Thursday, October 20, 2016

"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"
(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)








குடும்பத்தினரால் அலமேலு,சேலத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தார் - மடத்துக் குடியிருப்பு ஒன்றில் தங்கி சமையல் வேலைக்குச் சென்றார். தினமும்
காஞ்சிப்பெரியவரைத் தரிசனம் செய்வதைக் கடமையாகக் கொண்டார்.
ஐம்பது வயதில் காஞ்சிபுரம் வந்த அவருக்கு வய்து தற்போது எழுபது ஆனது. அதன் பின் வேலைக்கு செல்ல முடியவில்லை. பக்கத்துத் தெருவில் இருந்த வசந்தாவின் ஆதரவுடன் பொழுதைக் கழித்தார்.
ஒருமுறை வசந்தாவின் தாயார் இறந்து விட்டதால் அவர் திருச்சி செல்ல நேர்ந்தது. இந்த நேரத்தில் அலமேலு பாட்டிக்குக் காய்ச்சல் வந்து விட்டது. பசியால் வாடிய அவர் கவனிப்பார் இன்றி படுக்கையில் கிடந்தார்.

வாய் மட்டும்,  பெரியவா...பெரியவா..." என்று அவரின் திரு நாமத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. திடீரென, "பாட்டி...பாட்டி..." என்று சத்தம் கேட்டது. தட்டுத் தடுமாறி எழுந்த பாட்டி கதவைத் திறந்தார்.   அங்கு வசந்தாவின் மகள் காமாட்சி நின்றாள்.    கையில் சாப்பாட்டுக் கூடை இருந்தது.  "என்ன பாட்டி,ஒடம்பு தேவலையா?" என்றாள் சிறுமி  தலை அசைத்தாள் பாட்டி. சிரித்தபடியே காமாட்சி,  "பாட்டி...இந்தக் கூடையிலே ரசம் சாதம் இருக்கு.
சாப்பிட்டு நிம்மதியா இருங்கோ...நான் பாட்டுகிளாஸ்க்குப் போயிட்டு வரேன் என்று சொல்லி ஓடினாள்.

கூடைக்குள் சாதத்துடன், மிளகு ரசம், சுட்ட அப்பளம்,  உப்பு,நார்த்தங்காய்,வெந்நீர்,காய்ச்சல் மாத்திரை என அனைத்தும் இருந்தன. வசந்தாவின் பாசத்தை எண்ணி  நெகிழ்ந்து விட்டார் பாட்டி.
நன்றாகச் சாப்பிட்டு மாத்திரையும் போட்டுக்கொண்டதால் காய்ச்சல் விட்டது.வசந்தாவைப் பார்க்க பாட்டிபுறப்பட்டார். வீடு பூட்டி இருந்தது.
"திருச்சியில் இருந்து இன்னும் வசந்தா வரவில்லையே" என்றார் பக்கத்து வீட்டுப் பெண். பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.'காமாட்சி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாளே! அது எப்படி?' என்ற கேள்வி மனதில் எழுந்தது.
அந்த சிந்தனையுடன் பாட்டி பெரியவரைத் தரிசிக்கச்சென்றார்.அவரது காலில் விழுந்தார்.  "எப்படி இருக்கேள்....காய்ச்சல் தேவலையா?"  என்று கேட்டார் பெரியவர்.
"தான் காய்ச்சலில் அவதிப்பட்டது எப்படித் தெரிந்தது?"  என்று புரியாமல் திகைத்தார்.
"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"  என்று கேட்டு பாட்டியை மேலும் வியப்பில் ஆழ்த்தினார்  பெரியவர்.
பாட்டி வாயடைத்து நின்றார்.

சிரித்த பெரியவர், "திருச்சிக்குப் போன காமாட்சி இன்னும் வரலை...இந்த காஞ்சிபுரத்தை ஆட்சி செய்யுற காமாட்சிதான் உன்னைத் தேடி வந்தா..." என்று கோவில் இருக்கும் திசையைக் காட்டினார்.


அலமேலு பாட்டி அப்படியே சிலையாகிப் போனார்.   உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!


நன்றி-மே 2016 ஞான ஆலயம்

4 comments:

  1. ஆஹா, படித்து வியந்தேன். மிகவும் த்ரில்லிங் ஆக உள்ளது.

    மஹா பெரியவாளாகிய ஸ்ரீ காமாக்ஷியே ஆகாரம் முதலியன நேரில் கொடுத்து வந்து கொடுக்கணும் என்றால் அந்தப் பாட்டிக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் மேல் எவ்வளவு ஒரு பக்தி இருந்திருக்கணும். !!!!!

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து வைத்த பாட்டி.

      நம்பினவனுக்கு தெய்வம்
      நம்பாதவனுக்கு கல்.

      சரணாகதி அடைந்தால் பலன் நிச்சயம்.

      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

      Delete
  2. வழக்கம்போல் படங்களெல்லாம் அழகோ அழகு !

    அதுவும் ’அர்த்தநாரீஸ்வரராக’ அந்த முதல் படம் எப்படித்தான் கிடைத்ததோ. ஸ்பெஷல் நன்றிகள். :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அந்த “கூகுளாண்டவரின்” அருட்கடாட்சம்தான்.

      Delete