரோ பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், "பீஷ்மா, ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல், இருப்பதும் கூடப் பாவம்தான், அதற்கான தண்டனையை அவரவர்களேதான் அனுபவித்துத் தீர வேண்டும்“ என்று கூறினார்.
பீஷ்மருக்கு, சபை நடுவே பாஞ்சலியின் உடைகளைக் களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதைத் தடுக்காமல் இருந்து மிகப் பெரிய தவறு செய்தது நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா என்று கேட்டதற்கு, வியாசர், ``எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அப்பாவம் அகன்றுவிட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனையை அனுபவித்துதானே ஆக வேண்டும “ என்றார் வியாசர்.
சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், ``அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை. அதேபோல் பிரம்மச்சாரியான உன்னையும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன்” என்றார்.
சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி யன்று உயிர் நீத்தார். பீஷ்மருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர், “கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும்” என்று கூறினார்.
ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் பக்தர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று வியாசர் அருளினார்.
இப்படி நீராடும் பொழுது,
``ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோக ப்ரதீபிகே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வாம்'' என்ற ஸ்லோகத்தைக் கூறி நீராட வேண்டும்.
சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது உகந்த நாள். இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
ஜோதிட ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள்.
ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலம் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.
சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்பதியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருவேங்கடமுடையான் .12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். திருமலையில் இந்த காட்சிகளை காண கண்கோடி வேண்டும் .
ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு.
ரதசப்தமி தினத்தில் சூரியனை வழிபடும்போது , சூரியனை நோக்கி,
"ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!'
என்று சொல்லி வணங்க வேண்டும் .
4 comments:

 1. தகுந்த நாளில் முன்கூட்டியே தந்துள்ள தங்கமான பயனுள்ள பதிவு.

  >>>>>

  ReplyDelete
 2. இதில் உள்ள ஸ்நான மந்திரங்களை தனித்தனியே ஒரு பேப்பரில் எழுதி எங்காத்தில் உள்ள நால்வருக்கும் தருவதாக உள்ளேன். அவர்கள் பாத் ரூம் செல்லும் போது எடுத்துப்போய் சொல்லட்டும்.

  அந்த புண்ணியங்களில் பாதி ஜெயாவுக்கும் செல்லட்டும் :)

  ReplyDelete
 3. படங்களும், பதிவும் அதில் சொல்லியுள்ள விஷயங்களும் கோடி சூர்யப் பிரகாசமாக உள்ளன. தக்க நேரத்தில் கொடுத்துள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. மேலும் பளிச்சென்ற முக்கியமான அர்க்கிய விபரங்களுக்கு ......

  http://gopu1949.blogspot.in/2012/01/blog-post_31.html
  ரத ஸப்தமி

  http://gopu1949.blogspot.in/2012/01/31012012.html
  பீஷ்மாஷ்டமி

  ReplyDelete