Wednesday, March 8, 2017


பெரியவா சரணம் !!

""பெரியவா நெனச்சேள்! பழம் வந்துது!..." 

ஒரு ஐப்பஸி மாஸத்தில், ஸ்ரீமடத்தில் பெரியவா பக்தர்களுடன் ஏதோ பேசிக்கொண்டும், விஜாரித்துக் கொண்டும் தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தார். பெரியவாளுக்கு முன் மூங்கில் தட்டுகளிலும், தாம்பாளங்களிலும் அநேகவிதமான பழங்கள் கொட்டிக் கிடந்தன.

அந்தக் கூட்டத்தில், ஒரு மூன்று வயஸுப் பெண்குழந்தை ஸந்தோஷமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. பெண் குழந்தைகளுக்கு எத்தனைதான் விதவிதமாக குட்டையான கவுன், ஸ்கர்ட் என்று போட்டாலும், தழைய தழைய பாவாடை கட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம், ஏனோ ஒருவித தெய்வீகக்களை, தானாகவே வந்துவிடும். அன்று அந்தக் குழந்தையும், பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருந்தது. 

பெரியவா அந்தக் குழந்தையை அருகில் அழைத்தார். பெரியவாளிடம் ஓடியது.... 

"என்ன உம்மாச்சி தாத்தா?..." 

மழலையில் கேட்டது. 

தன் முன்னால் இருந்த தட்டுக்களை அதனிடம் காட்டி, அதுக்கு choice வேற குடுத்தார்....

"இந்தா....இதுலேந்து ஒனக்கு என்ன பழம் வேணுமோ, அதை நீயே, ஒன்னோட குஞ்சுக்கையால எடுத்துக்கோ" 

அந்தக் குட்டிக்கு படு குஷியாகி விட்டது! 

ஒவ்வொரு தட்டாக inspect பண்ண ஆரம்பித்தது..... 

அன்னாஸி, ஆப்பிள், ஆரஞ்சு, த்ராக்ஷை, வாழைப்பழம் எல்லாம் கொட்டிக் கிடந்தது. 

குழந்தை இல்லையா? குழந்தை மாதிரிதானே கேட்கும்? 

இதுவும் கேட்டது.........

அங்கே இல்லாத ஒரு பழத்தை!

"உம்மாச்சி தாத்தா...! எனக்கு மாம்பழம் வேணும்... காணுமே!..."

மாம்பழம் எங்கிருந்து வரும்? மாவடு ஸீஸன் கூட ஆரம்பிக்கவில்லை! 

"மாம்பழம் அதுல இல்லியா?...." 

கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார். பிறகு வேதபுரி மாமாவைக் கூப்பிட்டார்....

"வேதபுரி! உள்ள போய், மேட்டூர் ஸ்வாமிகிட்ட எதாவுது மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா பாரு!...." 

வேதபுரி மாமா சென்றதும், கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

ஸரியாக அந்த ஸமயத்தில், கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஆந்த்ராவிலிருந்து ரெண்டு பேர், ஆளுக்கொரு பழத்தட்டுடன் வந்தார்கள். 

பெரியவா முன் பழத்தட்டை கீழே வைத்துவிட்டு, நமஸ்காரம் பண்ணினார்கள். 

குழந்தை அவர்கள் வைத்த தட்டைப் பார்த்தது. 

"உம்மாச்சி தாத்தா..! மாம்பழம்!..."

அழகாக குண்டு குண்டு மாம்பழங்கள் மேலாக இருந்தது. பெரியவா கண்களைத் திறந்தார். 

அந்தக் குழந்தையிடம் மாம்பழத்தைக் காட்டி, "எடுத்துக்கோ!..." என்றதும், அழகாக ஒரே ஒரு மாம்பழத்தை இரண்டு கைகளிலும் தூக்க முடியாமல் தூக்கி எடுத்துக் கொண்டது. 

முகமெல்லாம் ஒரே ஸந்தோஷம்!

வேதபுரி மாமா திரும்பி வந்து பெரியவாளிடம் " அங்க ஒண்ணுமே இல்ல...." என்று சொல்லிவிட்டு குழந்தையின் பக்கம் திரும்பியவர், அதன் கைகளில் உள்ள குண்டு மாம்பழத்தைப் பார்த்ததும் திகைத்துப் போனார்!

"ஏண்டா ! மாம்பழம் எப்டி வந்துது?..." 

தெரியாதவர் போல் பெரியவா அதிஸயமாகக் கேட்டதும், தெரிந்தே, மிக அழகான பதிலை வேதபுரி மாமா கண்களில் கண்ணீரோடு சொன்னார்.......

"பெரியவா நெனச்சேள்! பழம் வந்துது!..." 

மாம்பழம் கொண்டு வந்த ஆந்த்ராக்காரர்கள் அதன்பின் அங்கே காணப்படவில்லை!

ஒண்ணுமே தெரியாத சின்னக் குழந்தை மாம்பழம் கேட்பது, அழகாக இருக்கும்.ஆனால் எல்லாம் தெரிந்த பெரிய குழந்தைகளான நாமும், மாம்பழத்தைத்தான் கேட்போம்! அதில் தவறேதும் இல்லை! 

அதன் அர்த்தம் அறிந்து இப்படிக் கேட்போமே!

[மா+பழம்] மாமஹாப் பழமான பெரியவாளிடம், 'மாம்பழ'மான பெரியவாளையே கேட்போம்! 

அல்லது....

[மாம்-என்னை, பழம்-பழமை ] "பழமையான, அனாதியான, என்னையே எனக்கு குடு" என்று கேட்டுக் கொண்டே இருப்போம்! 

தராமலா போவார்? கட்டாயம் தருவார்.


பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்


3 comments:

 1. வழக்கம்போல் படங்கள் மூன்றும் அழகோ அழகு !

  >>>>>

  ReplyDelete
 2. //பெண் குழந்தைகளுக்கு எத்தனைதான் விதவிதமாக குட்டையான கவுன், ஸ்கர்ட் என்று போட்டாலும், தழைய தழைய பாவாடை கட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம், ஏனோ ஒருவித தெய்வீகக்களை, தானாகவே வந்துவிடும்.//

  100% உண்மை. அவ்வாறான அந்தக் குழந்தைகள் சாக்ஷாத் அம்பாள் போலவே காட்சியளிப்பார்கள்.

  >>>>>

  ReplyDelete
 3. //பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் ! அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ? காமகோடி தரிசனம் .. காணக்காணப் புண்ணியம்.//

  மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  எங்கட ஜெயா ஏனோ என் மீது உள்ள கோபத்தில் இரு வாரங்களாக எனக்கு மெயில் மூலம் இணைப்புகள் அனுப்பி வைக்காவிட்டாலும்கூட, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளே என்னை இந்த இரு பதிவுகள் பக்கமும் இன்று போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார்கள். அதனால் எனக்கும் இந்தப் பதிவுகள் இரண்டையும் இன்று பார்க்கும்+படிக்கும் பாக்யம் கிடைத்தன.

  பகிர்வுக்கு நன்றிகள் ஜெ.

  ReplyDelete