புவனேஸ்வரி கோவிலின் முகப்பு
புதுக்கோட்டை என்றதும் உங்கள் நினைவிற்கு வருபவள் புவனேஸ்வரி தேவி மட்டுமே. அவள் ஏன் இங்கு வந்தால் தெரியுமா? தன் மகனான ஜட்ஜ் சுவாமிகளை விட்டு பிரிய மனமில்லாமல் இங்கேயே தங்கியிருக்க வந்திருக்க வேண்டும்.
புவனேஸ்வரி அம்மன்
ஆந்திர மாநிலத்தில் தவளேஸ்வரம் என்ற ஊர் இருந்தது. ஒரு காலத்தில் கோதாவரி நதிக்கு அணைகட்ட எடுத்த முயற்சியின் போது இவ்வூர் அணைக்குள் மூழ்கிவிட்டது. இதனால், அங்கு வசித்த அந்தணர்கள் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு விசாகப்பட்டினத்திற்கு குடி பெயர்ந்தவர்களில் ஒருவர் வேதமூர்த்தி சாஸ்திரிகள். பத்ராசலம் ராமபிரானின் தீவிர பக்தர் இவர். அந்த ஸ்ரீராமனின் அருளால், அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ஜாதகத்தை பார்த்தவுடனேயே, இது உலகிற்கு ஒளி காட்ட வந்த குழந்தை என்பது தந்தைக்கு தெளிவாகி விட்டது. வேதக் கல்வி பயில மகனை அனுப்பினார். மகனின் விருப்பப்படி அவரை சட்டம் படிக்க வைப்பதற்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். மகன் கற்றுத் தேர்ந்தார். வக்கீல் தொழிலில் வருமானத்தை விட, புகழ் அதிகமாக சேர்ந்தது. ஏனெனில் இவர் நியாயமான வழக்குகளில் மட்டுமே ஆஜரானார். அவரது இயற்பெயர் என்னவென்று தெரியாததால் அவரை ஜட்ஜ் சுவாமி என்றே அவைரும் அழைத்தனர். ஜட்ஜ் சுவாமிக்கு திருமணமும் ஆனது. இரண்டு புத்திரர்களும் பிறந்தார்கள். 20 வருடங்கள் கழிந்தன. இந்நேரத்தில் தான் இறைவன் அவரது பிறப்பின் நோக்கத்தை வெளிப்படுத்த நினைத்தான். திருவிதாங்கூர் ராஜ்யத்தில் நீதி பரிபாலனம் செய்ய மகாராஜா சரியான ஒருநபரை தேர்வு செய்ய விருப்பம் கொண்டார். அந்நேரத்தில் ஜட்ஜ் சுவாமி குறித்த தகவல் அவரை எட்டியது. தக்கார் ஒருவரை அனுப்பி, அவரிடம் பேசினார். வக்கீல் தொழிலை விட குறைந்த வருமானமே வரும் எனினும் கூட அவரும் சம்மதித்தார். திருவாதங்கூர் ராஜ்யத்தின் தலைமை நீதிபதியானார் ஜட்ஜ் சுவாமி. பல வழக்குகளிலும் நடுநிலையோடு தீர்ப்பு சொன்னார்.
ஒருமுறை கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது, குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என சுவாமியின் மனதில் பட்டது. ஆனால் சட்டப்படி சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு, அவரை தண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சட்டம் பெரிதா, தர்மம் பெரிதா என்ற மனப்போராட்டத்தில் சிக்கினார். அவனை தண்டித்து விட்டால், அவன் குடும்பம் படப்போகும் பாட்டை எண்ணி வேதனைப்பட்டார். தன்னால் ஒரு நிரபராதியின் வாழ்வு அழியக்கூடாது எனக்கருதிய அவர். யாரிடமும் சொல்லாமல் கிளம்பி விட்டார். குடும்பத்தினருக்கும் அவர் சென்றது தெரியாது. பின்பு ஆன்மஞானம் தேடி திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை என பல தலங்களுக்கு அலைந்தார். காளஹஸ்தி சென்றடைந்தார். தனக்கு வழிகாட்ட ஒரு சற்குரு வேண்டும். நான் யார் என்பதை எனக்கு உணர்த்த வேண்டும். எனக்கு வழிகாட்ட ஒரு குருவின் துணை வேண்டும் எனக் கருதியவர் ஒரு ஆஸ்ரமத்தின் முன் சென்று நின்றார். ஒரு வாரம் பட்டினியாய் கிடந்தார். அந்த ஆஸ்ரமத்தின் தலைவர் ராமகிருஷ்ண குரு மகராஜ், தன்னைத் தேடி வந்த அந்த ஞானதீபம் வாசலில் நின்று கொண்டிருப்பதை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். அவரை நேரில் வந்து வரவேற்றார். அவருக்கு தீட்சை செய்து வைத்தார். முழுமையான துறவி என்ற அந்தஸ்தைப் பெற்றார். சதாசிவம் என்ற தீட்சாநாமம் அவருக்கு கிட்டியது. இதன் பிறகு அவர் சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமி என அழைக்கப்பட்டார். சதாசிவ அவதூதர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இருப்பினும் இவர் வகித்த நீதிபதி பதவியைக் கருத்தில் கொண்டு, மக்கள் ஜட்ஜ் சுவாமி என்ற திருப்பெயரிட்டே இன்றும் வழங்கி வருகின்றனர்
ஜட்ஜ் சுவாமிகள் பல்வேறு தலங்களுக்கு சென்றார். கடைசியாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் வந்து தங்கியிருந்தார். இதனிடையே புதுக்கோட்டை கானாம்பேட்டை(பிரம்ம வித்யாபுரம்)யில் வசித்த நரசிம்ம கனபாடிகள், குருஸ்வாமி கனபாடிகள் ஆகியோரின் சகோதரரான கிருஷ்ணமூர்த்தி துறவறம் பூண்டார். அவர் சுவாமியைத் தேடி மானாமதுரை வந்தார். அவரே தனது ஞான வாரிசு என்பதை உணர்ந்த ஜட்ஜ் சுவாமி அவருக்கு சுயம்பிரகாசர் என் தீட்சாநாமம் வழங்கினார். இதன் பின் திருச்சி தாயுமானசுவாமி கோயிலுக்கு வந்தார் சுவாமி. அங்கு வந்ததும் தனது அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்தார். புதுக் கோட்டை நோக்கி நடந்தே சென்றார். இங்கிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள நார்த்தாமலை சென்ற அவர், அங்குள்ள சிவன்கோயிலில் நிஷ்டையில் அமர்ந்தார். அவரது நிலையைக் கண்டு பரவசத்தில் மூழ்கினர் பக்தர்கள். அவரது தியானம் கலையாமல் அவரை அப்படியே ஒரு பல்லக்கில் ஏற்றி, புதுக்கோட்டை கொண்டு வந்தனர். அங்கு வந்ததும் சுவாமி இறைவனுடன் ஒன்றினார். புதுக்கோட்டை மன்னரின் திவான் சுவாமியை வணங்கினார். மன்னரின் உத்தரவுபடி நகரின் வடகிழக்கு பகுதியில், தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார்.
சித்தர்கள்
25 தலை கொண்ட சதாசிவர்
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தை நான் என் சிறுவயதில் (10-11 வயதில் எனக்குப் பூணல் போட்ட புதிதில்) போய்ப் பார்த்துள்ளேன்.
ReplyDeleteஅங்கு ஸத்குரு சாந்தானந்தசுவாமிகள் அவர்கள் தலைமையில், ஒரு மிகப்பெரிய கணபதி ஹோமம் நடைபெற்றது.
108 பிரும்மச்சாரிகளை வைத்து, அவர்களை பிள்ளையாராகவே பாவித்து, ஒரே நேரத்தில் தனித்தனியே ஹோமம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அந்த 108 பேர்களில் எனக்கும் ஓர் வாய்ப்பு தந்து இங்கு திருச்சியிலிருந்து கூட்டிச் சென்ற பிரும்மச்சாரிகளில் என்னையும் ஒருவனாகக் கூட்டிச் சென்றிருந்தார்கள்.
சாக்ஷாத் புவனேஸ்வரி அம்பாள் சந்நதியில் நடைபெற்ற அந்த சுகானுபவங்கள், கொஞ்சம் கொஞ்சம் இன்னும் என்
பசுமையான நினைவுகளில் உள்ளன.
>>>>>
ஜட்ஜ் ஸ்வாமிகள் பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். சிலவற்றைப் படித்தும் உள்ளேன். தங்களின் இந்தப்பதிவு மூலம் மேலும் தெரிந்துகொள்ள முடிந்தது. சந்தோஷம்.
ReplyDelete>>>>>
காட்டியுள்ள படங்கள் எல்லாமே சூப்பராக உள்ளன.
ReplyDeleteபகிர்வுக்கு என் நன்றிகள்.
-=-=-=-