Wednesday, December 31, 2014

வைகுண்ட ஏகாதசி



மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று போற்றுவர். இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் பரமபதவாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். பெருமாள், பரமபத வாசல் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது.

நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.




ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும், மகிழ்ச்சியடைந்த ரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ரங்கநாதரும் அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

இன்னொரு தகவல்

கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டது. இனிமேல் அதர்மம் தலை தூக்கும்; தர்மம் நிலை குலையும்; பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்தச் சூழலிலிருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது. அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

உடனே பெருமாள் சொன்னார்: ‘‘கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும், வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


பெரும்பாலான வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

வைணவக் கோயில்களில் ஏகாதசி திதியை கணக்கிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், புதுக்கோட்டையிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் இருக்கும் திருமயம் திருத்தலத்தில் ஏகாதசி திதியையொட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.


புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சொர்க்க வாசல் சன்னிதி என்று தனியே கிடையாது. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதசி திதியை முன்னிட்டு ‘முக்கோடி பிரதட்சண வாசல்’ திறப்பு விழா நடைபெறும். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடாஜலபதியைத் தரிசித்த பின்னர் வெளியில் வந்தால் காணப்படும் பிரகாரத்தை ‘விமான பிரதட்சண பிரகாரம்’ என்பார்கள்.

இந்த பிரகாரத்துக்கும் வேங்கடவன் அருள்புரியும் மூலஸ்தானத்துக்கும் நடுவில் ஒரு பிரகாரம் உள்ளது. இது திருமலையில் மட்டுமே உள்ள அபூர்வமான பிரகாரம். இப்பிரகாரத்தை வலம் வந்தால் மகா புண்ணியம் கிட்டும். வேங்கடவனைத் தரிசித்து, வாயிலைக் கடந்ததும் இருப்பது ஸ்நபன மண்டபம். இதையடுத்து ராமர் மேடை உள்ளது. இதற்கு இடப்பக்கம் ஆரம்பித்து, மூலவரான வேங்கடாசலபதியை வலம் வந்து உண்டியல் இருக்கும் இடத்தை அடைகிறோம். இப்பகுதி, ‘முக்கோடி பிரதட்சண பிரகாரம்’ ஆகும்.

இந்தப் பிரகாரம் வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமிரத் திருநாள் முதல் துவாதசி திருநாள் வரை திறந்திருக்கும். திருமலையில் முக்கோடி பிரதட்சணம், சொர்க்க வாசலுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை ‘விருச்சிக ஏகாதசி’ என்று போற்றுவர். குருவாயூர் கோயிலில் இந்த விழாவை பதினெட்டு நாட்கள் கொண்டாடுவர். இதையொட்டி தீபஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, சொர்க்க லோகம்போல் கோயில் காட்சி தரும். மேலும் ஏகாதசியன்று அதிகாலை 3-30 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும்.

விருச்சிக ஏகாதசியையொட்டி, அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப்பது சொர்க்கவாசல் வைபவத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலையில் 4-15 மணிக்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், சில கோயில்களில சொர்க்க வாசல் கிடையாது; ஆனால், வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீ காட்ச பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது. அங்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

ஒன்று ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்; மற்றொன்று தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். எனவே, இங்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி கிடையாது. ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் ராமானுஜர் அவதரித்ததால், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில், நித்ய சொர்க்க வாசல் திருத்தலமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி இல்லை. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருள் வார்கள்.

அவ்வேளையில் சொர்க்க வாசல் திறப்பதுபோல் இங்குள்ள மணிக்கதவை (சன்னதிக் கதவை) திறப்பர். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டணம் ரங்கநாதர் கோயிலில் தைப் பொங்கல் அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சாஸ்திர சம்பிரதாயப்படி வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் கடைப்பிடித்து பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.











அனைவருக்கும் 
இனிய ஆங்கில புத்தாண்டு 
நல் வாழ்த்துக்கள்.

1 comment:

  1. வைகுண்ட ஏகாதஸி பற்றிய மிகச்சிறப்பான பகிர்வு. படங்களும் அழகு. அதிசயமாக இன்று விடியற்காலம் தூங்கி எழுந்ததும் இது முதன் முதலாகக் கண்ணில் பட்டது என் பாக்யம்.

    ஜெயா தந்துள்ள புத்தாண்டுப்பரிசு. அக்கார அடிசல் + புளியோதரை போல ருசியோ ருசியாக உள்ளது.

    ஜெ + குடும்பத்தார் அனைவருக்கும் இனிய வைகுண்ட ஏகாதஸி + ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete