Thursday, February 8, 2018


காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்''
......
உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.

Image may contain: drawing


''ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ''எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். 'காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்'' என்றார் குரல் தழுதழுக்க.
''ஓஹோ... அப்படியா சொன்னார்..?'' என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து... ''எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா... இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா... தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்'' என்று கதறினார்.
பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க... நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ''இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!'' என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பி¬க்ஷயில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பி¬க்ஷ செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ''எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!'' என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, '''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு... இப்ப ஏன் போகணும்கறே?'' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ''இல்லே பெரியவா... சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்...'' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் 'வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். 'வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.
''என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். 'யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் 'வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
'பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே... பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன... சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
''பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்'' எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ''சரிதான்... என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!'' என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!No automatic alt text available. 


புகைப்படங்கள் வரைந்தவர்: சுதன் காளிதாஸ்

Thursday, February 1, 2018

பெரியவா சரணம் !!

Image result for arthanareeswarar


"" பெரியவா என்னிடம் கேட்டதை நீ கவனிக்கவில்லையா? தானே அர்த்தநாரீஸ்வரர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாரே , உனக்கு புரியலையா? ""

ஸ்ரீ மஹா பெரியவா யாரோடும் அதிகம் பேசாமல் ஜாடை மாடையாக இருந்த சமயம். எனது மாமியார் ஜெயலஷ்மி ( பொள்ளாச்சி ஜெயம் என்று ஸ்ரீ மடத்தில் அழைக்க பட்டவர் ) பெரியவா தரிசனத்திற்கு சென்று இருந்தார்கள் . நமஸ்கரித்து விட்டு சற்று ஒதுஙகி நின்று கொண்டு இருந்தார் .அப்போது பெரியவா கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ மேடம் பாலு (பிற் காலத்தில் பாலு ஸ்வாமிகள் ஆகி சமீபத்தில் சித்தி ஆனவர்.

“ஜெயம் நீ பெரியவா பாதுகையே வாங்கிக்கவில்லையே நீ பெரியவாளிடம் கேள் . நிச்சியம் உனக்கு கொடுப்பர் என்று சொன்னார் . உடனே அம்மா நான் போய் கேட்க மாட்டேன் . அவராக கொடுத்தால் கொடுக்கட்டும்” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார் தீவிர பக்தியோடு பிடிவாதமும் பெரியவாளிடம் ஸ்வாதீனமும் உடையவர் எங்கள் அம்மா.

சிறிது நேரம் கழித்து பெரியவா இருந்த இடத்திற்கு அம்மா வந்தாள். இடையில் என்ன நனடந்தது என்று தெரியாது. மஹா பெரியவா அர்த்த புஷ்டி உடன் கைங்கரியம் பாலுவை பார்க்க , அவர் உடனே உள்ளே சென்று ஒரு ஜோடி பாதுகையை கொண்டு வந்து பெரியவா முன் வைத்தார். பெரியவா அந்த கால கட்டத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தரிசனம் கொடுப்பது வழக்கம். ஸ்ரீ பாலு கொண்டு வந்த பாதுகையை பெரியவா தன பாதங்களில் மாட்டி கொண்டார்.

சிறிது நேரம் கழித்து பாலு மாமா பெரியவா பாதத்தில் இருந்து கழட்ட முயற்சி செய்தபோது பெரியவா அனுமதிக்க வில்லை .கால்களை உள்ளே இழுத்துக்கொண்டார்கள். இரெண்டு மூன்று முறை முயற்சி செய்தும் , கூடயஇருந்த தொண்டர் முயற்சித்த போதும் அனுமதிக்கவில்லை . ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பெரியவா பாதத்தை அந்த பாதுகை அலங்கரித்து கொண்டிருந்தது.

மஹா பெரியவாளுடன் பல ஆண்டுகள் இருந்ததால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பாலு மாமா போன்றவர்கள் ஊகிக்க கூடியவர்களாகவே இருந்தார்கள். பாலு மாமா அம்மாவிடம் வந்து
“ஜெயம் பாதுகை உனக்கு தான் . எங்களை கழட்ட விடவில்லை பெரியவா. நீயே போய் கழட்டி கொள்” என்றார்.

அம்மா நடுங்கி பொய் விட்டாள்.

“ஐயய்யோ நான் மாட்டேன்” என்று சொல்லி விட்டார் .

“சரி நீ பெரியவா முன்னே போய் நில்லு . என்ன நடக்கிறது என பார்ப்போம்” என்று பாலு மாமா சொல்ல , தைரியத்தை வரவழைத்து கொண்டு , அம்மா பெரியவா முன் பொய் நின்றாள்.

என்ன ஆச்சரியம்

மஹா பெரியவா தன பாதங்களை சற்றே தூக்கி அம்மாவின் முன் நீட்டினார்கள். இதனை பார்த்து கொண்டிருந்த பாலு மாமா, “கழற்றி கொள்” என்று அம்மாவை தூண்டி விட அம்மாவும் மிகுந்த பயத்துடன் , பெரியவா பாதங்களில் இருந்து பாதுகைகளை கழற்றி கொண்டு , நமஸ்கரித்து விட்டு , மெல்ல நகர்ந்தாள் .

Periyava Padhukas

நாலடி சென்ற பின் கையில் இருந்த பாதுகையை பார்த்த அம்மா, ஏதோ சந்தேகத்துடன் பெரியவாளை திரும்பி பார்க்க, தன மௌனத்தை கலைத்து கொண்டு “இடது பாதம் தானே சின்னதா இருக்கு போ போ” என்று உரக்க சொன்னார்கள்.

அம்மாவிற்கு சுரீர் என்று அதற்க்கான விளக்கம், வெளிப்படையாக சொல்லாமலே புரிந்தது. கைகளில் இருந்த பாதுகைகளை பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றாள். நடந்து கொண்டிருந்த மௌன காட்சிகளை பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் அனைவரின் கண்களும் அம்மாவின் கைகளில் இருந்த மஹா பெரியவா பாதுகைகளிலேயே இருந்தது .

மகா பெரியவா ,விஸ்ராந்திக்கு (ஓய்வு ) சென்ற பின் , பாலு மாமா அம்மாவிடம் வந்து, “ஜெயம் என்ன விஷயம்” என கேட்க, அம்மா எதுவும் சொல்லாமல் தன் கைகளில் இருந்த பாதுகைகளை காண்பித்தாள். வலது பாதுகையை விட இடது பாதுகை அளவில் சற்று சிறியதாக இருந்தது ..

அதை பார்த்தவுடனே “அடடா வித்தியாசமாக இருக்கே, அவசரத்தில் நான் கவனிக்க வில்லை . வேணும்னா வேறு பாதுகை பெரியவா கிட்டே இருந்து வாங்கி தரட்டுமா?” என்று கேட்டார்.

உடனே அம்மா “என்னடா பாலு, இடது பாதம் தானே சின்னதா இருக்கு? என்று பெரியவா என்னிடம் கேட்டதை நீ கவனிக்கவில்லையா? தானே அர்த்தநாரீஸ்வரர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாரே , உனக்கு புரியலையா? அம்பாள் பாதம் ஸ்வாமியின் பாதத்தை விட சிறியது இல்லையா?” என்று அம்மா கேட்டதும் பாலு மாமா அந்த இடத்திலேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

இதில் விசேஷம் என்னவென்றால், அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகையில் இடது பாதுகை சிறியதாக இருந்தது மாத்திரம் இல்லை, பாதுகையில் கட்டை விரல் மாட்டி கொள்வதற்கு குமிழ்கள் இருக்கிறதல்லவா? அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகையில் வலது பாதுகையின் குமிஸ் சற்று கடினமாக. பெரியதாக ஆண்மையுடன் இருக்கும். இடது பாதுகையின் குமிஸ் சற்று நளினமாக சிறியதாக பெண்மையுடன் இருக்கும்.

இப்படி அமைந்தது , எங்கள் அம்மாவின் அசைக்க முடியாத பெரியவா பக்திக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். எங்கள் இல்லத்தில்( வெப்பத்துர் )பூஜையில் இருக்கிறது. கையில் கிடைத்ததை பாலு மாமா எடுத்து வந்திருந்தாலும் அவரை இவ்வாறு எடுத்துவர செய்தது அந்த பரப்ரம்மம் தானே!

சரணம் ! சரணம் ! குரு பாதுகா சரணம் ! மஹா பெரியவா சரணம்

திருமதி லலிதா சந்திரசேகர்
ஜெயம் பாட்டியின் மாட்டு பெண்
32, பெருமாள் கோவில் தெரு
வேப்பத்தூர் 612 105

காஞ்சி மஹானின்
பாதுகா மஹிமை என்ற புத்தகத்தில் இருந்து
எடுக்கப்பட்ட நகல்
சங்கரன் ராஜகோபாலன்.

-------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்
Periyava_chandramouliswarar_puja_color

Thursday, January 25, 2018

  

 

ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்"

Image may contain: 1 person, drawing

(படித்தால் புல்லரிக்கும்)


தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு பக்தர்....தினசரி மடத்திற்கு வரக்கூடியவர். அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த பெரியவா....

"ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக்
கேட்கிறார்.

"ரிடையர் ஆன பிறகு நான் மிகவும்
கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்.

"ஏண்டா?" பெரியவா கேட்கிறார்.

"யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில்கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார்.

அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு
கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்.

"உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட
என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர்.

பெரியவா அமைதியாகச் சொன்னார்....

"இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லையா? காலையில் எல்லாருக்கும் முன் எழுந்து,குளித்துவிட்டு
ஜெபம் செய்...அதைப் பார்க்கும் குடும்பத்தினர் உனக்கு பயபக்தியோடு காப்பி கொண்டு வந்து கொடுப்பார்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்....

பேரன்களுக்கு படிப்பு சொல்லிக் கொடு...அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போ....

அதோடு அவர்கள் இதைச் செய்ய வேண்டும்......அதைச் செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே....எதிர்பார்ப் புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்....

இல்லையென்றால் எல்லாமே தானாகவே நடக்கும்"

வேதனையோடு வந்தவர்க்கு தன்னிடம் உள்ள குறையும் தெரிந்தது.. அடுத்தபடியாக தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

" நீ மனதைத் தெளிவாக வைத்துக் கொள்...

பகவானை நினைத்துக் கொண்டே இரு...

இது வேண்டும்...அது வேண்டும் என்று ஆசைப்படாதே.. நீ வளர்த்த குழந்தைகள் உன்னை நிச்சயமாகக் கவனிப்பார்கள்" என்றார்.

வயோதிகத்தில் எல்லாருக்கும் வரும் மனவியாதி இது..

ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும்
அனுபவிக்கவும் முடியாது.....அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது...

காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ளவேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை.

பெரியவா உபதேசம் செய்து முடித்தவுடன்

அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக.

பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார்.

மனிதநேயத்தோடு எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பதற்கு இது ஒரு மகத்தான உதாரணமல்லவா.

Image may contain: 4 people, people smiling, drawing


HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

படங்கள் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்

Monday, January 22, 2018


*ரத  சப்தமி* 
 
24.01.2018 
புதன்கிழமை

ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக்   கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, '' இரு கொண்டுவருகிறேன்''  என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து  கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .  

''ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்''  என கோபித்து சாபமிட்டான்.

பிராமணனின்ரி சாபம் கேட்டு  அதிர்ச்சியடைந்த அதிதி  காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல,  ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே,  அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்'' என்று வாழ்த்த  ஒளி பிரகாசமான  சூரியன் மகனாக பிறந்தான்.  ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ரத சப்தமி அன்று  ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். 24.01.2018 பதன் அன்று  அதிகாலை  ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

ரத சப்தமி அன்று  தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும்.  . ஏழு மலைகளை  ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று  ஏழு வாகனங்களில் மலையப்பர்  சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


Image result for ரத சப்தமிஒரு கதை சொல்கிறேன்.
Image result for ரத சப்தமி


மகாபாரதப் போரில் அர்ஜுனனால் /அம்பையால்  வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட  அம்புப் படுக்கையில் காத்திருந்தார்.  உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை.  அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார்.

''வியாஸா,  நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று பீஷ்மர் கேட்டார்.

"பீஷ்மா, நீ மனோ வாக்கு  காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும்  பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம்.  அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.'' என்கிறார் வியாசர்.

சபை நடுவே பாஞ்சலியின் உடையை  துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் செய்த  மிகப்பெரிய தவறு என பீஷ்மர் உணர்ந்தார்.

''வியாஸா இதற்கு விமோசனம் எது ?

'பீஷ்மா  எப்பொழுது உன் தவறை  உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர்.

''இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், ''அர்க்கம்'' என்றால் சூரியன்.  இதை  தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை.அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்கஇலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்''.

நமது பாபங்கள் தீர  நாமும்  எருக்க இலையை என்று தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான்.
எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா?

Wednesday, January 17, 2018


தை பிறந்தது 
மேளமும் கொட்டியது


Image may contain: 1 person, drawing 


காஞ்சிப்பெரியவருக்கு 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன் என்பவர் கூறிய தகவல் நம்மை பரவசமடைய செய்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு கார்த்திகை மாதத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஒரு தம்பதி தங்கள் மகளுடன் காஞ்சிபுரம் வந்தனர். மகாபெரியவரை தரிசிக்க காத்திருந்தனர். அவர்கள் முறை வந்ததும் அந்த குடும்பத்தினர் பெரியவருக்கு நமஸ்காரம் செய்தனர்.

அவரைப் பார்த்து தயக்கத்துடன் நின்ற குடும்பத்தலைவரிடம், "என்ன விஷயம்?'' என்று பெரியவர் கேட்டார்.

"பெரியவா! இவள் எங்களுக்கு ஒரே மகள். இவளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. தாங்கள் அனுக்கிரகம் செய்து, திருமணம் விரைவில் நடக்க ஆசி வழங்க வேண்டும்,'' என்றார் குடும்பத்தலைவர்.

பெரியவர் அந்தப் பெண்ணிடம், "உன் பெயர் என்ன?'' என்றார்.

"ராதா' என்றாள் அவள்.

பெரியவர் அவளிடம், "உங்கள் ஊரில் பெருமாள் கோவில், சிவன் கோவிலெல்லாம் இருக்கிறதா?'' என்றார்.

"ஆம்' என்றாள் அவள்.

"சரி...அடுத்த மாதம் மார்கழி. தினமும் அதிகாலையில் நீராடிய பிறகு வீட்டு வாசலில் கோலம் போடு. பெருமாள் கோவிலுக்குப் போய் திருப்பாவை பாடு, சிவன் கோவிலுக்கு போய் திருவெம்பாவை பாடு. உனக்கு போக முடியாத நாட்கள் வருமில்லையா! அந்த நாட்களில் வீட்டில் இருந்தே அந்த பாடல்களை பாராயணம் செய்,'' என்று சொல்லி ஆசிர்வதித்தார்.


Image may contain: 1 person, drawing


ராதாவும் பெரியவர் சொன்னதை தவறாமல் கடைபிடித்தாள். தை மாதம் பிறந்தது. ஒரு நன்னாளில் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ராதாவின் பெற்றோர் கதவைத் திறந்தனர். 

வெளியே ஒரு பெரியவரும் அவரது மனைவியும் நின்றனர். அவர்கள் ராதாவைப் பெண் கேட்டு வந்துள்ள விபரம் தெரியவந்தது.

"எங்கள் பூர்வீகம் பாலக்காடு. உங்கள் பெண்ணைப் பற்றி அறிந்தோம். அவள் ஜாதகம் எங்கள் மகன் ஜாதகத்துக்கு பொருத்தமாயிருக்கிறது,'' என்றனர்.

திருமணப் பேச்சு நடந்தது. நிச்சயதார்த்த நாள், முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது. தை பிறந்ததும் ராதாவுக்கு வழியும் பிறந்து விட்டது.

திருமணத்துக்கு முன்னதாக பெரியவரிடம் ஆசி பெற ராதாவும், அவளது பெற்றோரும் காஞ்சிபுரம் வந்தனர். பெரியவரை அவர்கள் தரிசித்தனர்.

ராதாவிடம், "உன் பெயர் ராதா தானே! உனக்கு வரப்போகும் ஆத்துக்காரர் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

"கண்ணன்'' என்ற ராதாவிடம், "உன் மாமனார் பெயர் பரமேஸ்வரனா?'' என்றார்.

"ஆம்...என்றாள் ராதா ஆச்சரியமாய்.

"மாமனார் பெயர் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?' என்று அவள் ஆச்சரியப்பட்ட வேளையில், "நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,'' என்றார்.

இதைக் கேட்ட எல்லாருமே அதிசயித்துப் போனார்கள். முக்காலமும் உணர்ந்த ஞானிக்கு இவர்கள் பெயர் தெரியாதா என்ன!

 படங்கள் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்Related image

Thursday, January 11, 2018

 


பெரியவா  பாதமே சரணம்
Image may contain: drawing

கல்யாணம்,  மத்த விசேஷம், சாதாரணமாக  வீடுகளில் போஜனம்  எப்படி சாப்பிடுறோம்?''  என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா  பெரியவா.  மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.    மௌனமாக இருந்தார்கள்.   தெரியும் அவரே பதில் சொல்வார்  என்று. 

"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு.  தான்  என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா  ஏதோ ஏதோ  இருக்குமே  அது தான் '' தான் '' என்பது இல்லையா.  நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் ''  என்கிற  அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.அந்தத்  ''தானை''  கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த  கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால்   ஒரு தெளிவு வந்துடறது இல்லையா.  அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம்.    ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது. 

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர்.   மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?  

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. 

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது? 

நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும்  பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் 
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம  வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான்  அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார் மகாபெரியவா.

Image may contain: 1 person, smiling, standingபடம் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்

Thursday, January 4, 2018

அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள். ‘‘என்னது… மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’

  Image may contain: drawing

அன்றைய தினமும் அப்படித்தான். மகா பெரியவாளைத் தரிசிக்கக் கூடி இருந்த பக்தர்களுள் பலரது முகத்தில் ஏதோ எதிர்பார்ப்புகள். வேண்டுதல்கள்.

அவரவர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளைக் குருவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றில் பழங்கள், உலர்வகை பழங்கள், முந்திரி, வில்வ மற்றும் துளசி மாலைகளும் அடங்கும்.

பக்தர்களோடு பக்தராக அங்கே கலந்து ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தனர், நாராயணன் – வைதேகி தம்பதியர். சென்னையில் வசிப்பவர்கள். நாராயணன் உத்தியோகஸ்தர்.
நாராயணனது இடுப்பில் அவர்களது ஒண்ணரை வயது பெண் குழந்தை நிதர்சனா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது.

விழிகளை உருட்டி உருட்டி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். புதுப் புது மனிதர்களே எங்கும் தென்பட்டதால், குழந்தையின் முகத்தில் ஒரு மிரட்சி தெரிந்தது.

‘மகா பெரியவா அருகே செல்ல வேண்டும்… அந்த மகானிடம் தங்களது பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும்’ என்பது இந்தத் தம்பதியர்களின் விருப்பமாக இருந்தது.

ஆனால், அன்றைக்குக் கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தில் இவர்களால் ஒரு இஞ்ச் கூட முன்னேறிச் செல்ல முடியாத சூழ்நிலை.

எனவே, தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே மகா பெரியவாளின் திருமுக தரிசனத்தை எம்பி எம்பிப் பார்த்து கன்னத்தில் போட்டபடி இருந்தனர்.

‘‘ஏங்க, கூட்டம் இவ்ளோ இருக்கே… நிதர்சனாவைப் பெரியவாகிட்ட கூட்டிண்டு போய் காட்ட முடியுமாங்க? அந்த தெய்வத்தின் அனுக்ரஹப் பார்வை இவ மேல் திரும்புமாங்க?’’ என்று வைதேகி, நாராயணனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள்.

‘‘இன்னிக்கு அந்த மகானோட அனுக்ரஹம் கிடைக்கணும்னு நமக்கு விதி இருந்தா கிடைக்கும். பார்ப்போம், குருவோட பார்வை நம்ம மேல திரும்பறதானு…’’ என்று மகா பெரியவாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி உருக்கத்துடன் சொன்னார் நாராயணன்.

வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களது பிரார்த்தனையை மகானிடம் சென்று சொல்ல வேண்டும்… இதற்கு சாதகமாக ஒரு அருளாசி அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று இருந்ததே தவிர, தரிசனத்துக்காகக் காத்திருக்கும் குழந்தைகளுக்கோ, பெரியோர்களுக்கோ ஒரு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில் அனுப்ப வேண்டும் என்று யாருக்கும் கவலை இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை.

மகானின் சந்நிதி முன்னாலும், எல்லோரும் சுய நலத்துடன் காணப்பட்டார்கள்.

மகா பெரியவா அருகே வரும் பக்தகோடிகளை அவரது சிஷ்யர்கள் கட்டுப்படுத்தி, அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

வழக்கம்போல் மகா பெரியவா அங்கே திரண்டிருந்த பக்தகோடிகளைத் தன் அனுக்ரஹப் பார்வையால் ஒரு முறை அலசினார்.

தன்னைத் தரிசிக்க ஆத்மார்த்தமாக வந்திருக்கும் நாராயணன் – வைதேகி தம்பதியருக்கு அன்றைய தினம் யோகம் அடித்தது.

அடுத்த விநாடி ஒரு சிப்பந்தியை ஜாடை காட்டித் தன் அருகே அழைத்தார் மகா பெரியவா. குழந்தை நிதர்சனாவை இடுப்பில் சுமந்து கொண்டிருக்கும் நாராயணனை அடையாளம் காண்பித்து, ‘அவாளைக் கொஞ்சம் கிட்டக்கக் கூட்டிண்டு வா’ என்று சைகை செய்தார் மகான்.

அந்த சிப்பந்தி கூட்டத்தை விலக்கிக் கொண்டு நாலடி பாய்ச்சலில் ஓடிப் போய் நாராயணன் – வைதேகி தம்பதியரிடம் விஷயத்தைச் சொல்ல… அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள். ‘‘என்னது… மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’

‘ஆமா… வாங்கோ, சீக்கிரம். உங்களுக்குத்தான் உத்தரவு ஆகி இருக்கு.’’

கணவன், மனைவி இருவரின் விழியோரங்களும் நெகிழ்வின் காரணமாக கண்ணீர் சொரிந்தன.

குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் மகா பெரியவாளை வணங்கியபடியே நடந்தார் நாராயணன்.

‘‘வழி விடுங்கோ… வழி விடுங்கோ…’’ என்று உரக்கக் கூவிக் கொண்டே சிப்பந்தி முன்னால் செல்ல… பின்னால் நாராயணனும் வைதேகியும் நடந்தனர்.

மகா பெரியவா அருகே இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்திய சிப்பந்தி, பெரியவாளுக்குத் தகவல் தெரிவித்தார்.

கலியுக தெய்வத்தின் பார்வை தம்பதியின் மேல் விழுந்தது. ‘‘இடுப்புல வெச்சிண்டு இருக்காளே… அது அவாளோட குழந்தையானு கேளு…’’ – தன் பக்கத்தில் இருந்த சிப்பந்திக்கு பெரியவா உத்தரவு!

இந்தக் கேள்வி அப்படியே ஓவர் டூ தம்பதியர்.

வந்த பிரார்த்தனையே அதுதானே!

குழந்தையை முன்னிறுத்தித்தானே இன்றைக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள் இவர்கள்!

இவ எங்க கொழந்தைதான் பெரியவா…’’ – நாராயணன் நெக்குருகச் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல் வைதேகியும் கண்கள் கலங்க… பெரியவாளையும் நிதர்சனாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையைப் பார்த்துப் பெரியவா புன்னகைத்தார்.

குழந்தையும் பதிலுக்குப் புன்னகைத்தது.

அதன்பின் மகா பெரியவா தனக்கு அருகில் இருந்த ஒரு மூங்கில் தட்டில் இருந்து சிறிது உலர் திராட்சைகளை அள்ளி, சிப்பந்தியிடம் கொடுத்தார். ‘‘அந்தக் கொழந்தைகிட்ட கொடு.’’
திராட்சை இடம் மாறியது.

தன் பிஞ்சுக் கைகளை நீட்டியபடி அத்தனை திராட்சைகளையும் இரண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்க முற்பட்டது குழந்தை. அம்மாவும் இதற்கு உதவினார்.

மகா பெரியவா திருச்சந்நிதியிலேயே அந்த திராட்சைகளில் இருந்து இரண்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டது குழந்தை.

நாராயணனுக்கும் வைதேகிக்கும் கண்கள் குளமாயின என்று சொன்னால், அது சாதாரணம்.

இருவரும் குழந்தையை வைத்துக் கொண்டு தேம்புகிறார்கள்.

வந்த கார்யம் முடிந்து விட்டது. அந்தப் பரப்பிரம்மம் தன் வலக் கையை உயர்த்தி, இவர்களுக்கு விடை கொடுத்தது.

இத்தனை பக்தகோடிகள் கூடி இருக்கிற இடத்தில், மிகவும் ஆத்மார்த்தமாக வந்திருக்கிற ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துத் தன் அருகே வரவழைத்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து விட்டார் மகா பெரியவா.

அடுத்து, மகானது பார்வை கூட்டத்தைத் துழாவியது.


அடுத்த அதிர்ஷ்டம் யாருக்கோ?!

காஞ்சி ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தார்கள் நாராயணனும் வைதேகியும்!

இன்னமும் இடுப்பிலேயே இருந்தாள் நிதர்சனா!

இதுவரை அநேகமாக ஏழெட்டு திராட்சையை சாப்பிட்டிருப்பாள்.

மகா பெரியவா பிரசாதம் இன்னமும் அவள் கையில் இருந்தது.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சென்னைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள் மூவரும்.

மிதமான கூட்டத்தோடு பஸ் புறப்பட்டது.

மூவர் அமரக் கூடிய ஒரு இருக்கையில் ஜன்னல் ஓரமாக நிதர்சனாவும், அவளுக்கு அருகில் நாராயணனும் வைதேகியும் அமர்ந்தார்கள்.

பஸ் புறப்பட்டு ஐந்து நிமிடம் ஆகி இருக்கும்


Image may contain: 1 person, smiling, drawingதிடீரென நாராயணனின் கன்னத்தையும், சற்று எம்பி வைதேகியின் கன்னத்தையும் தடவி, ‘‘அம்மாமா… அப்பாபா…’’ என்று குரல் உயர்த்திக் குழந்தை பேச ஆரம்பித்தபோது, தாயும் தகப்பனும் போட்ட விநோதக் கூச்சலில் ஒரு விநாடி அதிர்ந்து சடன் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார் டிரைவர்.

‘என்ன பிரச்னையோ?’ என்று டிரைவர், தன் இருக்கையில் இருந்தே திரும்பிப் பார்க்க… கண்டக்டர் ஓடி வந்து, ‘‘என்னம்மா…’’ என்று கரிசனத்துடன் விசாரிக்க…
கண்களில் உடைப்பெடுத்துப் பெருகும் நீருடன் எல்லோரையும் பார்த்து வைதேகி சொன்னாள்: ‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க. எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க… ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது. இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன்.’’

பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் எழுந்து வந்து குழந்தையின் கன்னம் தொட்டுக் குதூகலித்தனர்.

ஆம்! நிதர்சனா பிறந்தது முதல் தற்போது வரை (ஒண்ணரை வயது) எந்த ஒரு வார்த்தையும் பேசியதில்லை.

வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை.

ஆனால், அத்தனையும் தாண்டி, ஒரு கலியுக தெய்வம் தனக்கு பிக்ஷையாக வந்த திராட்சையைக் கொண்டே இவர்களின் பிரச்னையைத் தீர்த்து விட்டது.

குடும்பத்துக்கே பிரசாதமாக வந்த திராட்சை குழந்தை நிதர்சனாவுக்கு மட்டுமில்லை.

நாராயணன் அவர் புரிந்து வரும் உத்தியோகத்தில் அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள். பிரமோஷன், சம்பள உயர்வு என்று எல்லாம் கிடைத்தன.

மகா பெரியவாளுக்கு சுமார் 97 வயது இருக்கும்போது நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று.

ராகவேந்திரரும், ஷீர்டி பாபாவும் காலங்களைக் கடந்தும் தங்களது பக்தர்களுக்கு – தங்களை நம்பியவர்களுக்கு அபயம் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நம் பக்கத்திலேயே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம் நாம்!

மகானின் திருச்சந்நிதி தேடி காஞ்சிக்கு ஒரு முறை போய் வாருங்கள்!

உங்கள் உதடுகள் பேச வேண்டாம். மனம் அவரோடு பேசட்டும்.

உணர்வுகளைப் புரிந்து கொள்வார். உள்ளத்தை அறிந்து கொள்வார்.

‘குருவே சரணம்’ என்று அவரது திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்.

உங்களை ஆசிர்வதித்து அருள அவர் தயாராக இருக்கிறார்.

கட்டுரையாளர்: பி. சுவாமிநாதன்..... Pitchai Iyer Swaminathan


Image may contain: drawing
மூன்று படங்களையும் வரைந்தவர்: திரு சுதன் காளிதாஸ்