வயிறு போட்ட இரைச்சல்
தஞ்சாவூர் அருகே சேதிநீபுரம் என்ற கிராமத்தில் பெரியவா முகாம் இட்டிருந்த போது ஒருநாள் திடீரென்று விடிகாலை மூணு மணிக்கே தன்னுடைய பூஜை, ஜபாதிகளை பண்ண ஆரம்பித்து ஒன்பது மணிக்கெல்லாம் முடித்துவிட்டு, உடனே கையோடு பிக்ஷையும் பண்ணிவிட்டார்.
"எல்லாரும் ஒடனே சாப்பிட்டுடுங்கோ....." என்றார்.
கூட இருந்த சிஷ்யர்களையும் சாப்பிடச் சொல்லிவிட்டார். அவர்களுக்கோ அவ்வளவு சீக்கிரம் மத்யானத்துக்கான சாப்பாடு உள்ளே இறங்கவில்லை. ஏனென்றால் பசிக்கவே இல்லை. இருந்தாலும் பெரியவா சொன்னதும், எதையோ பேருக்கு கொரித்துவிட்டு எழுந்தனர்.
ஆனால், ஏன் இந்த அவசரம்? யாருக்கும் புரியவில்லை....!
திடீரென்று பெரியவா அங்கிருந்து கிளம்பிவிட்டார். எட்டுமைல் தூரத்தில் உள்ள வேறொரு இடத்திற்கு !
பாரிஷதர்களுக்கோ, அவ்வளவு தூரம் நடந்த அசதி, அதோடு அத்தனை அதிகாலையில் சாப்பிட்டு பழக்கமில்லாததால், கிளம்பும்போது சரியாக சாப்பிடாததால், வயிறு ஏகமாக கூப்பாடு போட்டது!
என்ன செய்வது? பசிக்கு ஏதாவது பண்ணி சாப்பிட்டால் பெரியவா எதுவும் சொல்லப் போவதில்லை என்றாலும், ஏதோ தயக்கம். இனிமேல் ராத்திரி எத்தனை மணி ஆகுமோ?
குழந்தைகளின் வயிறு போட்ட இரைச்சல். அன்னைக்குத் தெரியாதா பிள்ளையின் பசி. பெரியவா காட்டிய இந்த மாத்ரு ப்ரேமை.... அம்மாடீ! வார்த்தைகளே இல்லை! அனுபவிப்போம்...
பெரியவா உள்ளே ஒரு தட்டியின் மறைவில் அமர்ந்திருந்தார். தன் பக்கத்தில் இருந்த கட்டுப்பெட்டியை திறந்தார்.
இதோ! தாயினும் சாலப்பரிந்த தயாபரன் உள்ளேயிருந்து மைசூர் பாகு யாரோ பக்தர் குடுத்ததை, தன் சிஷ்யக் குழந்தைகளின் வழிப்பயணத்துக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்தார். துண்டங்களை தன் திருக்கரத்தால் உதிர்த்து, பக்கத்தில் இருந்த வெள்ளிப் பேலாவில் போட்டார்.
கூடையிலிருந்த நல்ல கனிந்த மாம்பழங்களை துழாவி எடுத்தார். நல்ல ரச மாம்பழங்களைப் பிழிந்து அந்தக் கதுப்பு ரஸத்தை வெள்ளிப் பேலாவில் உதிர்த்து வைத்திருந்த மைசூர்பாகில் விட்டு கலந்தார்.
மதுரமான மைசூர்பாகும், அதி மதுரமான மாம்பழ ரசமும், அதைவிட அதி அதி மதுர மதுரமான அம்மாவின் அன்பான அன்பும், வாத்சல்யமும், அவருடைய திருக்கரத்தின் அம்ருதமும் சேர்ந்து அங்கே அற்புதமான, ஆனந்தமான ஒரு கலவை தயாரானது!
கைகளை அலம்பிக் கொண்டதும், விரல்களால் ஒரு சொடுக்கு!
சிஷ்யர் வந்தார்!
வெள்ளிக் கிண்ணத்தில் மஞ்சமஞ்சேர்னு சந்தனக் குழம்பாக இருந்த மா-அம்ருதத்தை காட்டினார்.....
"எல்லாரும் எடுத்துக்கோங்கோ!.... ராத்திரி வரைக்கும் தாங்க வேண்டாமா?"
சிஷ்யர்களுக்கோ..... காதுகளில் மதுரமான பெரியவாளின் சொற்கள்! வாயிலோ மதுரமான ப்ரசாதம்! உள்ளத்திலோ பெரியவாளின் அன்பை தாங்க முடியாத அளவு மதுரமான சுமை!
பாற்கடல் அம்ருதம் கூட இந்த பேரன்பு ரசத்தின் கால்தூசு பெறுமா?
அவசர அவசரமாக அத்தனைபேரையும் கிளப்பி, சீக்கிரமே அவர்களை சாப்பிடச் சொல்லி, எட்டு மைல் தூரம் நடக்கவிட்டதெல்லாம், "ஆத்மார்த்தமான அன்பு, வாத்சல்யம் என்றால் இதுதாண்டாப்பா! " என்று காட்டத்தான்..
மடி கனத்த தாய்பசு, கன்றைக் கண்டதுமே அப்படியே பாலை வர்ஷித்த அனுபவத்தை.... சிஷ்யர்கள் அன்று, கன்றாகிப் பெற்றார்கள்.
இந்த தாங்கமுடியாத மதுரமான காட்சியின் சுமையை மட்டுமே கடைசி வரைக்கும் நம் இதயத்தில் தாங்கியபடி இருந்தால், வேறென்ன சாதனை வேண்டும்?
படங்கள் எல்லாமே அழகோ அழகு.
ReplyDeleteபதிவினில் சொல்லியுள்ள விஷயங்களும் மைசூர் பாக் கில், மாம்பழச்சாறு கலந்த அமிர்தமாகவே உள்ளன.
பகிர்வுக்கு நன்றிகள்.
>>>>>
’நா இருக்கேன்’ன்னு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளே சொல்லுவது மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.
ReplyDeleteஇதே படத்தைத்தான் என் அலுவலகத்தில் என் டேபிளில் பல நாட்கள் நான் வைத்திருந்தேன். அடிக்கடி பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்வேன்.
இப்போது பணி ஓய்வுக்குப்பின் அது நம் ஆத்து பூஜையறையில் இடம் பெற்றுள்ளது. :)