Sunday, January 25, 2015



 ரதசப்தமி!




பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், தை முதல் நாள் தொடங்குகிறது என்று சொன்னாலும், அந்தப் பயணம் தைமாதம்சப்தமிநாளில்தான் ஆரம்பமாகிறது. திருப்பத்தில் ஓடிவரும் ஏழுபேரும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தாமதப்படும் என்பதை விளையாட்டுப் போட்டியில் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல ஏழு குதிரைகளும் ஒரு சேரத் திரும்பி, பயணம் தொடங்கும் நாள் தை மாத சப்தமி. சூரியனின் ஒற்றைச் சக்கர ரதத்தின் உத்தராயணப் பயணம் அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அதனால், ‘ரத சப்தமிஎன்று கொண்டாடப்படுகிறது இந்தத் திருநாள்.
இந்த நாளில், எருக்க இலைகளை தலையில் வைத்தபடி கிழக்கு நோக்கி நீராட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதனால், சூரியனின் கிரணங்கள் எருக்க இலையின் வழியே நம் உடலில் படிந்து, நோய்களை குணப்படுத்துகின்றன என்று வரையறுக்கிறார்கள். திருமங்கலக்குடியின் தலவிருட்சமும், சூரியனார் கோயிலின் தல விருட்சமும் எருக்குதான். ‘எருக்கு இலையில் தயிர் சாதத்தை வைத்து உண்டால், எருக்கின் அணுவளவு சத்து உணவில் கலந்து, உடலில் சேர்கிறது. அதனால், தொழுநோய் குணமாகும் என்கிறது திருமங்கலக்குடி தல புராணம்.
ஜோதிட சாஸ்திரம், ‘ஆரோக்கியம் தருபவன் சூரியன்என்று சொல்கிறது. அதர்வண வேதம், ‘சூரியனை வழிபடுவதால், உடல் நலம் சிறக்கும்என்று குறிப்பிடுகிறது. இந்த நாளில், வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலமிட்டு சூரியனை வழிபடுவது விசேஷமானது. இந்த நாளில் விரதம் இருப்பதும் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் வடை, இனிப்பு வகைகள் நிவேதனம் செய்வதும் சிறப்பானது.

சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்பதியில்ரத சப்தமிவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருமலையப்பன். பத்துநாள் விழாக்களைபிரம்மோற்சவம்என்பார்கள். அந்த நாளில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி உலா வருவார். இந்த ரத சப்தமி சமயத்தில், ‘ஒரே நாளில் ஏழு வாகன உலாஎன்பதால், ‘அர்த்த பிரம் மோத்ஸவம் என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள்.


திருமலை, ஏழுமலைகளை கொண்டது என்றால், ஸ்ரீரங்கம் ஏழு பிராகாரங்களைக் கொண்டது. இங்கும்நம்பெருமாள்ரத சப்தமியை விமரிசையாகக் கொண்டாடுகிறார். தை மாதத்தில், சூரியனை விஷ்ணு என்ற சொல்லால் குறிப்பதால், பெருமாள் கோயில்களில் இந்த விழா, சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது போலும்.
சூரியனை வழிபட்டு, விசேஷ பலன்களைப் பெறவும், புதிய செயல்களைத் தொடங்கவும், இந்த நாள் மிகச் சிறப்பானது. இந்த நாளில், விரதம் மேற்கொள்வது, தடைகளைப் போக்கி, காரியங்களை கைகூடச் செய்யவல்லது. பிதுர் லோகத்துக்கு அதிபதியாகவும், ஆத்ம காரகனாகவும் விளங்கும் சூரியனுக்கான இந்த விரதம், உடல் நலம், மன நலம், நற்குணப் பெருக்கம், செல்வ வளம், காரிய வெற்றி ஆகியவற்றைத் தரவல்லது.
குறிப்பாக, அதிகாலையில் எழுந்து, சூரியனை வழிபட்டு, இந்த விரதத்தை முறையாகப் பின்பற்றத் தொடங்கினால், வெற்றிகளின் அணிவகுப்பாக வாழ்க்கை அமையும்.


வாயுபுத்திரனான ஹனுமன், சூரியனிடமிருந்தே கல்வி கற்றான் என்பதையும், வைசம்பாயனர் சூரியனிலிருந்துதான் சுக்ல யஜுர் வேதம் பயின்றார் என்பதும் புராணச் செய்திகள். உஷா, பிரதியுஷா என்று இரு மனைவியரும், யமன், யமி, சனீஸ்வரன் உள்ளிட்ட புத்திரர்களும் சூரியனுக்கு உண்டு என்கின்றன புராணங்கள். சுக்ரீவனையும், கர்ணனையும் சூரிய புத்திரர்களாக விவரிக்கின்றன இதிகாசங்கள்.
சூரியத் தலங்கள்!

உச்சிக்கிழான் கொட்டம்என்ற பெயரில், பூம்புகாரில் சூரியன் கோயில் இருந்ததாகச் சொல்கிறது சங்க இலக்கியம். சூரியனின் ஒளி அமைப்பை, உதயம், நண்பகல், மாலை என்று மூன்றாகக் கொண்டு, மூன்று இடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்த வரிசையில், உதயகால சூரியனுக்கான கோயில்தான் முதலில் அமைந்தது. அதை அமைத்தவன் சாம்பன் என்றும், அந்தக் கோயிலே இன்றைய ஒடிசா மாநிலத்தில் உள்ளகொனார்க்என்று சொல்கிறார்கள்.



நண்பகலில் ஜொலிக்கும் சூரிய பகவானுக்கான கோயில், சந்திரபாகா நதிக்கரையில் அமைந்தது. அந்தக் கோயிலுக்கேமூலஸ்தானம்என்று பெயர். அதுதான் மருவி, இன்றையமூல்தான்’ (பாகிஸ்தானில் உள்ள இடம்) என்கிறார்கள். சந்திரபாகா நதியே, ‘சீனாப்நதி என்றும் சொல்லப்படுகிறது. இன்று அப்படி ஓர் ஆலயம் இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை.

மூன்றாவது, மாலைச் சூரியனுக்கான ஆலயம், ‘மொதேரா’. இது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. என்றாலும், தமிழகத்தில் சூரியனுக்காக அமைந்த ஒரே கோயில் சூரியனார் கோயில்தான். இதைத்தவிர, சூரியன் பெயரால் அமைந்த தலை ஞாயிறு, திருப்பரிதி நியமம், ஞாயிறு போன்றவையும் சூரியன் வழிபட்ட தலங்களாக அமைந்துள்ளன.

உலகெங்கும் சூரிய வழிபாடு!

எகிப்தை ஆண்ட பாரோ மன்னர்கள், தங்களை சூரியன் வழி வந்தவர்களாகவே கருதினர். கிரேக்கர்கள், ‘அப்போலோஎன்றும், ரோமர்கள், ‘ஹைபீரியன்என்றும் சூரியனை வழிபட்டனர். அமெரிக்க பழங்குடிகளான இன்காஸ் இனத்தவரும் சூரிய வழிபாடு செய்ததாக, குறிப்புகள் தெரிவிக்கின்றன.


Tuesday, January 20, 2015

அபிராமி பட்டர்










 திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்த பக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்து வந்தார்.
ஆனால், ஊராரில் பலர் இவரது அருமை, பெருமைகளை அறியாது, இவரை ஊனும், கள்ளும் உண்டு திரியும் பித்தர், வாமாசாரத்தவர் என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு புறம் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அபிராமிபட்டர் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. அவர் எந்நேரமும் அன்னை அபிராமியையும் அமிர்தகடேஸ்வரரையும் எண்ணித் தொழுது, தியானித்து வந்தார்.

ஒரு முறை தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று கடலாடி விட்டுத் திரும்புகையில் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரரையும், அபிராமியன்னையையும் வழிபடுவதற்குக் கோவிலுக்கு வந்தார்

அப்போது அபிராமியன்னையின் திருக்கோவிலில் இவ்வுலக நினைவு ஏதுமின்றி அம்பிகையின் மீதான தியான நிலையில் இருந்தார் அபிராமி பட்டர். அரசரும் அவரது பரிவாரங்களும் வந்த ஆரவாரம் எதுவும் அவருக்குத் தெரியவில்லை.
அவரது மேனியில் இருந்த தெய்வீகப் புத்தொளியைக் கண்ட அரசர், அருகிலிருந்தோரிடம் இவர் யார்? என்று கேட்டார். அப்போது அருகிலிருந்தவர்கள், இவர் ஒரு பித்தர். ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுபவர், ஊனும், கள்ளும் உண்டு திரிபவர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கூறினர்.
அதைக் கேட்ட அரசர் ஒன்றும் பேசாது, உள்ளே போய் அபிராமியன்னையை வழிபட்டுத் திரும்பினார். திரும்புகையில் மீண்டும் பட்டரைப் பார்த்தார். அவர் முகத்தில் வீசும் ஒளி கண்டு, ஏதேனும் பேச எண்ணி, அருகில் சென்று பட்டரே, இன்று என்ன திதி? என்று வினவினார்.
மனதில் முழுமதி போன்று ஒளி பொருந்திய அபிராமி அன்னையின் நினைவிலிருந்த பட்டர், அந்த அன்னையின் அகக்காட்சி இன்பத்தில் திளைத்திருந்ததால் இன்று பௌர்ணமி என்று விடையளித்தார்.

அதுகேட்ட அரசரும், மற்றவர்கள் அவரைப்பற்றிக் கூறியவை உண்மையே என்றெண்ணி அகன்றார்.
பின் தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர், நிகழ்ந்ததை அறிந்து பெரிதும் வருந்தினார். மற்றவர்கள் முன் தனக்கு இழிவு ஏற்படுமாறு நடந்து கொண்டோமே என்று எண்ணி, தன்னைப் பழியிலிருந்து அபிராமி அன்னையே காத்திட வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அபிராமி சன்னிதி முன் ஆழமாக ஒரு குழி வெட்டி, அதில் நெருப்பை மூட்டி, அதன் மேலே ஒரு விட்டத்தில் நூறு ஆரங்கள் கொண்ட உறி ஒன்றைக் கட்டி, அதில் அமர்ந்து கொண்டார்.

அபிராமி அன்னையை வணங்கி, அன்னை தனக்கு ஏற்பட்ட பழியைத் துடைக்காவிட்டால், உயிர் துறப்பேன் என்று கூறி, உதிக்கின்ற செங்கதிர் எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடத்தொடங்கினார்.
ஒவ்வொரு பாடலின் முடிவில் (அந்தத்தில்) உள்ள சொல்லை அடுத்த பாடலின் தொடக்கமாகக் (ஆதியாக) கொண்டு பாடும் அந்தாதி வகைப் பாடல்களை அவர் பாடியபோது, ஒவ்வொரு பாடல் முடிவிலும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அரிந்து கொண்டு வந்தார். மாலையில் கதிரவன் மறையும் நேரமும் வந்தது. அப்போது 79 & ஆவது பாடலாகிய,
விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க
ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோடென்ன கூட்டினியே!

என்னும் பாடலைப் பாடி முடித்தார். உடனே, அன்னை அபிராமி வெளிப்பட்டுக் காட்சி தந்தாள். தன் காதிலிருந்த தோடு ஒன்றினைக் கழற்றி அன்னை வானில் வீச, அது முழு நிலவாக ஒளி வீசியது


மேலும் அன்னை பட்டரை நோக்கி, அன்பனே, அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடிப்பாயாக என ஆணையிட்டு மறைந்தாள்.
அபிராமி பட்டரும் அன்னையின் கருணையை எண்ணி மகிழ்ந்து, துதித்து 100 பாடல்களைப் பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.
இதை அறிந்த சரபோஜி மன்னரும் அபிராமி பட்டரிடம் வந்து வணங்கி, அவருக்கு ஏராளமான மானியங்களைக் கொடுத்தார் என்று அபிராமி அந்தாதி தோன்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது.
அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலன் தருவதாகக் கூறுகிறார்கள். சான்றாக, உதிக்கின்ற செங்கதிர் எனத் தொடங்கும் முதல் பாடல் நல்வித்தையும், ஞானமும் தரும் எனவும், நின்றும் இருந்தும் கிடந்தும் எனத் தொடங்கும் 10 – ஆம் பாடல் மோட்ச சாதனம் பெறவும், தண்ணளிக்கென்று முன்னே பலகோடி எனத் தொடங்கும் 15- ஆம் பாடல் பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறவும் உதவும் எனக் கூறப்படுகிறது. இப்படியே 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.
 

ஒரு தை மாத அமாவாசை நாள் அன்று அபிராமி பட்டர் உலக்குக்கு அளித்த ‘அபிராமி அந்தாதி’யை தை அமாவாசையாகிய இன்று நாமும் படித்து பலன் பெறுவோம்.