Thursday, August 31, 2017





*ஸம்ஸாரத்தை நன்னா கவனிச்சுக்கோ*

Image may contain: 1 person, drawing

DRAWN BY: Sri Sudhan Kalidas


பெரியவாளிடம் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு நின்றார் ஒரு நடுத்தர வயது பக்தர் !

"பெரியவாகிட்ட ஒண்ணு சொல்லணும்..."

"சொல்லு....."

இவர் என்ன சொல்லப் போகிறார் என்பது பெரியவாளுக்கு தெரியாதா என்ன? ஆனாலும், அவரையே சொல்ல விட்டு, அதன் மூலம் நம் அத்தனை பேருக்கும் உபதேஸிக்கத்தான்...இந்த acting....!

தன் மனைவியைப் பற்றிய complaint லிஸ்டை ஒப்பித்தார் அந்த பக்தர்.

" என் பொண்டாட்டிக்கு எப்போப்பாத்தாலும் ஒடம்புல அது ஸெரியில்ல, இது ஸெரியில்ல... ஸதா....தலைவலி, தலைவலின்னு சொல்லிண்டு நேரங்காலம் இல்லாம படுத்துண்டே இருக்கா... ஸமையல் கூட ஸெரியா பண்ணறதில்ல... கொழந்தேளைக் கூட ஸெரியா பாத்துக்கறதில்ல ...."

அடுக்கிக்கொண்டே போனார்.

" சொல்லி முடிச்சியா? கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ!" என்பது போல், பெரியவா அவரைப் பார்த்தார்.

இதோ! நம் அத்தனை பேருக்குமான திருவாக்கு....

"இப்போ எங்கிட்ட ஓம்பொண்டாட்டியப் பத்தி சொன்ன complaint-டை, ஒன்னோட ஸ்நேஹிதாள் கிட்ட சொல்லிப் பாரு! ..... 'ஒடனே ஒன் ஸம்ஸாரத்தை டைவர்ஸ் பண்ணு"..ன்னு உபதேஸம் பண்ணுவா.!

அதையே, ஒன்னோட பந்துக்கள்கிட்ட சொன்னா...... "அவ கெடக்கா கழிஶடை! பொறந்தாத்துக்கு அனுப்பிச்சுட்டு, வேற நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோ! பாவம், ஒனக்கு அவளால, ஒரு ஸந்தோஷமும் இல்ல"..ன்னு சொல்லுவா!

ஜோஸ்யர்கிட்ட கேட்டியானா, "ராஹு தெஸை, கேது தெஸை...பரிஹாரம் பண்ணு"..ம்பார் !

டாக்டர்-ட்ட போனா, எக்ஸ்-ரே, blood test, ECG, EEG டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நெறைய மருந்து மாத்ரை எழுதிக் குடுப்பார்! அப்டியே ஒன்னோட பர்ஸையும் காலி பண்ணிடுவார்!"

ஸொந்தக்காரப் பாட்டியை கேளு! "ஒனக்கு த்ருஷ்டி தோஷம்... செய்வினை...ஆபீசாரம் இருக்கு.. மந்த்ரவாதிகிட்ட போயி மந்திரிச்சுக்கோ"..ம்பா!.....

.....ஸெரி! எங்கிட்ட வந்தே! வந்ததுதான் வந்தே...." பெரியவா... என் ஸம்ஸாரத்துக்கு ஒடம்பு குணமாகணும்"ன்னு என்னை கேக்கலை... அவளுக்கு ஒடம்பு ஸெரியில்ல... அதுனால அடிச்சு வெரட்ட தயாராய்ட்டேன்"..ன்னு information சொல்ல வந்திருக்க! அப்டித்தான?.."

குரலில் கடுமை இல்லாவிட்டாலும், பெரியவா சொன்ன "ஸத்யம்", எக்ஸ்-ரே மாதிரி, மனஸில் ஓடும் எண்ணங்களை அப்படியே பட்டவர்த்தனமாக கண்ணாடி போல் காட்டியதால், பக்தருடைய உள்ளத்துக்கு, அது மிகவும் கடுமையாக இருந்தது.

பக்தர் மென்று விழுங்கினார்.

"அப்படில்லாம் இல்ல... பெரியவா" என்று ஒப்புக்கு சொன்னால், அந்த ஸத்யப் பொருளின் முன்னால் தன்னுடைய 'பொய்' அப்படியே பஸ்மம் ஆகிவிடாதா?

*"இதோ பாரு! ஸம்ஸாரம்...ங்கறவ வாழ்க்கைத் துணை! அவளுக்கு ஒடம்புக்கு வந்துட்டா... அவளை கவனிக்கறது ஒன்னோட கடமை! இத்தனை வர்ஷமா, ஒனக்கு சோறு வடிச்சுப் போட்டிருக்காளே! ஒன்னோட ஸுக துக்கங்கள்ள பங்கு எடுத்துண்டிருக்காளே! அவளும் ஒரு ஜீவன்தானே? ஒனக்கு கொஞ்சங்கூட பஸ்சாதாபமே இல்லியே!...எத்தன கல் நெஞ்சு ஒனக்கு!* நீ இனிமே தர்ஶனத்துக்கு வர வேணாம்....."

பக்தர் தலையை குனிந்து கொண்டார். பெரியவாளின் வார்த்தைகள் அவருக்குள் ஏதோ ரஸவாதம் நிகழ்த்தியது.

"என்னை மன்னிச்சுக்கணும் பெரியவா... எனக்கு இவ்வளவு கடுமையான தண்டனை குடுக்காதீங்கோ! என் பொண்டாட்டியை நல்லபடியா கவனிச்சுக்கறேன்... தர்ஸனத்துக்கு தடை போடாதீங்கோ!.."

அழுதார்.

உடனே பனியாய் குளிர்ந்தார் பெரியவா.

"ஒன்னோட ஸம்ஸாரத்தை, கோட்டக்கல் ஆயுர்வேத வைத்யர்கிட்ட அழைச்சுண்டு போயி ட்ரீட்மென்ட் குடு! chronic head ache-ங்கறதால, ரெண்டு மூணு மாஸம், வைத்யம் பண்ண வேண்டியிருக்கும்... *க்ஷேமமா இருங்கோ!.."*

ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.

இது புருஷன், பெண்டாட்டிக்கு மட்டும் இல்லை! மனிதர்களாக பிறந்த நாம், மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், உதவி தேவைப்படும் மற்ற ஜீவன்களுக்கும் நம் அன்பை, பாதுகாப்பை அளித்தால், அது கூட நாம் பெரியவாளுக்குச் செய்யும் ஆராதனைதான்!
 

Image may contain: 1 person, drawing


                                           DRAWN BY: Sri Sudhan Kalidas


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !! 
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
🙏

Thursday, August 17, 2017

"பார்வை கிடைக்க பதிகம் பாடச்சொன்ன பரமாசார்யா"

(யாருக்கு,எதை,எப்படிச் சொல்லணுமோ அப்படிச் சொல்லிப்
புரியவைச்சு,அவாளோட கஷ்டத்தைத்தீர்த்து வைப்பார்!- (என்னோட பெருமை என்ன இருக்கு எல்லாம் அந்த காமாக்ஷியோட கடாட்சம் என்றும் சொல்லுவார்)


நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

Image may contain: drawing

DRAWN BY SUDHAN KALIDAS


ஒரு சமயம் மகாபெரியவா காஞ்சி மடத்துல இருந்த சமயத்துல, தன்னோட பேரனுக்கு வைசூரி போட்டு கண்பார்வை போயிடுத்துன்னு ரொம்பவே கவலையோட வந்து பெரியவாகிட்டே முறையீடு பண்ணினா வயசான ஒரு அம்மா.

ஆனா,அவா சொன்னதையே கவனிக்காத மாதிரி,பக்கத்துல இருந்த உபன்யாசகர் ஒருத்தர்கிட்டே பேச ஆரம்பிச்சார்,  மகா பெரியவா. பேச்சுக்கு நடுவுல, 'பெற்றம்'னு ஒரு
வார்த்தை உண்டே. அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமோ?" -ன்னு பெரியவா கேட்டார்.

உபன்யாசகர், அதுக்கு 'கால் நடைகள்''னு விளக்கம் சொல்லிட்டு,திருப்பாவையில் கூட 'பெற்றம் மேய்த்துண்ணும் குலம்'னு  வந்திருக்கு" அப்படின்னார்.

"சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கார்
தெரியுமோ?" அப்படின்னு கேட்ட பரமாசார்யா, கொஞ்சம் நிறுத்திட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

"எப்படிப்பட்ட காலகட்டத்துல,எதுக்காக அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்
தெரியுமோ?. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பரவை நாச்சியாரைக் கல்யாணம் செஞ்சுண்டார்........அதுக்கப்புறம் திருவொற்றியூருக்கு வந்தவர் அங்கே சங்கிலி நாச்சியாரை நேசிச்சார். அவ, தன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா, தன்னைப் பிரிய மாட்டேன்னு திருவொற்றியூர் ஈஸ்வரன் சன்னதியில் நின்னு, சுவாமியை சாட்சியா வைச்சு சத்தியம் பண்ணணும்னு நிபந்தனை விதிச்சா.

சுந்தரருக்குத்தான் சிவபெருமான் சிநேகிதராச்சே.அதனால, தயங்காம சத்தியம் செய்யறதுக்கு ஒப்புத்துண்டார்.....அதுக்கப்புறம் நேரே ஆதிபுரீஸ்வரர்கிட்டே போனார். நடந்ததை சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செஞ்சு தர வர்றச்சே, நீ இந்த சன்னதியில் இருக்க வேண்டாம். வெளீல இருக்கிற மகிழம்பூ மரத்தடியில போய் அமர்ந்துடு. ஏன்னா, உன்மேல் சத்தியம் பண்ணிட்டா அதை மீறவே முடியாது. எனக்கு அது சாத்யமான்னு தெரியலை!" சுந்தரர் சொன்னதும் சுவாமி மறுக்காம சரினுட்டார்.

அதோட நிற்காம சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவுலபோய், "சுந்தரரை என் சன்னதியில் சத்தியம் பண்ணச் சொல்லாமமகிழ மரத்தடியிலே பண்ணச் சொல்லு!" அப்படின்னார்.

மறுநாள், சங்கிலி நாச்சியார் சுந்தரர்கிட்டே அப்படியே சொன்னா.  சுந்தரருக்கு இது ஈஸ்வரனோட திருவிளையாடல்னு புரிஞ்சுடுத்து. வேற வழியில்லாம மகிழ மரத்தடியில
சத்தியம் பண்ணினார்.

கொஞ்சநாள் ஆச்சு. திருவாருர் தியாகராஜரை மறுபடியும் பார்க்கணும்னு ஆசை வந்துடுத்து. சங்கிலி நாச்சியார்கிட்டே சொல்லிக்காமலே கிளம்பிட்டார். ஆனா,சத்தியம் செஞ்சிருக்காரே.. ஈஸ்வரன் சும்மா இருப்பாரா? திருவொற்றியூர் எல்லையைத் தாண்டினதுமே அவரோட
ரெண்டு கண்ணும் இருண்டுடுத்து.

சத்தியம் தவறினவர் ஸ்நேகிதனாலும் சுவாமி தண்டிக்காம விடமாட்டார். "என்ன செஞ்சாலும் நீயே கதி!"ன்னு ஈஸ்வரனைக் கும்பிட்ட சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், இந்தக் காஞ்சி க்ஷேத்ரத்துக்கு வந்து ஏகாம்பரேஸ்வரரைக் கும்பிட்டு ஒரு பதிகம் பாடினார். அவ்வளவுதான் அவரோட இடது கண்ல பார்வை திரும்பிடுத்து.

ஈஸ்வரனோட இடது பாகத்துல இருக்கறவ யார்? காமாட்சி ஆச்சே..! அவளோட க்ருபைதான்.

அந்தப் பதிகத்தைப் பாடினா போதும். போன பார்வை திரும்பி வந்துடும்!" சொல்லி முடிச்சு பெரியவா மெதுவா அந்த வயசானஅம்மா இருந்த பக்கம் திரும்பினார்.

இதுவரைக்கும் தன்னை கவனிக்காதவர் மாதிரி நடிச்சுண்டு, தனக்காகவே அந்தப் புராணக்கதையைச் சொல்லியிருக்கார் பரமாசார்யாங்கறது அந்தப் பாட்டியம்மாவுக்கு அப்போதான் புரிஞ்சுது.நமஸ்காரம் செஞ்ச அவாகிட்டே எதுவுமே சொல்லாம புன்னகையோட கொஞ்சம் கல்கண்டும்,குங்குமமும் பிரசாதமா அவா கையில குடுத்து, ஆசிர்வாதம் செஞ்சார் பெரியவா.

"ஆலந்தான் உகந்து அமுது செயதானை

ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாரே

..அப்படின்னு தொடங்கி


பெற்றம் ஏறுகந் தேற வல்லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படுவானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே...."

அப்படின்னு முடியற அந்த தேவாரப் பதிகத்தை தினமும் பாராயணம் பண்ணினா அந்தப் பாட்டியம்மா.

No automatic alt text available.

DRAWN BY SUDHAN KALIDAS

பரமசார்யாளொட பரம தயாள க்ருபையால தன்னோட பேரனுக்குப் பார்வை திரும்பக் கிடைச்சுடுத்துன்னு அடுத்தமாசமே அவனையும் அழைச்சுண்டு வந்து சந்தோஷமா சொன்னா.பாட்டியம்மா.

"என்னோட பெருமை என்ன இருக்கு? எல்லாம் அந்த காமாக்ஷியோட
கடாட்சம்!" அப்படின்னு சொல்லி பிரசாதம் குடுத்து ஆசிவதிச்சார் , மகா பெரியவா.

(பெற்றம்- எருது,காளை, கால்நடை)



Image may contain: drawing



DRAWN BY SUDHAN KALIDAS